இஸ்லாமிய தீவிரவாதிகளைத் தேடி பிரான்ஸில் தொடரும் வேட்டை

ஞாயிறு அக்டோபர் 18, 2020

பிரான்ஸ் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.

பிரான்ஸ் பரிஸ் புறநகர் Les Yvelines பகுதியில் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த கல்லூரி ஆசிரியர் 47 வயதுடைய Samuel Paty படு கொலை சம்பந்தமாக 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை காவல் துறையினரின் பாதுகாப்பில் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளனர்.

Montigny Les Cormeilles-Evreux ஆகிய இடங்களில் வைத்து குறிப்பிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Evreux நகரத்தில் பயங்கரவாதியின் இல்லத்தில் வைத்து நாலு பேர் கைதாகியுள்ளனர்.

Montigny Les Cormeilles நகரில் வாழ்ந்து வரும் கல்லூரி மாணவரின் தந்தை ஒருவர் குறிப்பிட்ட கல்லூரி ஆசிரியரின் செயற்பாட்டை விமர்சித்து காணொலி – வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார்.

இவ்வாறு வீடியோ வெளியிட்ட அவரையும் அவருடன் இருந்த நண்பர் ஒருவரையும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவரது சகோதரி ஒருவர் 2014 ஆம் ஆண்டு முதல் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றார் என்றும் இவரை பிரான்ஸ் காவல்துறையினர் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதாகி உள்ள பத்துப்பேரில் மூவர் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்த மூவரும் பரிஸ் பரிஸ் புறநகர் பகுதிகளில் இருந்து கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒருவரான Abdul Hakim Sefri Oui என்பவர் அவரது மனைவியுடன் இருக்கையில் கைதானார்.

இவர் இஸ்லாமியத் தீவிரவாத்துடன் ஈடுபாடு கொண்டவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் செயற்பாட்டை மிகைப்படுத்தி, இஸ்லாமியர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துவதற்கு இவர் தூண்டுதலாக விளங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பிரான்ஸிலுள்ள இஸ்லாமிய இமாம்களின் ஆலோசனைக் கூடத்தின் உறுப்பினர் எனக் கூறிவரும் இந்நபர், ஆசிரியர் பற்றி பிறதொரு காணொலி – Video வைத் தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருந்தார்.

2010ல் இவர் Check hassine என்ற கழகத்தின் தலைவராக இருந்து Drancy நகரலுள்ள பள்ளிவாசல் முன்பாக ஒன்றுகூடல்களை நடத்திவந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

Levallois Perret யில் அமைந்துள்ள உள்துறை பாதுகாப்பு அமைப்பு DGSI

Direction Generale de la Securite interiere et de la Sous Direction antiterroriste – SDAD ஆகியவை யுடன் Versailles காவல் துறையினரும் இணைந்தே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட ஆசிரியருக்கு அஞ்சலி

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பான விசாரணை 96 மணித்தியாலங்கள் வரை நடைபெறும் அதன் பின்னரே நீதிபதி தீர்மானங்களை மேற்கொள்வார்.

நீதித்துறை தகவல்களின்படி கல்லூரி ஆசிரியரின் தலையை துண்டித்து கொலை செய்தவர் Abdoullakh Abouyezidvidch என்ற 18 வயதை உடைய tchétchène நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் Evreux நகரில் அவரது குடும்பத்தினருடன் வாழ்ந்து வரும் அகதி அந்தஸ்து உடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் ஆசிரியர் Charlie Hebdo பத்திரிகையில் வெளியான இஸ்லாமிய இறைத்தூதர் பற்றிய கேலிச் சித்திரத்தை காண்பித்து கற்பித்ததைப் பற்றி வெளியான காணொலியைப் பார்த்த பின்னரே இவர் கோபம் அடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியரைக் கொலை செய்தவர் தான் நிகழ்த்திய கொலையைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார்.

இந்தக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இவருக்கு யார் உதவினார்கள் என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் தேடுதல் நடத்தி வருகின்றனர்.

குறிப்பிட்ட தீவிரவாதியின் வதிவிடத்துக்கும் கொலை நிகழ்ந்த இடத்திற்கும் இடையில் 90 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

இவர் கொலை நடைபெற்ற இடத்துக்கு எவ்வாறு வந்து சேர்ந்தார் என்பது பற்றியும் கொலை நடைபெற்ற பின்னர் ஆசிரியரின் தலையை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் எவ்வாறு பரவ விட்டார் என்பது தொடர்பாகவும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் மாளிகை கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் மறைவிற்கு ஒக்டோபர் மாதம் 21ம் திகதி புதன்கிழமையன்று தேசிய ரீதியிலான மரியாதை அளிக்கப் படும் என அறிவித்துள்ளது.

கொலையுண்ட ஆசிரியருக்கு அவர் பணியாற்றிவந்த கல்லூரி முன்பாக அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஒக்ரோபர் மாதம் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரிஸ் Place de la Republique பகுதியில் பயங்கரவாதப் படுகொலையை கண்டித்தும் கல்லூரி ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் ஓர் ஒன்றுகூடல் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.