ஜனாதிபதி வேட்பாளராக, சஜித் பிரேமதாசதான் வரவேண்டுமாம்!

செவ்வாய் ஜூலை 09, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக, சஜித் பிரேமதாசதான் வரவேண்டுமென, அக்கட்சியின் ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள். மொட்டுச் சின்னத்தின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு, ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் சங்கீதக் கதிரைப் போட்டியாகவே இருக்கின்றது. ஆகவே, அக்கட்சியிலிருந்து யாரை வேட்பாளராகக் களமிறக்கினாலும், அவரைத் தோற்கடித்து வெல்லக்கூடிய ஆதரவு சஜித்துக்குத்தான் இருக்கிறதென, கிராமிய - நகர மட்டத்திலிருந்தும் கருத்து நிலவுகிறது. அதனால், சஜித் ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக இருந்தால் நல்லதென்று நானும் நினைக்கிறேன்” என்று, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

  பிர​த்தியேகச் செவ்வியின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கே: மரண தண்டனையை ​அமுலாக்குவதில், அமைச்சரவையில் ஜனாதிபதியுடன் வாக்குவாதப்பட்டுள்ளீர்களே...

நிதி அமைச்சர் என்ற ரீதியில், மரண தண்டனைக்கு எதிராக, அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தாக்கல் செய்துள்ளேன். இருப்பினும், ஜனாதிபதியினால் அது பற்றி ஆலோசிக்கப்பட்டதன் பின்னர், இவ்வார அமைச்சரவையில் அது குறித்துப் பேசப்படும். இவ்வாறானதொரு நிலையில், மரண தண்டனையை அமுல்படுத்துவதால், இலங்கை எதிர்நோக்கக்கூடிய பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி, அமைச்சரவையை அறிவுறுத்த வேண்டியது, நிதி அமைச்சர் என்ற ரீதியில் என்னுடைய பொறுப்பெனக் கூறியே, இதுபற்றிய கருத்துகளை, கடந்த அமைச்சரவையின் போது தெரிவித்திருந்தேன்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனரான காலஞ்சென்ற எஸ்.டபிள்யூ. பண்டாரநாயக்க, 1956ஆம் ஆண்டில் அரசாங்கத்தை உருவாக்கி, நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்த முதலாவது சட்டமூலமே, அப்போது அமுலில் இருந்த மரண தண்டனையை நீக்க வேண்டுமென்பதாகும். இந்தச் சட்டமூலத்தை, அப்போதைய பதில் நீதி அமைச்சராக இருந்த என்னுடைய தந்தை மஹாநாம சமரவீரவே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். மறுபுறத்தில், ஐக்கிய தேசியக் கட்சியும், மரண தண்டனைக்கு எதிராக எப்போதும் முன்னிலையான கட்சியாக அன்று முதல் இருந்து வருகிறது. ஐ.தே.கவின் நிறுவுனர் டீ.எஸ்.சேனாநாயக்க, 1926ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சியின் போதே, இதை நீக்க வேண்டுமென்ற யோசனையை, அரச மன்றச் சபைக்குக் கொண்டுவந்தவராவார்.

இவ்வாறாக, ஒருபுறம் ஐ.தே.க - சு.க அரசாங்கம் என்ற வகையிலும் மறுபுறம் பௌத்தர்கள் உள்ளிட்ட ஏனைய மதங்களில் கூறப்பட்டுள்ள மனிதப் படுகொலைக்கு எதிரான சமூகம் என்ற வகையிலும், மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு இணங்க முடியாது. அத்துடன், உலக நாடுகளில் பெரும்பாலானவை, மரண தண்டனையை அமுல்படுத்துவதிலிருந்து விலகி இருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில், மீண்டும் இலங்கையை பழைய நிலைமைக்குக் கொண்டு சென்றால், மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடுமென்று, அப்போது நான் விளக்கினேன்.

