இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி...

சனி ஜூன் 08, 2019

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பற்றி இவ்விடத்தில் எழுதும்போதெல்லாம் நீங்கள் கூட்ட மைப்புக்கு எதிரா? என்று யாரேனும் கேட்டு விடுவீர்களோ என்ற மனக் கிலேசம் எம்மிடம் இருக்கவே செய்கிறது.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் எதிரானவர்கள் அல்ல.ஆனால் அவர்களின் செயற்பாடு தமிழினத்துக்கு விரோதமாக இருக்கிறது என்பதுதான் எமக்கு மிகுந்த வேதனையையும் விரக்தியையும் தருகிறது.

இன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபட்ட நுட்பத்தை நாம் யதார்த்தமாகக் கண்டுள்ளோம்.

அவ்வாறான ஓர் ஒற்றுமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஏற்படுத்த முடியுமா என்ன?

இதுதவிர,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்தனை நடவடிக்கைகளும் தமிழினத்துக்குப் பாதகத்தை ஏற்படுத்துவதாக இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசுக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனக் கூறியது முதல் சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று  கூறியது வரையிலும் அரசாங்கத்துக்கான ஆதரவின்போது;தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல்போனவர்கள் விவகாரம்,காணி சுவீகரிப்பு என்பன தொடர்பில் நிபந்தனை விதிக்கத் தவறியமை வரையில் எல்லாமும் தவறானவையாகவே இருக்கின்றன.

இதற்கு மேலாக ஜனாதிபதி மைத்திரியை ஆதரித்தது எங்கள் தவறு.
வடக்கு முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனைக் கொண்டு வந்தது நாங்கள் விட்ட தவறு எனத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கூறுகின்ற கருத்துக்களும் அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையும் தமிழ் மக்களுக்குக் கேடு செய்வதாகும்.

இவைதான் என்றால் இந்தியாவுக்குச் சென்ற மாவை சேனாதிராசா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு இப்போது அவசரமா என்றால் இல்லவே இல்லை.இந்திய மத்திய அரசை மீண்டும் தனக்காக்கிக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி,மு.க.ஸ்டாலினுடன் கடுமையான எதிர்ப்பைக் கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியலில் எதிரானவராக இருக்கக்கூடிய ஸ்டாலினை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சந்தித்தது ஆரோக்கியமானதல்ல என்பதே நம் கருத்து.

முன்னர் ஒருமுறை கலைஞர் கருணாநிதியின் ஆதரவுடன் பிரதமர் மன்மோகன் சிங் மத்தியில் ஆட்சி அமைத்திருக்க,கருணாநிதிக்கு எதிராக இருந்த வை.கோபாலசாமியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தது.

இச்சந்திப்பால் ஆத்திரமடைந்த கலைஞர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்குடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தவிருந்த சந்திப்பை தடுத்து நிறுத்தினார்.

இந்த அனுபவங்கள் இருந்தும் மாவை சேனாதிராசா இப்போது மு.க.ஸ்டாலினைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் காரணமாக; கொழும்பில் பிரதமர் மோடியுடன் கூட்டமைப்பு நடத்தவுள்ள சந்திப்பை பலயீனமாக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆக, இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடும் வேலையில் கூட்டமைப்பு இப்போது இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை.

நன்றி வலம்புரி