இரண்டு மாதங்களுக்கு மேலாக கடற்றொழிலுக்குச் செல்ல அனுமதியில்லை!

திங்கள் அக்டோபர் 14, 2019

கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கடற்படையினர் கடற்றொழிலுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை எனவும் இதனால் தாம் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளதாகவும் தலைமன்னார் கிராம மீனவர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் பல வருடங்களாக தலைமன்னார் கடலிலுள்ள  தீடை பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

தற்போது குறித்த தீடை பகுதியில் தலைமன்னார் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தீடை பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல கடற்படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.
இதனால் தலைமன்னார் கிராம மீனவர்கள், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கடற்றொழிலுக்குச் செல்லாத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் 12 தீடைகள் காணப்படுகின்ற நிலையில் மீனவர்கள் தீடை பகுதிக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றமை வழமை.கடற்படையினரின் குறித்த நடவடிக்கையினால் தொடர்ந்து பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பாஸ் நடைமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், மீன் பிடி பாஸ் இருந்தால் மாத்திரமே தொழிலுக்கு செல்ல கடற்படை அனுமதிப்பதாக மீனவர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த பிரச்சினை தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே, கடற்படையினரின் குறித்த தடையை நீக்கி, ஏனைய கிராம மீனவர்கள் போன்று தலைமன்னார் கிராம மீனவர்களும் சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.