விசேடமாக, ஜீ.எஸ்.பி பிளஸ், அமெரிக்காவிடமிருந்து கிடைக்கவிருக்கின்ற மில்லேனியம் ஷெல்லேன்ஜ் கொம்பெக்ட் நிதி போன்றவற்றை, இலங்கை இழக்க நேரிடும். அதுமாத்திரமன்றி, இலங்கைக்கு எதிரான பல தடைகளையும் எதிர்நோக்க நேரிடும் என்றும் நான் கூறினேன். அப்போது ஜனா​திபதி, “இது பற்றிப் பிறகு பேசுவோம். இது, அமைச்சரவைக்குரிய விடயம் அல்ல. நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு நான் எடுத்த முடிவு” என்று கூறினார். இருப்பினும் நாம், நிறைவேற்று அதிகாரி என்ற ரீதியில் எடுக்கப்படும் முடிவுகளுக்கும், அமைச்சரவையின் அனுமதி இருந்தால் மேலும் சிறப்பென்று எடுத்துக்கூறினோம். அதன் பின்னரே, இந்தவார அமைச்சரவையில் இதுபற்றிப் பேசுவோமென முடிவெடுத்தோம்.

கே: மரண தண்டனை அமுல்படுத்துவதால், பொருளாதாரச் சிக்கல்களை விட, வேறு எவ்வாறான அழுத்தங்களை இந்த நாடு எதிர்நோக்குமென எதிர்பார்க்கிறீர்கள்?

பாதுகாப்பு ரீதியிலான ஒப்பந்தங்களை, எமது நாடும் ​ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வேறு நாடுகளும் செய்துகொண்டுள்ளன. இவற்றில், உளவுத்துறைசார் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பான ஒப்பந்தங்களும் உள்ளடங்குகின்றன. ஐ.எஸ் பயங்கர​வாதத்தின் நடவடிக்கைகள், உலக நாடுகளுக்குள் இன்று வியாபித்திருக்கின்றன. இலங்கையும் அவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியிருக்கின்ற இவ்வாறானதொரு சந்தர்ப்பங்களில், ஏனைய நாடுகளுடன் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்வதென்பது, மிக மிக முக்கியமாகிறது.

இன்றை சூழ்நிலையில், இந்த நாட்டின் பாதுகாப்பானது, சந்திக்குச் சந்தி துப்பாக்கிகளுடன் கூடிய பாதுகாப்புப் படையினரை நிறுத்துவதால் நிலைத்துவிடாது. இதைவிட, சூட்சுமமான முறையில், சர்வதேச ரீதியிலான நடவடிக்கையொன்று, இவ்வாறான பயங்கரவாதத்தை ஒழிக்கத் தேவைப்படுகின்றது. இவைகூட, இந்த மரண தண்டனை அமுலாக்கத்தால் சீர்குழைய வாய்ப்பிருக்கின்றன. இதனால், இவ்வாறான புனலாய்வுசார் ஒப்பந்தங்கள்கூட, இரத்துச் செய்யப்பட வாய்ப்புண்டு. அது, எமது நாட்டின் பாதுகாப்புக்கு, மிகப்பெரிய பின்னடைவாக மாறிவிடும்.

கே: உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பின்னர், நீங்கள் பயன்படுத்திய சில வார்த்தைகள், பெரும் சர்ச்கைக்குள்ளாகி உள்ளன. இதுபற்றிய உங்களுடைய விளக்கம் என்ன?

உண்மையில் சொல்லவேண்டிய விடயங்களைத்தான் நான் சொன்னேன். அவற்றை, மீண்டும் மீண்டும் சொல்லவும் தயங்கேன். ஐ.எஸ் பயங்கரவாதிகளினால், நாம் இலக்கு வைக்கப்பட்டோம். இருப்பினும், அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்று அடுத்த வாரமே, நாட்டைப் பழைய நிலைமைக்கு கொண்டுவர முடிந்தது. இதற்கு, பாதுகாப்புப் படையினர், பொலிஸாரின் நடவடிக்கைகளைப் போன்றே, சர்வதேச ஒத்துழைப்பும் வழிவகுத்தது. இதனால், ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கியுள்ளோம். இருப்பினும், அந்தப் பயங்கரவாதத்தைக் கொண்டு, இந்நாட்டுக்குள் இனவாதப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்க நினைத்தவர்களின் செயற்பாடுகள், இன்னமும் கைவிடப்படவில்லை. ஐ.எஸ் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தாலும், இந்நாட்டுக்குள் இருக்கின்ற சிங்கள இனவாதிகளைத் தோற்கடிப்பதில் சிரமம் இருக்கிறது.

1983 கறுப்பு ஜூலையை ஏற்படுத்தி, தமிழ் மக்கள் மீது இனவாதச் செயற்பாடுகளைக் கொட்டி, இலட்சக்கணக்கான மக்கள் இந்நாட்டை​விட்டு வெளியேறும்படி செய்ததைப் போன்று, மீண்டுமொரு கறுப்பு ஜூலை போன்றதொன்றை ஏற்படுத்தி, முஸ்லிம்களை இந்நாட்டை ​விட்டு வெ ளியேற்ற நினைக்கும் அளவுக்கு மனவளர்ச்சி குன்றியவர்கள், இந்நாட்டில் இருக்கின்றனர். அவ்வாறானவர்கள் தான், முஸ்லிம்களை இலக்கு வைத்து, சில பல வேலைகளைச் செய்து வருகின்றனர். இறுதியில், இந்தத் தாக்குதல்களுடன் எந்த வகையிலும் தொடர்புபடாத முஸ்லிம் அரசியல்வாதிகளையும் இலக்கு வைத்துச் செயற்படத் தொடங்கினார்கள். ஒட்டுமொத்தமாக, இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும், பயங்கரவாதியாகப் பார்க்கத் தொடங்கியுள்ளார்கள்.

விசேடமாக, விமல் வீரவன்ச போன்ற படிப்பறிவில்லாதவர்களே, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அப்படி ஏனையோருக்கு விரல் நீட்டும் விமல் வீரவன்சதான், 80களில் தெற்கில் வன்முறைகளை நடத்தியவர். இன்று அவர்கள், தங்களைத் தேச பக்தாளர்களாகக் காட்டிக்கொண்டு, சிங்கள - பௌத்த கொடிகளைப் போர்த்திக்கொண்டு, மற்றைவர்களைத் தோலுறிக்கப் பார்க்கிறார்கள். இவர்களுடன், புத்த புத்திரர்களாகத் தங்களைக் காட்டிகொள்பவர்களும் இணைந்துகொண்டு செயற்படுகிறார்கள்.

எங்களுக்கு சிறு வயது முதலே, பௌத்த தத்துவம்தான் கற்றுக்கொடுக்கப்பட்டது. அதில், பௌத்தம் என்பது மதமென்று போதிக்கப்படவில்லை. வாழ்வதற்கான முறைமையே போதிக்கப்பட்டது. அனைத்து உயிரினங்களும் துன்பமின்றி, ஆரோக்கியத்துடன் சிறப்பாக வாழட்டுமெனப் போதித்துக்கொண்டு, மறுபுறத்தில் முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும், அழிக்க வேண்டுமென நினைக்க, பௌத்தனால் ஒருபோதும் முடியாது. அதைச் சொல்லும்போது, சிலருக்கு வழிக்கிறது. இது, சிங்கள பௌத்த நாடல்ல என்று கூறும்போது, சிலருக்கு வலிக்கிறது. ஆனால், செய்ய வழியில்லை. அதுதான் உண்மை.

இது, சிங்கள பௌத்த நாடல்ல. இது, இலங்கையர்களின் நாடு. சிங்களவர்கள் பெரும்பான்மையாகவும் தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று, எல்லா இனத்தவர்களும் இங்கு இருக்கிறார்கள். அப்படியிருக்க, சிங்கள பௌத்த நாடென்று கூறினால், அப்போது தமிழர்களுக்கு நாடு இல்லையா, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கென்ற நாடு இல்லையா? அப்படியானால், தமிழர், முஸ்லிகள், கிறிஸ்தவர்களெல்லோரும் இலங்கையர்கள் இல்லையா? ஒட்டுமொத்தமாகக் கூறுவதாயின், இலங்கைக்குள் இரண்டாந்தரப் பிர​ஜையென்று ஒருவர் இருக்க முடியாது. இலங்கையர் என்பவருக்கு இருக்கவேண்டிய அனைத்து வரப்பிரசாதங்களும், அனைத்தின மக்களுக்கும் இருக்கவேண்டும். இதைத்தான் நான் அன்றும் சொன்னேன், இன்றும் சொல்கிறேன், நான் அ​ரசியலில் இருக்கும் வரை, என்றும் சொல்வேன்.

