ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விசேட அறிக்கை!

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும், அதன் கூட்டணிக்குள்ளும் முரண்பாடுகள் உள்ளதாக பல்வேறு தரப்பினரால் ஓழுங்கமைக்கப்பட்ட பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை இன்று (17) வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.  “ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பாரிய கூட்டணி அமைத்து ஐக்கிய தேசியக் கட்சி முகங்கொடுக்கும்.

அவ்வாறான கூட்டணியை உருவாக்குவதற்கான இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டது. அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே களமிறக்கப்படுவார்.

அதற்கமைய, தகுதியான வேட்பாளரை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி  மேற்கொண்டு வருகின்றது.

ஜனநாயக சம்பிரதாயங்களை பாதுகாத்து, கட்சியின் யாப்புக்கு அமைய வேட்பாளர் தெரிவுசெய்யப்படுவார்.

அவ்வாறு தெரிவுசெய்ப்பட்ட பின்னர், கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினருடன், எமது கொள்கைகளுடன் இணங்கும் ஏனைய அமைப்புகள் மற்றும் நபர்களின் ஆதரவுடன் எமது வேட்பாளரை வெற்றிப்பெற செய்வதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் முழுமையான முறையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்பதை நினைவுப்படுத்திக்கொள்கின்றேன்” என்று அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.