இனவாதத்தில் ஊறியவர்களிடம் நீதியை எதிர்பார்க்கக் கூடாது

வியாழன் மே 30, 2019

தான் ஒரு சிங்களப் பேரினவாத ஜனாதிபதி என்பதை சிறீலங்காவின் அதியுயர் தலைவர் மைத்திரிபால சிறீசேன மிகத் தெளிவாக நிரூபித்துவிட்டார். கடந்த வாரம் பெளத்த மதக் கொண்டாட்டமான வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் 762 கைதிகள் சிறீலங்கா ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்டனர்.

சிறைச்சாலைகள் வரலாற்றில் அதிக கைதிகள் ஒரே தடவையில் விடுவிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென சிறீலங்காவின் நீதி அமைச்சு பெருமையுடன் அறிக்கையும் வெளியிட்டிருந்தது. ஆனால், இந்தக் கைதிகளில் தமிழ் அரசியல் கைதிகள் ஒருவர் கூட அடங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக,  10 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரன், தாயை இழந்த நிலையில் இவரது பிள்ளைகள் கடந்த 30.03.2018 அன்று கொழும்பில் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறீ சேனவை நேரில் சந்தித்து, தாயை இழந்து தந்தையும் சிறையில் அடைக்கப்பட்டு தாங்கள் அநாதரவாக நிற்பதாகவும், எனவே தமது தந்தையை விடுதலை செய்து தங்கள் எதிர்காலத்திற்கு உதவு மாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அப்போது, தமிழ், சிங்களப் புத்தாண்டு (2018) அன்று தந்தையை விடுதலை செய்வேன் என்று மைத்திரிபால சிறீசேனவினால் அந்தச் சிறிய பிள்ளைகளிடம் உறுதிமொழியும் வழங்கப்பட்டது. ஆனால், மைத்திரிபால சிறீசேனவினால் உறுதி மொழி வழங்கப்பட்டு 14 மாதங்கள் கடந்தும், இன்று வரையில் அனந்தசுதாகரனுக்கு விடுதலை கிடைக்கவில்லை.

இதனைவிட, ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வந்து, அதன் மூலம் ஆனந்தசுதாகரனின் விடுதலைக்கு உதவுவதாக இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலசந்திரன் அப்போது தமிழர் தரப்பிடம் உறுதியளித்திருந்தார். ஆனால் அவர்கள் மூலமும் இதுவரை ஆனந்தசுதாகரனின் விடுதலையும் சாத்தியமாகவில்லை. அந்தக் குழந்தைகளின் அநாதரவான வாழ்வும் இன்னும் முடிவிற்கு வரவில்லை. 

41

ஆயுள் தண்டனை கைதியான ஆனந்தசுதாகரனை பொது மன்னிப்பில் விடுதலை செய்தால், மற்றைய கைதிகளும் (தமிழ் அரசியல்) தங்களை விடுவிக்குமாறு கோரக்கூடும் என்பதனாலேயே அவரை விடுவிக்க முடியாதுள்ளதாக மைத்திரிபால சிறீசேன பின்னொரு நாளில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால், அதே மைத்திரிபால சிறீசேன, 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என்று நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட சிங்களப் பேரினவாத கடும்போக்கு வாதியயாருவரை கடந்த வாரம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பின் அடிப்படையில், எதிர்காலத்தில் மீண்டும் இதற்காக தண்டனை அனுபவிக்காத வகையில் விடுதலை செய்திருக்கின்றார். 

2016 ஜனவரி 25ம் திகதி, சிறீலங்காவின் ஹோமா கம நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, வழக்கின் வாதியான  பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவுக்கு சிங்கள பெளத்த மதவாத கடும்போக்கு அமைப்பான பொது பல சேனவின் பொதுச் செயலர் ஞானசார தேரர் மிரட்டி அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்திற்குள் வைத்து அச்சுறுத்தல் விடுத்ததுடன், நீதிமன்றத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் ஞானசார தேரர் செயற்பட்டதால், அப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதன்படி அந்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 ஆண்டுகள் அனுபவிக்கும் வகையில் 19 வருட சிறைத் தண்டனை கடந்த ஓகஸ்ட் 8ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றால் வழங்கப்பட்டது.

ஆனால், 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிக்கு, சுமார் 9 மாதங்களில் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருக்கின்றார். ஞானசார தேரரிற்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தால் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் குடும்பத்தவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என ஊடகவியலாளரின் மனைவி சந்தியா எக்னலிகொட ஏற்கனவே அச்சம் வெளியிட்டிருந்த நிலையிலும், பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுவித்தது மட்டுமல்ல, தனது இல்லத்திற்கும் அழைத்து அவரை நலம் விசாரித்து அனுப்பியிருக்கின்றார்.

இப்போது, ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளமையால் தனது குடும்பத்தவர்களின் உயிர்களுக்கு பாரதூரமான ஆபத்து ஏற்பட்டுள்ளது என ஊடகவியலாளரின் மனைவி சந்தியா எக்னலிகொட சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளதுடன், ஞானசார தேரர் சிறையிலிருக்கும்போதே அவரது ஆதரவாளர்கள் தன்னை அச்சுறுத்தி வந்துள்ளனர் எனவும் ஞானசாரர் விடுதலையான பின்னரும் சமூக ஊடகங்களில் இது தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன், அவர்கள் சட்டத்தை தம் கையில் எடுத்துச் செயற்படுவார்கள் என்றும் எனவே தமது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும் ரணிலிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனந்தசுதாகரனை விடுதலை செய்தால் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை. மாறாக தாயையும் இழந்து தந்தைçயும் பிரிந்து வாடும் அந்தக் குழந்தைகளுக்கு ஓர் ஆறுதல், ஒரு பாதுகாப்பு கிடைத்திருக்கும். ஆனால், ஆனந்தசுதாகரனையோ ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையோ விடுவிப்பதற்கு சிறீலங்காவின் சட்டங்கள் வளைந்து கொடுக்கவில்லை. அதேநேரம், ஞானசார தேரரை விடுவித்தால் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையிலும் அவரை விடுவிப்பதற்கு சிறீலங்காவின் சட்டங்கள் வளைந்து கொடுக்கின்றன.

சிங்களக் கடும்போக்குப் பேரினவாதிகளுக்காக வளையக் கூடிய சிறீலங்காவின் சட்டம், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கொஞ்சம் கூட மனிதாபிமானத்துடன் கூட வளைய முடியாது ஏன்?

இனவாதம் பேசக்கூடாது என சிங்களத் தலைமைகள் தொடர்ந்து கூச்சலிட்டு வருகின்றார்கள். சிறீலங்கா ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை இனவாதமன்றி வேறென்னவாக இருக்கமுடியும்?

சிங்களப் பேரினவாதச் சிந்தனையில் ஊறித்திளைத்துவிட்ட இவர்களிடம் தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதல்ல, எதிர்ப்பார்க்கக் கூடாது என்பதைத்தான் மைத்திரிபால சிறீசேனவின் ஞானசார தேரரின் விடுதலையும் - ஆனந்தசுதாகரனை விடுவிக்க மறுப்பதும் சொல்லி நிற்கின்றது.

நன்றி: ஈழமுரசு - ஆசிரியர் தலையங்கம்