கே: ​உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்குப் பின்னர், பொருளாதார ரீதியில் இந்த நாடு, மீண்டும் பின்னோக்கிச் சென்றுள்ளதெனலாம். அதை ஈடுசெய்வதற்கு, எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறீர்கள்?

உண்மையைச் சொல்வதானால், உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்குப் பின்னர், இந்த நாடு பொருளாதார ரீதியில் பின்​னடைவைச் சந்திக்கவில்லை. விசேடமாக, 2015இல் நாம் இந்த நாட்டைப் பொறுப்பேற்கும்போது, வரலாற்றில் ஒருபோதும் இல்லாதளவுக்கான கடன் சுமையோடுதான் பொறுப்பேற்றோம். இருப்பினும், இது கடந்த அரசாங்கத்தின் கடன் என்று ஒதுக்கிவிடாது, இது இந்த நாட்டின் கடன் என்றே பொறுப்பேற்றுக்கொண்டோம். இதையும் தாண்டி, இந்த நாட்டைப் பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டுசென்று கொண்டிருக்கும்போது, பிரதான நான்கு சவால்களுக்கு முகங்கொடுக்கத் தொடங்கினோம்.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கு முன்னர், இரண்டு இயற்கை அனர்த்தங்களையும் இரண்டு செயற்கை (திட்டமிட்ட) பிரச்சினைகளுக்கும், இந்த அரசாங்கம் முகங்கொடுத்தது. கடும் வரட்சியொன்றைச் சந்தித்து, அதன்மூலம், கடும் பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டு முன்னகரும்போது, மாபெரும் ​வெள்ள அனர்த்தத்துக்கு முகங்கொடுத்தோம். அதையும் தாண்டிப் பயணித்துக்கொண்டு இருக்கும்போது, 2018 ஒக்டோபரில், அரசியல் சதிக்கு முகங்கொடுத்தோம். இந்தச் சதியின் 52 நாட்களில், நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிழுந்தது.

இந்தக் காலப்பகுதியில், இலங்கைக்கான தரநிலை குறைக்கப்பட்டது. ஐ.எம்.எப் ​ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து கிடைக்கவிருந்த சில வரப்பிரசாதங்கள் இடைநிறுத்தப்பட்டன. இலங்கை ரூபாயின் பெறுமதி, என்றுமில்லாதவாறு குறைவடைந்தது. அந்த 52 நாட்களில் மாத்திரம், 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள், இலங்கையிலிருந்து வெளியேறின. இது, இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட மாபெரும் பாதிப்பாகக் கருதப்பட்டது. இதையும் தாண்டி நாம் முன்னேறி வந்தோம். ஒரு கட்டத்தில், இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில், ஆசிய நாடுகளுடைய நாணயப் பெறுமதிகளில், முதல் நான்கு இடத்தில் இலங்கை ரூபாய் இடம்பிடித்தது. அதேசமயம், ஐ.எம்.எப்புடன் மீண்டும் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. இவ்வாறானதொரு நிலையில் தான், ஏப்ரல் 21இல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்களால், எமது நாட்டின் சுற்றுலாத்துறை தான், மாபெரும் பிரச்சினையை எதிர்கொண்டது. இந்தத் தாக்குதல்களுக்கு முன்னர், உலகில் சுற்றுலா செய்யக்கூடிய சிறந்த இடமாக, இலங்கையே முதலிடத்தைப் பெற்றிருந்தது. இதனால், இலங்கையை நோக்கி, எப்பொழுதும் இல்லாதவாறான சுற்றாலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது. மிரிஸ்ஸ, எல்ல போன்ற பகுதிகளிலிருந்த சாதாரண வீடுகளும், ஹோட்டல்களாக மாறி, வியாபாரத்தில் களைகட்டின. கிராமத்தவர்களும், டொலர்களில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் நிலைக்கு வந்திருந்தனர். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில்தான், இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்தது. இவ்வாறு குறைவடையும் ஒவ்வொரு 10 சதவீத உல்லாசப் பயணிகளாலும், இங்கை சுமார் 1 பில்லியன் ரூபாயை இழக்கின்றது.

