இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை ?

வியாழன் ஏப்ரல் 04, 2019

சிறீலங்காவிற்கு வழங்கிய நான்கு ஆண்டுகள் காலஅவகாசத்தால் எந்தவொரு பிரதிபலனும் இல்லாதபோதும், மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வழங்கிவிட்டது.

இந்தக் கால அவகாசத்தை வழங்காமல், இந்த விடயத்தில்  சர்வதேசம் நேரடியாகத் தலையிடவேண்டும் என தமிழினம் எவ்வளவோ வலியுறுத்தியும் போராடியும் வலுக்கட்டாயமாக சிறீலங்காவிற்கு இரண்டு ஆண்டுகளை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வழங்கியுள்ளது.

வழங்கப்பட்டுள்ள இந்தக் கால அவகாசத்தில் எதுவும் நடக்கப்போவதில்லை என்பது தமிழினத்திற்கு மிக உறுதியாகத் தெரியும். இதனை இப்போது சிறீலங்காவின் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பகிரங்கமாக அறிவித்தும் விட்டார்.

இந்தக் காலஅவகாசத்தில் ஐ.நா  மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியுள்ள மைத்திரிபால சிறிசேன, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பல அறிக்கைகள் தவறானவை என்றும் நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரான எந்தவொரு யோசனையையும் நிச்சயமாக நடைமுறைப்படுத்தமாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, பன்னாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறை அவசியம் என்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது குற்றத்தில் ஈடுபட்ட தாங்களே அதற்கான விசாரணைகளை நடத்துவோம் என்பது
தான் அவரது நிலைப்பாடு. ஆனால், குற்றவாளிகான இராணுவத்தினரையும் தளபதிகளையும் நீதிமன்றின் கூண்டில் நிறுத்தப்போவதில்லை என்பது அவரது இன்னொரு நிலைப்பாடு.

நீதி கிடைக்கப்போவதில்லை என்பது தெரிந்தும், கசாப்புக் கடைக்காரனிடம் கருணையை எதிர்பார்த்த ஆடுகளாக, ஏற்கனவே பலியயடுத்தவைகள் போக எஞ்சியுள்ள தமிழினம் மீண்டும் காத்துக்கிடப்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது.  

இந்தவேளையில், ‘ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்களைக் கொடுக்க வேண்டும்?’ என்று சுவாமி சுகபோதானந்தாவிடம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை பதிலாக அளித்ததுதான் நினைவுக்கு வருகின்றது.  

அது ஒரு கிராமம். சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று! காப்பாற்று! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக் கதறுகிறது.

உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன்! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன். என்னைக் காப்பாற்று... என்று கண்ணீர்விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்.

முதலை சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையே... இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, அதற்கென்ன செய்வது? இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை! என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான்,  முதலை சொல்வது மாதிரி, இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா? அதற்குப் பறவைகள், எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம், ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன.அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான் என்றன.

ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான். நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோன பின் எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான்.

முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம்,  இதுதான் வாழ்க்கை! என்றது கழுதை. சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். இல்லை! முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை!

முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல, முதலைக்குக் கோபம் வந்து விட்டது. சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல். பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய்? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவுபடுத்த, முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது.

அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே! ஓடிவிடு என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான். முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது அதன் நினைவுக்கு வந்தது! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது, புரிந்ததா? இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!

சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர, அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி, சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது... சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.

ஆனால் தமிழ் மக்கள் இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை என்று சமாதானமாகிவிட முடியாது.

தமிழினம் கொடுத்த விலைக்கும், இழந்த இழப்புக்களுக்கும் நீதி ஒன்றைப் பெற்றுக்கொண்டே ஆகவேண்டும். இந்த உலகத்தின் முன் அதற்கான போராட்டத்தை தமிழினம் தீவிரப்படுத்தியாகவேண்டும். அது நீதிக்கான போராட்டமாக மட்டும் இருந்துவிடக்கூடாது. இழந்த உரிமைகளை மீட்கும் விடுதலைக்கான போராட்டமாகவும் வீரியம் பெறவேண்டும். விடுதலையான மண்ணில் இருந்துகொண்டே தமிழினம் நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும். அந்த நீதியே நியாயமானதாகவும் இருக்கும்.

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு