இராணுவமயப்படுத்தும் தந்திரோபாயத்தை முன்னெடுக்கின்றது கோத்தாபய அரசாங்கம்!

செவ்வாய் சனவரி 14, 2020

சிறிலங்காவை   இராணுமயப்படுத்தும் நடவடிக்கையில் கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் தலைமையிலான புதிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சர்வதேச அமைப்புகள் தன்னை  விமர்சிப்பவர்களையும் மனித உரிமை பாதுகாவலர்களையும் இலக்குவைத்து சிறிலங்கா அரசாங்கம் அச்சம் தரும் ஒடுக்குமுறையை முன்னெடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளன.

சர்வதேச நீதிமற்றும் உண்மைக்கான திட்டம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பு ஆகியனவே இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

தேர்தலிற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்றுள்ள 69 சம்பவங்களை பதிவு செய்துள்ள இந்த அமைப்புகள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை பாதுகாவலர்கள் சட்டத்தரணிகள் வழக்குதாக்கல் செய்தவர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் அச்சுறுத்தல் மிரட்டல்களிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளன.

இந்த அச்சுறுத்தல்கள் சிலவேளைகளில் மிக மோசமானவையாக காணப்பட்டதால் சிலர்  சிறிலங்காவை  விட்டு வெளியேவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா ஜனாதிபதி தனது முன்னைய  படைத்தரப்பு சகாக்கள் பலரை முக்கிய பதவிகளிற்கு நியமித்துள்ளதன் மூலம் தனது ஆதிக்கத்தை எப்படி விரிவுபடுத்தியுள்ளார் அதிகளவிற்கு காவல்துறை மற்றும் புலனாய்வு பணிகளை இராணுவமயப்படுத்தியுள்ளர் எனவும் இந்த அறிக்கை விபரித்துள்ளது.

மோசடி உட்பட கடந்த கால குற்றங்களை விசாரணை செய்தவர்கள் அந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

பொறுப்புக்கூறலிற்கான எந்த நடவடிக்கையையும் நீக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உதவிகள் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்படாமலிருப்பதை சர்வதேச சமூகம் உறுதி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.