இவ்வாறானதொரு நிலையிலிருந்தும், நாம் இன்று எழுந்து நிற்கின்றோம். எழுந்து பயணித்துக்கொண்டு இருக்கிறோம். தாக்குதல்களுக்கு இலக்கானாலும், இன்னமும் சுற்றுலா செல்லச் சிறந்த நாடு இலங்கை என்றே, லோங்க்லி ப்ளானட் சஞ்சிகை குறிப்பிட்டிருக்கிறது. இது, இலங்கை ஓர் அழகான நாடு என்பதால் மட்டுமன்றி, அனைத்து நாடுகளும் இணைந்து பாதுகாக்க வேண்டிய ஒரு சிறந்த நண்பன்தான் இலங்கை என்ற எண்ணம், இன்று உலக நாடுகள் மத்தியில் வலுத்திருப்பதும் ஒரு காரணமாகும். விசேடமாக, 52 நாட்கள் சதியிலிருந்து நாம் எப்படி மீண்டு வந்தோம் என்பது பற்றியும், உலகம் இன்று எம்மை வியப்பாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கு, நாடாளுமன்றத்தின் பலமும் நீதித்துறையின் பலமும் உறுதுணையாகி இருக்கின்றன. இக்காரணங்களால், நாம் எதிர்பார்த்த பொருளாதாரப் பின்னடைவு ஏற்படாதென எதிர்பார்க்கிறோம்.

கே: நீங்கள் என்னதான் சொன்னாலும், சாதாரண மக்கள், பொருளாதார ரீதியில் தொடர்ந்தும் பின்னடைவையே சந்தித்து வருகின்றனர். அன்றாட வாழ்க்கைக்குகூட கஷ்டப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறான மக்களுக்கு, நீங்கள் சொல்லும் ஜீ.எஸ்.பி பிளஸ்​ஸோ அல்லது அமெரிக்க உதவியோ விளங்காது. அவர்களுக்கு வேண்டும், அன்றாடம் உணரக்கூடிய சிறந்த பொருளாதாரத் திட்டங்களே... அப்படியிருக்க, அவர்களுக்கான உங்கள் அரசாங்கத்தின் திட்டங்கள்தான் என்ன?

நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். காரணம், மேற்கூறப்பட்டவாரான சிக்கல்களை நாம் தொடர்ந்து எதிர்நோக்கி வந்தாலும், பொதுமக்களுக்கான வரப்பிரசாதங்களை நாம் செய்துகொண்டுதான் வருகின்றோம். ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரக்கூடிய நிவாரணப் பொதி​யொன்றையும் வழங்கியுள்ளோம். மறுபுறம், அபிவிருத்தியை அவ்வாறே தொடர்ந்து மேற்கொண்டுவரும் அதேவேளை, அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை, இந்த ஆட்சிக் காலத்தில் அதிகரித்துள்ளோம். ஓய்வூதியர்கள், படைத் தரப்பினருக்கான கொடுப்பனவுகளை அதிகரித்துள்ளோம்.

அது மாத்திரமன்றி, பருத்தித்துறையிலிருந்து தெவுந்தர வரையிலும் கிராமத்துக்குக் கிராமம், கம்பெரலிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இதன் கீழ், ஒவ்வொரு பிரிவுக்கும், 300 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளோம். இவ்வாறாக, 48 ஆயிரம் கம்பெரலிய வேலைத்திட்டங்கள், நாடு முழுவதிலும் செயற்பட்டு வருகின்றன. தவிர, என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா திட்டத்தின் கீழ், கிராமத்தை அபிவிருத்தி செய்யும் அதேவேளை, இளம் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி வருகின்றோம். கடன்களுக்கான வட்டியை அரசாங்கம் செலுத்திக்கொண்டு, புதிய திட்டங்களுக்கான கடன்களையும் வழங்கி வருகின்றோம். அதேபோன்று, வடக்கிலுள்ள பெண்கள் எதிர்நோக்கிய மாபெரும் பிரச்சினையான நுன்கடன் திட்டத்தை, முற்றாகத் தீர்த்து வைத்துள்ளோம். அவர்கள் பெற்றிருந்த கடனை, அரசாங்கம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இப்படியாக, பொருளாதாரத்தை நாம் ஒருபுறம் நிலையானதாக்கி உள்ளோம்.

