ஜப்பானின் பிரதமராக ஷின்சோ அபேயின் விசுவாசி யோஷிஹைட் சுகா

செவ்வாய் செப்டம்பர் 15, 2020

ஜப்பானில் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக, ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியில்  நடந்த வாக்கெடுப்பில் யோஷிஹைட் சுகா வெற்றி பெற்றார்.

ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்சோ அபே, தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனினும் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியில் இருந்து புதிய பிரதமரை பாராளுமன்றம் தேர்வு செய்யும் வரை பதவியில் நீடிப்பதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் வெளியுறவு மந்திரி பமியோ கிஷிடா, முன்னாள் ராணுவ மந்திரி ஷிகெரு இஷிபா மற்றும் ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளரும், ஷின்சோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா ஆகியோர் பிரதமர் போட்டிக்கான களத்தில் இருந்தனர்.

இவர்கள் 3 பேரில் யோஷிஹைட் சுகாவுக்கு ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியினரிடையே செல்வாக்கு இருப்பதால் அவர் பிரதமராகத் தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருந்தது.

ஜப்பானைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பை வகிக்கும் நபரே நாட்டின் பிரதமராகவும் இருப்பார். அந்த வகையில் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், யோஷிஹைட் சுகா 377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் விரைவில் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

முன்னாள் வெளியுறவு மந்திரி பமியோ கிஷிடா 89 வாக்குகளும், முன்னாள் ராணுவ மந்திரி ஷிகெரு இஷிபா 68 வாக்குகளும் பெற்றனர்.

ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் ஆட்சி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடையும் நிலையில், இன்று தேர்வு செய்யப்பட்டுள்ள யோஷிஹைட் சுகா ஓர் ஆண்டுக்கு கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துவார்.