இரத்த மன்னிப்பு

ஞாயிறு அக்டோபர் 04, 2020

இரத்தங்களுக்கும்,

படு கொலைகளுக்கும்

பரீட்சயமானவர்கள் *நாங்கள்.

ஒழுகும் தாழ்வார மழைநீரைப் போல

குருதியைப் பார்த்துப் பார்த்து

வளர்ந்தன எங்கள் கண்கள்.

யுத்தத்தின் பெயரால்

இரத்தத்தை நாங்கள்

மிக மலிவாகச் சந்தைப்படுத்தினோம்.

இரத்தமென்பது

எங்களுக்கு எந்தப் புதினமாகவும் இருக்கவில்லை.

எங்களின் பத்திரிகைகளெல்லாம்

இரத்தங்களோடேயே வடிந்தன.

எங்களின் நாட்களெல்லாம்

படு கொலைகளோடேயே தொடங்கின.

எங்களின் இரவுகளில்

நட்சத்திரங்கள் உதிர்ந்ததைக் காட்டிலும்

மனிதர்கள் உதிர்ந்தார்கள்.

நாங்கள்

யுத்தத்தின் பெயரால்

இரத்தத்துக்கு பாவமன்னிப்பு வழங்கினோம்.

அள்ள அள்ளக் குறையாத

சிவப்பு இரத்தம் ஊறிப் பொழிந்தது.

நாங்கள் இரத்தம் பூக்கும்

தத்துப் பிள்ளைகளாக இருந்தோம்.

இறுதியில்

இனியொரு சமாதானத்துக்கு இடமின்றி

யுத்தமும் படு கொலை செய்யப்பட்டு விட்டது.

நாங்கள்

எங்களின் இரத்தக் கிண்ணங்களை

இன்னமும் கைவிடவேயில்லை.

அள்ளியள்ளிக் கொடுத்த

நம் இரத்தத்தின் வெறி

எங்களை ஆட்டுவிக்கிறது.

இன்னமும் கைவிடாமல்

நம்மைத் துரத்திக் கொண்டு வருகிறது

எமது இரத்தம்.

அறுவடைக் காலத்துக்கு முன்பே

நம் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுவிட்டன

என்று பிரகடனப்படுத்தப்பட்டு விட்ட பிறகும்

நாங்கள் குருதியின் தாகத்துடன்

உலகெங்கும் அலைகிறோம்.

எங்களைப் பிடித்துக் கொண்ட

இரத்தச் சனியன்

கழுத்தை இறுக்கி வைத்திருக்கிறது.

இதோ!

நாங்கள் சுத்தியலால்

எங்கள் சொந்தக் குழந்தைகளேயே

அடித்துக் கொல்கிறோம்.

கடவளே!

எங்களுக்கு இரத்த மன்னிப்பளியும்.

எங்களின் சனங்களுக்கு

இரத்தத்தின் பிடியிலிருந்து

யாராவது விடுதலை பெற்றுக் கொடுங்கள்.

- தீபிகா-

04.10.2020