எவ்வாறாயினும், எண்ணிக்கையில் நாம் இந்த விடயங்களைக் கூறும்போது, சாதாரண மக்களால் அதைப் புரிந்துகொள்ள முடியாதுதான். 1950களுக்குப் பின்னர், எமது ஆரம்பக் கணக்குகளில் அதிகப்படியான உபரி இருக்கவில்லை. ஆனால் இவ்வருடத்தில், 1.6 உபரி​ காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் தான், மக்களுக்கான ​தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றோம்.

இன்னொரு விடயத்தை, அனைவரும் கவனிக்க வேண்டும். இந்த நாட்டில், எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்துதான், இப்போது எதையும் இலவசமாகவே எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். தொட்டில் முதல் சுடுகாடு வரையில், எல்லா விடயங்களையும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள நினைப்பது தவறு. கடந்த வாரத்தில், மேலதிகமாக 6 ஆயிரம் பேரை, சமுர்த்தியில் இணைத்துக்கொண்டுள்ளோம்.

தவிர, வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின்​ அனைத்துப் பகுதிகளிலிருந்தும், யுத்த காலத்தில் காணாமற்போனோருக்கான கொடுப்பனவை, வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டதைப் போன்று வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அவ்வாறு காணாமற்போனோருக்காக வழங்கப்படும் ஆவணத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்காக, மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாயை வழங்க, நாம் தயார். இப்படி நாம் எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கும்போது, இவற்றையும் உணர முடியவில்லை என்று சொல்வார்களேயானால், இதைவிட என்ன செய்ய வேண்டுமென, என்னால் உணர முடியாதுள்ளது. மறுபுறம், செலவு செய்வதைப்போன்று, அதற்கான பணத்தைத் தேடவும் வேண்டும். அதனால்தான், வருமான வரி விதிக்கிறோம். அதுவும், பணமில்லாத சாதாரண மக்களிடம், அதை நாம் விதிக்கவில்லை. இருக்கிறவர்களிடம்தான் விதிக்கிறோம். அதைப்பெற்று, இல்லாதவர்களுக்குக் கொடுக்கிறோம்.

கே: அரசாங்கத்துக்கு அடுத்துள்ள சவால்தான், அடுத்த தேர்தல். ஏற்கெனவே கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றியதாகக் கூறுகிறீர்கள். அடுத்த தேர்தல்களின் போதான உங்கள் தரப்பு உறுதிமொழிகள் என்னவாக இருக்கின்றன?

நாங்கள் பெற்றிருக்கின்ற சுதந்திரத்தை, தொடர்ந்தும் உறுதியாகப் பேணுவதுதான், மிகப்பெரிய சவாலாகவும் தேவையாகவும் இருக்கிறது. ஜனநாயகத்தை மீண்டும் பின்னோக்கி நகர்த்தாமல், தொடர்ந்தும் பேணிக்கொண்டு முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். 2015இல், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கிய நாம், ஜனநாயகம், நல்லிணக்கம் என்ற முப்பெரும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டுதான், பணிகளை ஆரம்பித்தோம். அதை, இன்று நாம் வென்றுள்ளோம் என்றே கூறவேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு, தனியார்த் துறையினர் தொழில்வாய்ப்பை வழங்குவார்களாயின், அவர்களுக்குரிய சம்பளத்தில் அரைவாசியை அரசாங்கம் செலுத்துவதற்கான யோசனையையும் முன்வைத்துள்ளோம். இவர்களையும், சமூகத்தில் இணைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே, இந்த யோசனை கொண்டுவரப்பட்டது. அதேபோன்று, வடக்கில் கணவர்மாரை இழந்த பெண்களுக்கான விசேட திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

பொருளாதார வலயங்களை உருவாக்கி வருகின்றோம். கூட்டுறவுத் திட்டத்தை மேம்படுத்தி வருகின்றோம். பனை அபிவிருத்தி நிதியமொன்றை ஏற்படுத்தியுள்ளோம். அதை, நாடாளுமன்றத்தில் சட்டமூலமாகக் கொண்டுவந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். அதுவும், ஜனாதிபதி நிதியம் போன்று மிகப்பெரிய நிதியமாக உருவாகும். அதற்கு, புலம்பெயர்ந்தவர்களும் நிதியுதவி செய்யலாம். அதன்மூலம், வடக்குக்கான அபிவிருத்திகளையும் செய்யலாம். இதனால், வடக்குக்கு செல்லும் நாம், அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்கூடாகப் பார்க்க முடியும்.

