இரண்டாம் உலகப் போர்! 76 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த குண்டுகள்-

வியாழன் டிசம்பர் 02, 2021

ஜெர்மனி- இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள், தற்போது ஜெர்மனியில் இரயில் நிலைய பராமரிப்பு பணியின் போது பூமிக்கடியில் வெடித்து சிதறியதால் 4 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6 ஆண்டுகள் நடைபெற்ற போர்

இரண்டாம் உலகப் போர் செப்டம்பர் 1-ம் திகதி 1939 -ம் ஆண்டு தொடங்கி செப்டம்பர் 2-ம் திகதி 1945-ம் ஆண்டு வரை நடைபெற்றது. சுமார் 6 ஆண்டுகாலம் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப்படை அண்டை நாடான போலந்தை ஆக்கிரமிப்பதற்காக படையெடுத்தது.

ஜெர்மனி - இங்கிலாந்து

ஜெர்மனி தலைமையிலான ‘அச்சு நாடுகள்’ அணியும், இங்கிலாந்து தலைமையிலான ‘நேச நாடுகள்‘ அணியும் மோதின. ஜெர்மனி அணியில் இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்று இருந்தன.

நேச நாடுகள் அணியில் பிரான்ஸ், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகித்தன. அப்போது சர்வாதிகாரி முசோலினி இத்தாலியின் அதிபராக இருந்தார்.

முசோலினி சுட்டுக்கொலை

ஏப்ரல் 28-ந் திகதி 1945-ம் ஆண்டு முசோலினியையும், அவரது மனைவி கிளாரெட்டா பெடாசியையும் எதிர்ப்பாளர்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் இருவரையும் எதிர்ப்பாளர்கள் சுட்டுக் கொன்று, பிணங்களை பொது இடத்தில் தொங்கவிட்டனர்.

ஹிட்லர் தற்கொலை

ஏப்ரல் 30-ம் திகதி 1945-ம் ஆண்டு ரஷிய படைகள் ஜெர்மனி தலைநகர் பெர்லினை சுற்றி வளைத்தன. இதனால் தாம் தப்பி ஓட முடியாது என்ற முடிவுக்கு வந்த சர்வாதிகாரி ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படக்கூடாது என்று தனது காதலி ஈவா பிரவுனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு 40 மணி நேரத்துக்கு முன்புதான் தன்னுடைய காதலியை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் விண்ட்சர் சர்ச்சில்

ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து ஜெர்மனி 1945ம் ஆண்டு மே 8-ந் திகதி நேச நாட்டு படைகளிடம் சரண் அடைந்தது. இதனால் அன்றைய தினத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததாக இங்கிலாந்து பிரதமர் விண்ட்சர் சர்ச்சில் அறிவித்தார்.

76 ஆண்டுகள் பிறகு

இந்த நிலையில் இரண்டாம் உலக போர் முடிந்து 76 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் ஜெர்மனியில் வெடிக்காத வெடிகுண்டுகள் அவ்வபோது கண்டறியப்பட்டு வருகின்றன. மேலும் அங்கு, ஆண்டொன்றுக்கு 2000 டன் இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன.

ஜெர்மன் முனிச் நகர்

ஜெர்மனியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான முனிச் நகரில் டோனர்ஸ் பெர்கர்ப்ரூக் (Donnersbergerbrücke) இரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி இரயில் நிலையம் அருகே, துளையிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். 

வெடிக்காத குண்டு

அப்போது இரண்டாம் உலகக் போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில், 4 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடைபெற்ற பகுதியை காவல்துறையினர் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். மேலும் அங்கு இரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. 

உள்துறை அமைச்சர்

இதுகுறித்து பவேரியாவின் மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்தபோது; வெடிகுண்டு தோராயமாக 550 பவுண்டுகள் எடை இருக்கும் என்று கூறினார்.

கட்டுமான பணியின்போது

உலக போர் முடிந்து 76 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் ஜெர்மனியில் வெடிக்காத வெடிகுண்டுகள் அவ்வபோது கண்டறியப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கட்டுமானப் பணியின்போது கண்டறியப்படுகின்றன. 

ஆண்டுக்கு 2,000 டன்

ஜெர்மனியில் ஆண்டொன்றுக்கு 2000 டன் இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன, இந்நிலையில் ஜெர்மனியில் கட்டுமான வேலையை தொடங்கும் முன், கட்டுமான தளங்களில் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லை என சான்றளிக்கப்பட வேண்டும் என்றும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால் சுற்றியுள்ள மக்களை அப்புறப்படுத்தி விட்டு வெடிகுண்டை செயலிழக்க வேண்டுமென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.