ஜனநாயக போர்வையில் ஆட்சி அரியாசனம்!

சனி நவம்பர் 23, 2019

தமக்கு வாக்களித்த சிங்கள பௌத்த மக்களுக்கு பகிரங்கமாக கோதபாய நன்றி கூறியது போன்று அதிகூடிய வாக்குகளை தமக்கு அள்ளிக்கொட்டிய தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சஜித் பிரேமதாச நன்றி கூறாது மௌனம் காப்பதன் மர்மம் என்ன? கோதபாயவை தோற்கடிக்க வேண்டுமென்றே இவர்கள் தமக்கு வாக்களித்தபடியால் எதற்காக இவர்களுக்கு நன்றிகூற வேண்டுமென நினைக்கிறாரா இந்த நன்றி கெட்ட அரசியல்வாதி?

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் கடந்த 16ஆம் திகதி நடைபெற்றுர ராஜபக்ச குடும்ப ஆட்சி ஐந்தாண்டுகளின் பின்னர் மீண்டும் அரியாசனத்தில் ஏறியுள்ளது.

எது நடக்கக்கூடாதென்று சிறுபான்மையின மக்கள் - முக்கியமாக வடக்கு கிழக்கு மக்கள் விரும்பினார்களோ அதுவேநடந்தேறிவிட்டது.

தேர்தல் முடிவடைந்து ஒரு வாரம் முடிவதற்குள் எதிர்பார்த்த அத்தனையும் அடுத்தடுத்து இடம்பெறுகின்றன. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த பத்தாண்டு காலமும் பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோதபாய ராஜபக்சவின் யுத்த பிராந்திய எடுபிடிகளாக செயற்பட்ட இராணுவ அதிகாரிகள் வெளிக்கிளம்ப ஆரம்பித்துள்ளனர்.


ஜெனிவாவில் இனப்படுகொலையாளியென அடையாளம் காட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா புதிய இராணுவத்தளபதியாக கோதபாயவுக்கு அனுசரணையாக மைத்திரிபால சிறிசேனவால் முற்கூட்டியே நியமிக்கப்பட்டு அப்பதவியில் தொடர்கிறார்.

வன்னி யுத்தத்தின்போது 53வது இராணுவப் பிரிவின் தளபதியாகவும் வன்னிப் படைத்தலைமையக பிரதம தளபதியாகவுமிருந்தமேஜர் ஜெனரல் கமல் குணரட்ணவை புதிய பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதி கோதபாய நியமித்துள்ளார். தமது ஜனாதிபதிபதவியோடு முப்படைகளின் தளபதி என்ற பதவியையும் தமக்குத்தாமே கோதபாய நியமனம் செய்திருப்பதையும் இங்கு கவனிக்கவேண்டும்.

என்னைத் தெரிவு செய்தவர்கள் சிங்கள பௌத்தவர்களே என்று இறுமாப்புடன் தெரிவித்த கோதபாய தமது பதவியேற்புக்கானஇடமாக அனுராதபுரத்தின் பிரதான பௌத்த விகாரையைத் தெரிந்தெடுத்ததையும் தம்மை எல்லாளனைக் கொலை செய்த துட்டகெமுனுவாக அடையாளப்படுத்தியதையும் அவரது வளர்கால நிகழ்ச்சி நிரலின் குறியீடாகவே பார்க்க வேண்டும்.

தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையாளர் அறிவிக்கும் நிகழ்வில் முன்வரிசையில் கோதபாயவுடன் பௌத்த பிக்குகளுக்கே இடமளிக்கப்பட்டது. அதேபோன்று அவரது பதவியேற்பு வைபவத்திலும் பிக்குகள் பட்டாளம் ஒன்று அமர்த்தப்பட்டிருந்தது.

இதுவரை காலமும் நடைபெற்ற இவ்வாறான அரச வைபவங்களில் ஆகக்குறைந்தது சர்வதேச சமூகத்தின் பார்வைக்காகவாவது இந்துமுஸ்லிம் கிறிஸ்தவ மதப்பிரமுகர்கள் அழைக்கப்பட்டு உரிய ஆசனத்தில் அமர வைப்பது வழக்கமாகவிருந்தது.

ஆனால் கோதபாயபின் அதிகாரபூர்வ வைபவங்களில் இது கடைப்பிடிக்கப்படவில்லை. ஆரம்பத்திலேயே இது சிங்கள பௌத்த தேசத்துக்கான நிகழ்வுகள் என்பதை அவர் அடையாளம் காட்டியுள்ளார்.