இவ்வாறாக, பாரிய வேலைத்திட்டங்களை செய்துகொண்டு இருக்கிறோம். இப்படியான பயணத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பது தான், அடுத்த தேர்தலின் போதான மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஊழல், மோசடிக்காரர்கள் தலைதூக்க முடியாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றிருக்கின்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். இனவாதிகள் தலைதூக்க இடமளிக்கக் கூடாது. இவ்வாறானதொரு பயணத்தை, ஐக்கிய தேசியக் கட்சியினால்தான் கொண்டுசெல்ல முடியும். காரணம், ஐ.தே.க என்பது, இலங்கையர்களின் கட்சியாகும். இனவாதத்தை நோக்கி மக்களை நகர்த்த முற்படும்போது, மத்தியஸ்தமாக இருந்து செயற்படக்கூடிய ஒரு கட்சிதான், இன்று இந்த நாட்டுக்குத் தேவைப்படுகிறதென்பதை, அனைவரும் உணர வேண்டும்.

கே: தமிழ் மக்களுக்காக அதைச் செய்தோம், இதைச் செய்துகொண்டு இருக்கிறோம் என்கிறீர்கள். ஆனால், இதுவரையில் அரசியல் தீர்வு விடயத்தை நோக்கி நீங்கள் நகரவில்லையே?

உண்மை. அரசியல் தீர்வைக் காண்பதில் தான், நாங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளோம். இதற்கு என்ன காரணமென்பதும், அனைவரும் அறிந்ததே. இந்த விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு காணப்படுகின்ற போதிலும், நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்றிக்கொள்வதில் சிக்கல் இருக்கின்றது.

ஆரம்பத்தில் நாம் எதிர்பார்த்தளவுக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்த நாட்டுக்குள், பலமானதொரு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்கிக்கொண்டு, வெற்றிகரமாகப் பயணிக்க வேண்டுமாயின், அதற்கு இந்த அரசியல் தீர்வும் முக்கியமாகும். அதனால், அதற்காக நாம் பாடுபடவேண்டும் என்ற உறுதிப்பாடோடுதான், அடுத்த தேர்தல்களில் களமிறங்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கே: இந்தப் பின்னடைவால், அடுத்த தேர்தல்களின் போது, தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளையும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவையும் இழக்க நேரிடும் அல்லவா?

உண்மையில், ஏன் தீர்வு கிட்டவில்லை என்பது பற்றி, எங்களை விடச் சிறப்பாகத் தமிழ், முஸ்லிம் கட்சிகள் அறிந்துள்ளன. அதனால், எதிர்காலத்தில் இவ்வாறான தீர்வை வழங்கக்கூடிய கட்சியும் ஐ.தே.க தான் என்பதையும், அக்கட்சியினர் அறிவர். ஐ.தே.கவினர் தனித் தீர்மானத்தை எடுக்கக்கூடிய பலத்தை எமக்கு வழங்குவார்களாயின், தீர்வையும் தயக்கமின்றி, எவரதும் துணையுமின்றி வழங்க, ஐ.தே.க கட்டாயம் நடவடிக்கை எடுக்கும்.

கே: பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ​ரூபாய் மேலதிகக் கொடுப்பனவை வழங்குவதில் உள்ள சிக்கல் என்ன? உறுதியளித்தவாறு, ஏன் அதை இன்னமும் வழங்காதிருக்கிறீர்கள்?

50 ரூபாய் கொடுப்பனவை, தனியார்த் துறையினர்தான் (தனியார்த் தோட்டங்கள்) வழங்க வேண்டும். அவ்வாறு, அவர்கள் கொடுக்க வேண்டிய பணத்தை, அரச திறைசேரியிலிருந்து வழங்க முடியாது. அதனால், தனியார்த் துறையினருடன் பேசிவிட்டு, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு, உரிய அமைச்சருக்கும் நாம் ஆலோசனை வழங்கியுள்ளோம். உரிய அமைச்சினூடாக இதைச் செய்துகொள்ள வேண்டுமென்றுதான், அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், அவ்வாறு வழங்குவதிலும் நடைமுறைச் சிக்கல் இருக்கின்றது.

