ஜெனீவா நோக்கி சிங்களத்தின் அணிதிரள்வும் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியயும்!

புதன் பெப்ரவரி 05, 2020

ஈழத்தமிழர் வாழ்வில் மிகவும் இன்றியமையாததாக இணைந்திருக்கும் ‘ஜெனிவா திருவிழா’ களைகட்டத் தொடங்கியுள்ளது. 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் இன்று வரையான கடந்த 11 வருடமாக பெப்ரவரி இறுதி நாள்கள் தொடக்கம் மார்ச் மாதம் வரை இந்த திருவிழா பெரும் எழுச்சியை ஏற்படுத்தும்.

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழ்கின்ற தமிழர் மனங்களில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பின்னர் எல்லாமே பொய் என ஏமாற்றமடையச் செய்யும் திருவிழாவாக இது உருவாக்கம் பெற்றிருக்கின்றது.

ஆம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வருடாந்த அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. தமிழ் மக்களின் பல வருட கோரிக்கையான பன்னாடுகள் இணைந்த போர்க்குற்ற விசாரணை, பொறுப்புக்கூறல் என்பன இந்த வருடமும் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்படவிருக்கின்றன.

உலக நாடுகளில் ஏற்படும் பிணக்குகளை தீர்த்து மக்களுக்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்காக இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு அமைப்புக்களில் முக்கியமானது ஐ.நா மனித உரிமைகள் பேரவை.

உள்நாட்டில் ஏற்படும் பிணக்குகள், நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிணக்குகள் அதன்போது இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை விசாரணை செய்வதன் மூலம் இனிமேல் அவ்வாறானதொரு குற்றம் இடம்பெறாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆனால், தமிழர் தாயகத்தில் பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் சிறீலங்கா அரசும் அதன் படைகளும் நடத்திய தமிழின அழிப்பிற்கு மேற்படி அமைப்பு இதுவரை எந்தவித பரிகாரத்தையும் வழங்கவில்லை. உலகில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்த சிங்களப் படைகள் அதன்மூலம் தமிழர்களை கொத்துக்
கொத்தாக படுகொலை செய்தபோது மெளனமாக இருந்த அதே ஐ.நா இன்றுவரை மெளமாகவே இருக்கின்றது.

இந்த நிலையிலேயே எதிர்வரும் 24 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இந்த அமர்வின்போது ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் ஆண்டு அறிக்கை மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் பொதுச்செயலாளரின் அறிக்கைகள் சமர்பிக்கப்படவுள்ளன.

30-1 தீர்மானத்தின் பிரகாரம் சிறீலங்காவின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதன் பரிந்துரைகள் மற்றும் பிற செயன்முறை தொடர்பான முன்னேற்றத்தை மதிப்பிடுமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்காவின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் சிறீலங்கா அரசாங்கம்  இணை அனுசரணை வழங்கிய 40-1 தீர்மானம் தொடர்பாகவும் எழுத்து மூலமான அறிக்கையை வழங்குமாறும் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

அதன்படி, கடந்த வாரம் வெளியிடப்பட்ட மார்ச் அமர்வு தொடர்பான நிகழ்ச்சி நிரலில் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் (A / HRC / 43/19) என்ற இலக்க எழுத்து மூலமான அறிக்கையை சபை பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும் சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை அதற்கான பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் இந்த அமர்விலும் சாத்தியப்படாது என்றே எண்ணத்தோன்றுகின்றது. வழக்கம் போல இந்த வருடமும் கால அவகாசம் போன்ற ஒரு மாயத் தோற்றத்துடன் தமிழர்களை ஏமாற்றி, சிறீலங்கா விடயம் முற்றுப்பெறும்.
கடந்த ஐந்து வருடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை சிறீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது,

போர்க்குற்றங்களை இழைத்த தரப்பினர் மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறு பிரயத்தனங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதன் ஒரு அங்கமாக இவ்வருடம் தமிழினத் துரோகி கருணாவை மனித உரிமைகள் பேரவையில் களமிறக்குவதற்கு சிறீலங்காவின் புதிய ஜனாதிபதியும் போர்க்குற்றவாளியுமான கோத்தபாய ராஜபக்ச தீவிரம் காட்டி வருகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என ஐக்கிய நாடுகள் சபையைத் திசை திருப்புவதன் மூலம் தாங்கள் தப்பிக்க முடியும் என்ற உத்தியின் அடிப்படையில், புலிகள் 600 சிறீலங்காக் காவல்துறையினரைக் கொன்றனர் என ஐ.நாவில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறீலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் வழிநடத்தலில், விசேட அதிரடிப் படையின் முன்னாள் அதிகாரியான ஜெனட் விமல என்ற நபர் மூலம் ஐ.நாவில் மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழினத் துரோகி கருணா சாட்சியமளிக்க தூண்டப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, மேற்படி விடயம் தொடர்பாக கருணா பல இடங்களில் கூறியிருக்கின்றார். 600 காவல்துறையினரைக் கொன்றது விடுதலைப் புலிகளின் போர்க்குற்றம் எனவும் கருணா தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், தமிழர்களை வைத்தே தமிழர்களை அழிப்பதற்கான உத்தியை சிங்கள அரசாங்கம் மீண்டும் மீண்டும் மேற்கொள்கின்றது. காலத்திற்கு காலம் சிறீலங்காவில் ஆட்சி நடத்திய அரசாங்கங்கள் தமிழர்களை அழிப்பதற்கு தமிழர்களையே கோடரிக்காம்புகளாக பயன்படுத்தினர்.

