ஜப்பானில் வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணிய தடை!

செவ்வாய் நவம்பர் 12, 2019

ஜப்பானில் வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணியக்கூடாது என அந்நாட்டு நிறுவனங்கள் கூறியுள்ளதையடுத்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

நவீன உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். காவல்துறை முதலான அனைத்து அரசுத்துறைகளிலும் பெண்கள் முக்கிய பதவி வகித்து வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் பெண்கள் அதிகளவில் நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் அலுவலக வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடிகள் அணிந்து வரக்கூடாது என ஜப்பான் நிறுவனங்கள் கடந்த வாரம் தடை விதித்தன. அதாவது கண்ணாடி அணியும் பெண்கள் ஒரு நட்பற்ற பார்வை தன்மை உடையவர்களாகவும், அவர்களின் முகத்தோற்றத்தை குறைப்பதாகவும் மற்றும் அவர்கள் அதிபுத்திசாலிகளாக தெரிவதாகவும் கூறி அலுவலகம் செல்லும் பெண்கள் கண்ணாடி அணிவதற்கு தடை விதித்தது.

இதற்கு நாடு முழுவதும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆண்கள் மட்டும் கண்ணாடி அணியலாம் ஆனால் பெண்கள் அணிய தடையா? என சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பெண்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

 

ஜப்பானில் போராடும் பெண்கள்

 

ஜப்பானில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றுபவர்கள் என்ன உடை அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஆண்கள் சூட் அணிந்து கருப்பு வண்ண ஷூக்களை அணிந்து வர வேண்டும். பெண்கள் ஸ்கர்ட்ஸ் எனப்படும் குட்டைப் பாவாடை அணிந்து ஹைஹீல்ஸ் அணிந்து வர வேண்டும்.

 

ஒவ்வொரு நாளும் ஹைஹீல்ஸ் அணிவதன் தீமைகள் குறித்து யூமி இஷிகாவா என்ற விளம்பர மாடல் கடந்த ஜனவரியில் முதலில் ட்வீட் வாயிலாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதையடுத்து நாடும் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.