கே: அரச ஊழியர்கள் விடயத்தில் நீங்கள் காட்டும் அக்கறை, தனியார்த் துறையினர் மீது இல்லையே?

உண்மை. இதனால் தனியார்த் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அரசாங்கம் என்ற ரீதியில், இப்படிச் செய்தால் நன்றாயிருக்கும் என்று, தனியார்த் துறையினருக்கு நாம் ஆலோசனைதான் வழங்க முடியு​மே தவிர, செய்துதான் ஆகவேண்டுமெனக் கட்டாயப்படுத்த முடியாது. அது, இங்கு மாத்திரமல்ல, எந்த நாட்டிலும் இதே நடைமுறைதான். எவ்வாறாயினும், தங்களுடைய ஊழியர்கள் குறித்து, தனியார்த் துறையினரும் இதைவிட அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் செயற்பட வேண்டும்.

கே: அமைச்சர் சஜித் பிரேமதாச தான், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டுமென்ற தோரணையில் அண்மையில் பேசியிருந்தீர்கள். ஏன் அப்படியொரு தீர்மானத்துக்கு வந்தீர்கள்?

இதை, நான் கூறவில்லை. இது என்னுடைய யோசனையும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களிடையே, இன்று இதுபற்றி பாரிய பேச்சு இருக்கின்றது. அவர்களிடையே, சஜித்தான் தெரிவாக இருக்கிறார். மொட்டுச் சின்னத்தின் ஜனாதிபதி வேட்பாளர், ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் சங்கீதக் கதிரைப் போட்டியாகவே இருக்கின்றது. காரணம், ராஜபக்ஷ குடும்பத்திலிருந்துதான், அவர்கள் ஒரு வேட்பாளரைக் களமிறக்கப் பார்க்கிறார்கள். இப்படி எவர் வந்தாலும், வெற்றிகொள்ளக்கூடிய நபர் சஜித் தான் என்ற எண்ணம், இன்று கிராமிய மற்றும் நகர மட்டத்தில் உருவாகியிருக்கிறது. அதைத்தான் நான் அன்று சொன்னேன்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது, எனக்கு எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு. அவருக்கான கௌரவத்தை, நான் எப்போதும் வழங்குவேன். அவருடைய தூரநோக்கு எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகத்தான், ஐ.தே.கவில் நான் இணைந்தேன். ஆகவே, சஜித் ஜனாதிபதியாகவும் ரணில், தொடர்ந்தும் பிரதமராக இருந்தால் நல்லதென்று, நானும் நினைக்கிறேன்.

கே: இறுதியாக, சீன சிகரெட்டுகளைச் சட்டரீதியாக்கினால், சட்டவிரோதமாகக் கொண்டுவருவது தடைபடும் என்று கூறியுள்ளீர்கள். இது, போதைப்பொருளுக்கும் பொருந்துமல்லவா?

சிகரெட்டுக்கும் போதைப்பொருளுக்கும், எந்தவொரு தொடர்பும் இல்லை. போதைப்பொருள் என்பது, இளைஞர்களை முற்றாக அழித்துவிடக்கூடியது. மிகப் பயங்கரமானது. சிகரெட்டையும், நுகராமல் இருப்பது நல்லது. ஆனால், இந்த உலகில் பெரும்பாலானவர்கள், இந்தச் சிகரட்டுக்கு அடிமையாகி உள்ளார்கள். இங்கு சீனத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றார்கள். இவர்களுக்காகவே, இரகசியமாகக் கொண்டுவரப்படுகின்றன. இதனால் தான், அவற்றைச் சட்டரீதியாக இறக்குமதி செய்ய எண்ணினேன். இதனால், அரசாங்கத்துக்கும் ஒரு வருமானம் கிடைக்கும். சட்டவிரோத நடவடிக்கைகளும் தடைபடும்.

 

  • மேனகா மூக்காண்டி