இந்தோனேசியாவில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் படகில் தஞ்சம்

செவ்வாய் செப்டம்பர் 08, 2020

இந்தோனேசியாவின் ஏசெஹ் மாகாணத்தில் கடலில் 6 மாதங்களாக தத்தளித்து வந்ததாகக் கூறப்படும் சுமார் 300 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைந்திருக்கின்றனர். 

ரோஹிங்கியா அகதிகள் சென்ற மரப்படகினை ஏசெஹ் மாகாணத்தில் உள்ள Lhokseumawe கடல் பகுதி அருகே உள்ளூர் மீனவர்கள் கண்டனர் என இந்தோனேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. பின்பு, செப்டமர் 7ம் தேதி நடு இரவில் Ujung Blang கடற்கரையில் இந்த அகதிகள் கரை ஒதுங்கியிருக்கின்றனர். 

“சமீபத்திய கணக்குப்படி, 181 பெண்கள், 14 குழந்தைகள் உள்பட 297 ரோஹிங்கியாக்கள் மீட்கப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார் உள்ளூர் காவல்துறையின் தலைமை அதிகாரி Iptu Irwansya. 

கொரோனா சூழலுக்கு இடையில், தற்போது கரை ஒதுங்கியுள்ள அகதிகள் முகக்கவசங்களுடன் காணப்படுவதால் கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கருதப்படுகின்றது. 

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை இந்தோனேசிய அதிகாரிகளின் அச்சுறுத்தலையும் மீறி இந்தோனேசிய மீனவர்கள் மீட்டிருந்தனர். 

ரோஹிங்கியா நெருக்கடி குறித்து ஆராய்ந்து வரும் அராக்கன் திட்டத்தின் இயக்குனர் Chris Lewa, தற்போது தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியாக்கள் தெற்கு வங்கதேசத்திலிருந்து  கடந்த மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் வெளியேறி மலேசியா செல்ல முயன்றவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, மலேசியா மற்றும் தாய்லாந்து அரசுகள் எல்லையை வலுப்படுத்தியுள்ளதால் அந்நாடுகள் ரோஹிங்கியாக்களை நிராகரித்து வருகின்றன. 

இந்த நிலையில், ஆட்கடத்தல்காரர்கள் ரோஹிங்கியா அகதிகளை சிறிய படகுகளில் பிரித்து அனுப்புவதாகவும் அதில் சிலர் கடந்த ஜூன் மாதம் மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் கரை ஒதுங்கியதாகவும் கூறப்படுகின்றதுஹ். ஆனால், மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் கடலில் தத்தளித்த வந்த சூழலில் ஆட்கடத்தல்காரர்கள் அவர்களை கரையிறக்க அவர்களது குடும்பங்களிடம் பணம் கோரியிருக்கின்றனர்.

“எல்லோரும் பணம் செலுத்தாததால் கடத்தல்காரர்கள் அவர்களை இறக்குவதற்கு முயற்சிக்க விரும்பவில்லை. அவர்களை படகில் பணயக் கைதிகளாக வைத்திருந்திருக்கின்றனர்,” எனக் கூறியுள்ளார்.