அதேபோன்றே இந்தத்தடவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் துரோகி கருணா பயன்படுத்தப்படவுள்ளார்.

இதேபோன்று, தமிழ்த் தேசியத் துரோகப்பட்டியலில் உள்ள ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் மலையகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் தொண்டமான் போன்றோரும் ஜெனிவா செல்லும் சிறீலங்கா குழுவில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் 8 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச மேற்படி இருவரையும் அங்கு அழைத்துச் செல்லவிருக்கின்றார். இந்த பயணத்திற்கு வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தமிழின அழிப்பை நியாயப்படுத்துவதற்கான உத்தியே இது.

கடந்த காலங்களிலும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச போன்றோர் தமது வெளிநாட்டுப் பயணங்களின்போது ஒட்டுக்குழு டக்ளஸ் தேவானந்தாவை அழைத்துச் சென்று இன அழிப்பை நியாயப்படுத்தியிருந்தமையை தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

தமிழின அழிப்பை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நியாயப்படுத்தி தாங்கள் புனிதர்களாவதற்கு சிங்கள தேசம் ஓரணியில் திரண்டிருக்கின்ற நிலையில், பாதிக்கப்பட்ட தமிழர்கள் மட்டும் பல்வேறு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றனர்.

இது தமிழர்களுக்கான தீர்வை பின்னோக்கி நகர்த்துமே தவிர முன்னேற்றங்களை தராது.

ஈழத்தமிழர்களுக்காக உள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் கடந்த காலங்களிலம்  முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களே எமது கருத்தியலை வெளிப்படுத்த சிறந்த களங்களாக அமைந்தன. இன்று இரு தேசங்களிலும் இப் போராட்டங்கள் இல்லாமல் போய்விட்டன.

எனினும், சிறீலங்கா படைகளாலும் ஒட்டுக்குழுக்களாலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டிபல்வேறு அமைப்புக்கள் ஒன்றுதிரண்டு பிரித்தானியாவில் கடந்த வாரம் முன்னெடுத்த போராட்டத்தில் அதிகளவானனோர் கலந்துகொண்டிருந்தனர்.

இப்போராட்டம் ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் மனங்களுக்கு ஒத்தணம் கொடுத்திருக்கின்றது.  இது உலகின் காதுகளைத் தட்டியிருக்கும்.

இதுபோன்று, எதிர்வரும் ஐ.நா மனித உரிமை அமர்வு இடம்பெறும் காலத்தில் ஐ.நாவை நோக்கி புலம்பெயர் தேசங்களில் இருக்கும் ஈழத்தமிழர்களின் ஒருமித்த குரல் ஒலிக்கவேண்டும். புலம்பெயர் தேசங்களில் உள்ள ஈழத்தமிழர்களுக்கான அமைப்புக்கள் அனைத்தும் ஒருதடவையேனும் ஒன்றுபட்டு குரல்கொடுத்துப் பாருங்கள்.

அந்தக்குரல் சர்வதேசத்தின் காதுகளை சென்றடையும்.

தமிழர் தாயகத்தில் 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்றது தனிமனித போராட்டம் அல்ல. உலகெங்கும் பரந்துவாழும் ஈழத்தமிழர்களுக்கான போராட்டம். இப்போராட்டத்தின் மூலமே ஈழத்தமிழர்கள் பன்னாடுகளின் வாசலைத்தொட்டனர். எனவே, தாயக மக்களுக்கான முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் கலந்துகொள்வதற்கு எவரும் பின்நிற்கக்கூடாது.

முழு உலகையும் ஒரு கொடியின் கீழ் ஆட்சி செய்த தமிழினம் இன்று சுதந்திரமான மூன்று அடி மண் கூட இன்றி அலைவதை ஏன் பொறுத்துகொண்டிருக்கின்றீர்கள் விழிப்படையுங்கள். விரையுங்கள் ஐ.நாவை நோக்கி. உலகின் பல நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர் போராட்டங்கள் மூலம் தமக்கான விடுதலையை பெற்றிருக்கின்றனர்.

ஈழத்தமிழர்களுக்கு இது விதிவிலக்கு அல்ல.

ஒருபுறம் ஐ.நாவை நோக்கி போராட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்க, மறுபுறம் விடுதலை வேண்டிய எமது அறிவார்ந்த குரல் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் ஒலிக்கவேண்டும். ஈழத்தமிழர் சார்பான அமைப்புக்களின் பிரதிநிதிகள் அங்கு சென்று ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த வேண்டும். தற்போது கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் ஈழத்தமிழர்கள் ஒடுக்கப்படுவதை பட்டவர்த்தனமாகச் சுட்டிக்காட்டவேண்டும்.

இதுவே ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு. புலம்பெயர் தேசத்து உறவுகளே தயவு செய்து இதை நிறைவேற்றுங்கள்.

‘தாயகத்தில் இருந்து’
-காந்தரூபன்-

நன்றி: ஈழமுரசு