இஸ்லாமிய பயங்கரவாதத்தை அழிப்பதற்கு உதவத் தயார்! மைத்திரிக்கு சிங்களக் கைக்கூலி கருணா தூது!

செவ்வாய் ஏப்ரல் 23, 2019

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த தமிழ்ப் பிரிவினைவாதப் போராட்டத்தை அழிப்பதற்கு உதவியது போல் இஸ்லாமிய பயங்கரவாதத்தை அழிப்பதற்கு உதவி புரியத் தான் தயாராக இருப்பதாக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறீசேனவிற்கு சிங்களக் கைக்கூலி கருணா தூது அனுப்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மைத்திரிபால சிறீசேனவிற்கும், மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான விரிசலை சரி செய்து, கடந்த ஐப்பசி மாதம் மகிந்தவை தற்காலிகமாக பிரதமர் பதவியில் அமர்த்துவதற்குக் காலாக இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவுடன் திங்கட்கிழமை பிற்பகல் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடும் பொழுதே தனது இந்த விருப்பத்தை சிங்களக் கைக்கூலி கருணா வெளியிட்டதாக எஸ்.பி.திசநாயக்கவிற்கு நெருக்கமான சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

 

‘‘பிரபாகரன் என்னைத் தடுத்திருக்காது விட்டால் கிழக்கில் முஸ்லிம் அடிப்படைவாதிகளை நான் அழித்திருப்பேன். காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் மீது நான் தாக்குதல் நடத்தியது பிரபாகரனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனது நடவடிக்கையால் முஸ்லிம் - தமிழ் உறவில் பாதிப்பு ஏற்படப் போகிறது என்று என்னைப் பிரபாகரன் திட்டினார். நான் கூறினேன், நாங்கள் அப்பாவிகளைத் தாக்கவில்லை. ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய அடிப்படைவாதிகளைத் தான் தாக்கினேன் என்று. அத்தோடு முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு என்னிடம் பிரபாகரன் கூறினார். அதன் பின்னரும் நாங்கள் ஏறாவூரில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் மீது தாக்குதல் நடத்தினோம். இதனால் பிரபாகரனுக்கு என் மேல் கடும் கோபம் ஏற்பட்டது.

 

அப்போது நான் கூறினேன், முஸ்லிம்கள் மீது போராளிகள் கோபமாக இருப்பதால் என்னால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று. அதன் பின் மாத்தையாவை கிழக்கிற்கு அனுப்பி நிலைமையைக் கட்டுப்படுத்த பிரபாகரன் முயற்சி செய்தார். மாத்தையாவிடம் நிலைமையை நானும், எனது போராளிகளும் விளக்கினார்கள். அதன் பின்னர் மாத்தையா யாழ்ப்பாணம் சென்று முஸ்லிம்களை வடக்கில் இருந்து வெளியேற்றுமாறு பிரபாகரனுக்கு அழுத்தம் கொடுத்தார். அப்படி இல்லை என்றால் கிழக்கில் உள்ள போராளிகள் கொந்தளிப்பார்கள் என்று பிரபாகரனிடம் மாத்தையா எச்சரித்தார். அதன் பின் தயக்கத்தோடு முஸ்லிம்களை வடக்கில் இருந்து வெளியேற்ற பிரபாகரன் இணங்கினார்.

 

அந்த நேரத்தில் முஸ்லிம்களுக்கு பிரேமதாசா ஆயுதங்களைக் கொடுத்திருக்காவிட்டால், அத்தோடு முஸ்லிம் அடிப்படைவாதத்தை நான் அழித்திருப்பேன். மாத்தையாவிற்கு மரண தண்டனை கொடுத்த பின்னர் மீண்டும் முஸ்லிம்கள் விடயத்தில் பிரபாகரனும், பாலசிங்கமும் தலையிட்டார்கள். ஹக்கீமுடன் பிரபாகரன் ஒப்பந்தம் செய்தார்.

 

நான் அதைக் கடுமையாக எதிர்த்தேன். அதன் பின்னர் தான் எனது கீழ் இயங்கிய கரிகாலன், விசு, துரை ஆகியோரை நீக்கி விட்டு கௌசல்யன் என்ற தமிழ்ச்செல்வனின் ஆளை மட்டக்களப்பு அரசியல் பொறுப்பாளராக பிரபாகரன் நியமித்தார். பிரபாகரனுக்கும் எனக்கும் பிரச்சினை ஏற்பட்டதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நான் முஸ்லிம்களிடம் வரி அறவிட்டது தான்.

 

இலங்கை சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் சொந்தமான நாடு. முஸ்லிம்கள் இடையில் வந்த வந்தேறு குடிகள். முஸ்லிம் பயங்கரவாத்தை அழிப்பற்கு சிங்களவர்களும், தமிழர்களும் ஒன்று சேர வேண்டும்.

 

கிழக்கில் முஸ்லிம் பயங்கரவாதிகளை அழிப்பதற்கு பாதுகாப்புப் படைகளுக்கு உதவி புரிவதற்கு எனது ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.’'

 

இவ்வாறு எஸ்.பி.திசநாயக்காவிடம் சிங்களக் கைக்கூலி கருணா கூறியதாக, அவருக்கு நெருக்கமான சிங்கள ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.