எனக்கு வாக்களிக்குமாறு தமிழர்களையும் முஸ்லிம்களையும் வேண்டினேன். ஆனால் அவர்கள் எனது கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். சிங்கள மக்களின் வாக்குகளே என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது. ஆயினும் எனக்குவாக்களிக்காதவர்களையும் இலங்கையர்களாக மதித்து நான் பணிபுரிவேன் என்று பதவியேற்பின்போது உறுதியளித்த கோதபாய நடைமுறையில் மற்றைய மதங்களை உதாசீனம் செய்து நடந்து கொண்டது அவரது உடலில் தெறிக்கும்; இராணுவ இரத்தத்தைதெரிய வைக்கிறது.

தமது தந்தையான டி.ஏ. ராஜபக்ச நினைவுமண்டபம் கட்டுவதற்கு 33.9 மில்லியன் ரூபாவை அரச நிதியில் மோசடி செய்த வழக்கை எதிர்கொண்டிருந்த கோதபாய கடந்த புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இப்போது ஜனாதிபதியாகி விட்டதால் அவருக்கு சட்டபூர்வமாக வழக்குகளிலிருந்து விலக்களிக்கப்படும் நியமத்தின் கீழ் விடுதலை வழங்கப்பட்டடது நீதிக்கு உட்பட்டதா என்ற கேள்வி பலரிடம் மௌனமாக எழுந்துள்ளது.

மகிந்த ஆட்சிக்காலத்தில் அவரது நிதியமைச்சின் செயலாளராகவிருந்து பல பில்லியன் ரூபாக்கள் மோசடியில் குற்றவாளியாகக் காணப்பட்டு பதவிகள் பறிக்கப்பட்டபின் சிங்கப்பூருக்கு தப்பியோடிய பி.பி.ஜெயசுந்தரரூபவ் இப்போது மீள அழைக்கப்பட்டு கோதபாயவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலக பிரதான அதிகாரியாகவிருந்த காமினி சேனரட்ண சமகாலத்தில் மக்கள்வங்கி இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் தலைவராகவிருந்து 11.5 பில்லியன் ரூபா மோசடியில் சிறைவைக்கப்பட்டிருந்தார். அந்த வழக்குகள் இன்னும் முடிவடையாத நிலையில் இப்போது பிரதமராகப் பதவியேற்றுள்ள மகிந்தவின்செயலாளராகப் பதவியேற்றுள்ளார்.

இவ்வாறு மீண்டும் பதவியேற்ற இன்னொருவர் பல மோசடிகளில் பிடிபட்டு பதவியிழந்திருந்த ஆட்டிகல என்பவர். இந்தநியமனங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ள ஆங்கில ஊடகமொன்று பழைய கொள்ளையர் மீண்டும் வருகின்றனர் (Oldcrooks are coming back) என்று எழுதியுள்ளது.

மகிந்த ஆட்சிக்கால கொள்ளைகள் மற்றும் மோசடிகள் பற்றிய விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வுப் பிரிவின் தலைமைப் பொலிஸ் அதிகாரியான சானி அபேசேகரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கோதபாய பதவி நீக்கம்செய்துள்ளார். 

புதிய ஜனாதிபதியின் முதலாவது அரசியல் பழிவாங்கலாக இதனைக் கொள்ளலாம். இலங்கையின் தேசிய கீதம் இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டுமென கோதபாய உத்தரவிட்டதாக ஒரு  செய்தி  வெளியானது. இதற்குப் பலத்த கண்டனம் கிளம்ப மறுகணமே அப்படியொரு உத்தரவையும் கோதபாய பிறப்பிக்கவில்லையென அடுத்த செய்தி வ்நதது.

இதுதான் மகிந்த பாணி. பிரச்சனைக்குரிய விடயங்களை ஊடகங்களுக்கு மெதுவாகக் கசிய விட்டுப்பார்ப்பார்கள். அதற்குஎதிர்ப்புக் கிளம்பினால் அப்படியாக எதுவும் தீர்மானிக்கப் பட வில்லையென்று அறிக்கை வாயிலாகத் தெரிவித்து தப்பி விடுவார்கள்.

