இராணுவத்தாரால் ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் தடுத்து நிறுத்தப்பட்டளர்!

புதன் ஜூன் 12, 2019

நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் உள்ளிட்ட தேரர் குழுவினர், மட்டக்களப்பில் அமைந்துள்ள சிரியா பல்கலைக்கழகத்துக்கு, நேற்று (11)  பிற்பகல் 2.30 மணியளவில் விஜ​யமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

எனினும் குறித்த குழுவினர் பல்கலைக்கழகத்துக்குள் உள்நுழையும் சந்தர்ப்பத்தில், வாயில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தாரால், ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், உள்நுழைவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டது.

காவல் துறை  தமக்கு அனுமதி வழங்கினால் மாத்திரமே   உள்நுழைய அனுமதி வழங்கப்படுமென இராணுவத்தினர், ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினருக்குத் தெரிவித்தனர். இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வருகைத்தந்த வாழைச்சேனை காவல் துறை  நிலையத்தின் பிரதி காவல் துறை  அத்தியட்சகர் ஜீ.எஸ் ஜயசுந்தரவும் அதற்கான அனுமதியை மறுத்துள்ளார். 

இதன்போது தான் மக்கள் பிரதிநிதியென்றும்  பல்கலைக்கழத்தைப் பார்வையிடுவதற்குத் தனக்கு உரிமையுண்டு என்றும் ரத்ன தேரர் காவல் துறைக்குத் தெரிவித்ததுடன்,    30 வருடங்களாகப் போராடி யுத்தத்தை நிறுத்தியது தீவிரவாதத்தை உருவாக்குவதற்காக அல்ல என்றும் தெரிவித்தார். மேலும் அவர், எனவே, பத்து நிமிடங்கள் மட்டும்  பல்கலைக்கழத்தைப் பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்குமாறு கோரியதுடன்,    பல்கலைக்கழத்தில் எந்தவொருப் பொருளுக்கும் சேதம் விளைவிக்கப்போவதில்லை என்றும் காவல் துறைக்கு உறுதிமொழி வழங்கினார்.

தேரருக்குப் பதிலளித்த பொலிஸ் அத்தியட்சகர்,    தாங்கள் உள்ளே சென்று உண்ணாவிரதம் இருக்கப்போவதில்லைத் தானே? என்றும்   புத்தர் சிலையொன்றை பிரதிஷ்ட்டை செய்யப்போவதில்லைத் தானே? என்றும் கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தேரர்,  தாம் உள்ளே சென்று புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்யப்போவதில்லை என்றும் பல்கலைக்கழகத்தைப் பார்வையிடுவதற்கு,  பத்து நிமிடங்கள்   தந்தால் மட்டும் போதும் என்றும் கூறினார்.

பின்னர் பிரதி காவல் துறை அத்தியட்சகர், உயரதிகாரியிடம் அனுமதியைப் பெற்றதன் பின்னர், ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினரை ஒன்றை மணித்தியாலங்களுக்குக் காக்க வைத்துள்ளனர்.  இதன்போது தேரருடன் வருகைத்தந்த  குழுவில் இருந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உட்பட ஏனைய பிக்குகளும் இணைந்து அத்துமீறி உள்நுழைய முயற்சி செய்தமையால், அங்கு பதற்ற நிலையொன்று ஏற்பட்டது.

பின்னர் அங்கு மீண்டும் வருகை தந்திருந்த ​பிரதி காவல் துறை  அத்தியட்சகர், ரத்ன தேரர், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பிரியந்த பத்திரண உள்ளிட்ட ஒருசிலரை  மட்டும், பல்கலைக்கழகத்தைப் பார்வையிடுவதற்கு அனுமதித்தனர்.