ஜனாஸாக்களை அடக்கும் விடயத்தில் அரசின் மனப்போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை

வியாழன் மார்ச் 04, 2021

அரசாங்கம் தனது பிடிவாதப் போக்கிலிருந்தும் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்துவரும் நிலைப்பாட்டிலிருந்தும் மாறாமல், கொவிட் – 19 தொற்றால் மரணிப்பதை காரணம் காட்டி ஜனாஸாக்கள் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யப்படுவதை தவிர்த்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விசனம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமைநடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், கொவிட் – 19 தொற்றினால் மரணிப்பவர்கள் எனக் கூறப்படுகின்ற ஜனாஸாக்களை இரணைதீவில் அடக்கம் செய்யத் தீர்மானித்திருப்பதாக குறிப்பிட்டதையிட்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்,


இலங்கையில் ஜனாஸாக்கள் எரியூட்டப்படுவதற்கு முஸ்லிம்கள் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்த பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுவாக, உலக நாடுகள் பலவும் குறிப்பாக, இஸ்லாமிய நாடுகளும் 57 நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் இனவாதப் போக்கினால் உந்தப்பட்டுள்ள முதலாவதாக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் விடாப்பிடி காரணமாக உலக சுகாதார நிறுவனத்தின் நல்லடக்கம் செய்யலாம் என்ற வழிகாட்டுதலுக்கு மாற்றமாகவும், அதற்கான துறைசார் சர்வதேச மருத்துவ நிபுணர்களின் ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளாமலும், இரண்டாவதாக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட வைரஸ் தொற்று நிபுணர்கள் அடங்கிய பேராசிரியர் ஜெனிபர் பெரேரா குழுவின் சாதகமான அறிக்கையைப் புறந்தள்ளியும் ஜனாஸாக்களை தொடர்ச்சியாக எரியூட்டி வரும் நிலையில் அழுத்தம் அதிகரித்ததால் அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் சுகாதார அமைச்சரூடாக வர்த்தமானியை வெளியிடும் நிர்ப்பந்தத்திற்கு அரசாங்கம் உள்ளானது.

இந்த வைரஸ் தொற்று நீரினால் பரவுவது இல்லை என்றும் அதனால் நிலத்தடி நீர் மாசடைவது இல்லை என்றும் விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் இருக்கத்தக்கதாகவும் உலகில் 197 நாடுகளில் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுகின்ற போதிலும், எரியூட்டுவதே ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டிலிருந்து அரசாங்கம் மாற்று நடவடிக்கை எடுப்பதற்கு அறவே விருப்பமின்றி காலத்தை வெறுமனே இழுத்தடித்துக் கொண்டே வந்ததால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பாரிய மன உளைச்சலுக்குள்ளானதோடு, சமூகமும் பெரிதும் விசனமடைந்துள்ளது.

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுவதால் நோய் பரவல் அதிகரித்து பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற பீதி உணர்வை இன்னமும் ஒரு சாரார் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்ற நிலையில் ஊடகங்களும் அதற்கு ஊது குழல்களாக இருந்து வருகின்றன என்பது கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியதாகும்.

ஒரு கட்டத்தில் அரசியல் உயர்மட்ட வேண்டுகோளையடுத்து, மாலைதீவு அரசாங்கம் இலங்கை ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய இணக்கம் தெரிவித்ததன் விளைவாக அங்கும் எதிர்ப்பலைகள் வலுவடைந்ததைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன் போது சுற்றுலாத் துறைக்கு பெயர் போன மாலைதீவு ‘பிண உல்லாசப் பயணப் பூமி’ யாக அங்குள்ள எதிர்ப்பாளர்களால் சித்திரிக்கப்படும் நிலைக்கு உள்ளாகியது.

இப்பொழுதும் அரசாங்கம் அதே அடிப்படையில் இன்னொரு தீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு முன்வந்திருப்பது மனப்போக்கில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.இந்த விவகாரம் ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறித்தெடுப்பது போல ஆகிவிட்டது.