இயேசு அழைக்கிறார் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை!

புதன் சனவரி 20, 2021

இயேசு அழைக்கிறார் கிறிஸ்துவ மதப் பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.

மறைந்த டி.ஜி.எஸ் தினகரனால் நிறுவப்பட்ட உலகளாவிய கிறிஸ்தவ பிரச்சார அமைப்பான, ‘ ஜீசஸ் கால்ஸ்’ நிறுவனத்தை இப்போது அவரது மகன் பால் தினகரன் நடத்தி வருகிறார். இதன் மூலம் கிறிஸ்துவ மதப் பிரச்சாரங்களை செய்து வருகிறார்.

இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் சக நிறுவனங்களாக காருண்யா கிறிஸ்டியன் பள்ளி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள கருண்யா பல்கலைக்கழகம் ஆகியவை இயங்கி வருகின்றன.

இந்நிலையில், வரி ஏய்ப்பு தவிர, ‘ஜீசஸ் கால்ஸ்’ தனக்கு கிடைத்த அனைத்து வெளிநாட்டு நிதிகளையும் வெளியிடவில்லை என்றும் முதலீடுகளை மறைத்து வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்போது இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் தொடர்புடைய 28 வளாகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைகளை முடித்தவுடன் எவ்வளவு ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் வரி ஏய்ப்பு பற்றி முழுமையான தகவல்கள் தெரியவரும் என்று வருமான வரி அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வருகின்றன.