தேசிய கீதம் விடயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது போலும். தற்போதைய அரசியல் நிலைவரத்தை இனி நோக்கலாம். கோதபாயவையும் மகிந்தவையும் தனித்தனியாகச் சந்தித்து
உரையாடியதையடுத்து  ரணில் விக்கிரமசிங்க தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் தமக்கு எதிராக சஜித் குழுவினர் தலைமைப் பதவியைப் பறிக்க ஆரம்பித்த புதிய நடவடிக்கைக்கு இதுவேஅவருக்கு சுலபமான வழியாகவிருந்தது.

ரணிலின் ராஜினாமாவைத் தொடர்ந்து இடைக்காலப் பிரதமராக தமது அண்ணர் மகிந்தவை கோதபாய நியமித்துள்ளார்.


1994இல் ஜனாதிபதியாகத் தெரிவான சந்திரிகா குமாரதுங்க முதல் நான்காண்டு காலத்துக்கு பிரதமராக தமது தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்கவை நியமித்ததை இப்போது நினைவிற் கொள்ளலாம்.

22ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் இடைக்கால அமைச்சரவை ஜனாதிபதி கோதபாய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி தற்போதைய நாடாளுமன்றத்தின் முதல் நான்கரை வருடங்கள் முடியும்போது அது கலைக்கப்பட்டு அடுத்த பொதுத்தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.


அதுவரை இடைக்கால எதிர்க்கட்சித் தலைவராக ரணில் பதவியேற்கும் வாய்ப்புண்டு. கட்சித் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொண்டால் ஆட்சியிலிருந்தால் பிரதமர் பதவி ஆட்சியிழந்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்ற சூத்திரம் ரணிலுக்குத் தெரியுமென இப்பத்தியில் சில வாரங்களுக்கு முன்னர் நான் குறிப்பிட்டது ஞாபகமிருக்கலாம். எனினும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித்துக்கு பெற்றுக்கொடுக்க உட்கட்சிப் போராட்டம் நடைபெறுவதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

இறுதியில் இத்தேர்தலின் வாக்களிப்பின்போது இலங்கைத் தேசம் இரு துருவங்களாக மாற்றம் பெற்றதை கவனிக்க வேண்டும். வடக்கு கிழக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சஜித்தே வெற்றி பெற்றார். ஆறாவது மாவட்டமாக நுவரெலியா சஜித்துக்கு கை கொடுத்தது. (1982ஆம் ஆண்டின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்திலேயே ஐக்கிய தேசியகட்சியின் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அதிகூடிய வாக்குகள் பெற்றதை இவ்வேளை நினைவு கூருவது பொருத்தமானது). மிகுதிப்பதினாறு மாவட்டங்களிலும் கோதபாயவே அமோக வெற்றி பெற்றார்.

வன்னி யுத்தக் காயத்திலிருந்தும் அதன் வலியிலிருந்தும் தமிழ் மக்கள் இன்னமும் ஆறவில்லையென்பதை  இத்தேர்தலின்வாக்களிப்பினூடாக தமிழர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். சஜித்துக்கு வாக்களிக்குமாறு கூட்டமைப்பு வேண்டியிருக்காவிடினும்ரூபவ் தமிழ் மக்கள் கோதபாய தோற்கடிக்கப்பட வேண்டுமென்பதற்காக சஜித்துக்கே வாக்களித்திருப்பர்என்பதே யதார்த்தம்.

இந்த வாக்களிப்பு தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கும் ஒரு பகுதி முக்கியமானது: தங்கள் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் உறுதியாக இருப்பதை ஒன்றுபட்டு இலங்கை ஆட்சியாளருக்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கும் ஒரு செய்தியாக தங்கள் வாக்குகள் வாயிலாகத்தெரிவித்துள்ளனர்ரூஙரழவ் என்ற சம்பந்தனின் கருத்தும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது.

ஆனால் இங்கு மனதை உறுத்தும் ஒரு விடயமுண்டு. தனக்கு வாக்களித்த சிங்கள பௌத்த மக்களுக்கு பகிரங்கமாக கோதபாய நன்றிகூறியது போன்று அதிகூடிய வாக்குகளை தமக்கு அள்ளிக்கொட்டிய தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சஜித் பிரேமதாச நன்றிகூறாது மௌனம் காப்பதன் மர்மம் என்ன?

கோதபாயவை தோற்கடிக்க வேண்டுமென்றே இவர்கள் தனக்கு வாக்களித்தபடியால் எதற்காக இவர்களுக்கு நன்றிகூற வேண்டுமென நினைக்கிறாரா இந்த நன்றிகெட்ட அரசியல்வாதி? அரசியல் என்றால் இதுதான் போலும்!

பனங்காட்டான்