ஜி.சாமிநாதனின் ஜாமீன் மனு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி!

புதன் சனவரி 29, 2020

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்த குற்றச்சாட்டின் பேரில் காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதனின் ஜாமீன் மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

நீதிபதி அஹ்மட் ஷாஹிர் முஹமட் சால்லே இம்முடிவை எடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி 24-ம் தேதி, அஹ்மத் ஷாஹிர் மற்றொரு உயர் நீதிமன்ற தீர்ப்பால் தான் கட்டுப்படுவதாக ஒப்புக்கொண்டார்.

அதாவது, சோஸ்மா சட்டத்தின் பிரிவு 13, பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளுக்கு ஜாமீன் விண்ணப்பங்களை நீதிமன்றம் பரிசீலிப்பதை தடை செய்வது சட்டவிரோதமானது மற்றும் மத்திய அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் கூறியிருந்தார்.

அதே தேதியில் (ஜன. 24), அஹ்மட் ஷாஹிர், சாமிநாதனுக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், ஜாமீன் விண்ணப்பம் குறித்த தீர்ப்பை வழங்க இன்றய தேதியை நிர்ணயித்திருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 29 அன்று, கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முஹமட் நஸ்லான் முஹமட் கசாலி, சோஸ்மாவின் 13-வது பிரிவு அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளித்தார்.

பாதுகாப்பு குறித்த குற்ற வழக்குகளில் ஜாமீன் வழங்க நீதிமன்றத்தின் அதிகாரத்தை சோஸ்மா அபகரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.