ஜெனீவாவில் நாளை தமிழர்களின் பேரணி!

ஞாயிறு மார்ச் 03, 2019

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை செவ்வாய்கிழமை வெளிவரவுள்ள நிலையில், நாளை திங்கட்கிழமை தமிழ் அமைப்புக்களால் நடத்தப்படும் பேரணி ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

நாளை நண்பகல் 2.00 மணிக்கு ஜெனீவா சென்றல் ரயில்வே முன்பாக ஆரம்பமாகும் பேரணி மனித உரிமைகள் பேரவை முன்றலை வந்தடையும். அங்கு இடம்பெறும் கூட்டத்தில் புலம்பெயர்ந்த மற்றும் தமிழகத்திலிருந்து வந்துள்ள தமிழ் உணர்வாளர்கள் பலரும் உரையாற்றுவார்கள்.

இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் கொடுக்கக்கூடாது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக இலங்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் பேரணி இடம்பெறுகின்றது.

சுவிஸ்லாந்திருந்து மட்டுமன்றி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் தமிழர்கள் இதற்காக செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.