'கைதிகளைப்போல வாழுறோம்!”

திங்கள் அக்டோபர் 11, 2021

எங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்காது. மெட்ரோ சிட்டிங்களுக்கு போயி தனியார் கம்பெனிகள்லையும் வேலை செய்ய முடியாது. சித்தாளாவோ, பெயிண்டராவோத்தான போகப்போறேன். அதுக்கு ஏன் நான் படிக்கனும்னு எங்க புள்ளைங்க கேக்கும்போது நெஞ்சு கனத்துப் போகுது” -இலங்கை தமிழர்கள்

“இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் இனி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும். இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்லர். அவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம்” என்று சட்டப்பேரவையில் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், 110 விதியின் கீழ் அவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்திருக்கிறார். முதல்வரின் இந்த அறிவிப்பு இலங்கைத் தமிழர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிய அவர்களின் முகாம்களுக்குச் சென்றோம். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கீழ்ப்புத்துப்பட்டு முகாமுக்குச் சென்றோம். புதுச்சேரி – சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கிழக்கு நோக்கி 300 மீட்டர் தூரத்தில் தனித்துத் தெரிகின்றன அந்த குடியிருப்புகள். தென்னங்கீத்துகளாலும், அரசியல் கட்சிகளின் பேனர்களாலும் அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவர் நம்மை வரவேற்றன.

கடந்த 30 வருடமாக முகாமில் வசித்துவரும் லோகநாயகியிடம் பேசினோம்.“1990-ல் இந்தியாவுக்கு அகதியளா வந்தோம். அன்று ஆட்சியில இருந்த கலைஞர்தான் 22 போட்டுகளை அனுப்பி ராமேஸ்வரம் வழியா எங்களையெல்லாம் தமிழ்நாட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தாரு. அதுலதான் நானும் வந்தேன். விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் முயற்சியால அகதிங்கறத நீக்கி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று முதல்வர் அறிவித்திருப்பது எங்களுக்கு ஒரு நல்ல சொல்லாயிருக்குது.

எங்களின் 30 ஆண்டுகால மன உளைச்சலுக்கு முதல்வரய்யா மருந்து தடவியிருக்காரு. வான் வழியாக வந்தால் முக்கால் மணி நேரம். கடல் வழியா வந்தால் மூனு மணி நேரம். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயுள்ள நேரம் அவ்வளவுதான். அப்படி இருந்தும் நாங்க இங்க அகதியளா இருப்பது எங்களுக்கு மன உளைச்சல்தான். மத்திய, மாநில அரசுகள் அதை கவனத்துல எடுத்துக்கிட்டு எங்களுக்கு இந்த நாட்டு உரிமையைத் தரணும். ஏன்னா நல்லாத் தெரியும் இலங்கைல இப்போ ராயபக்‌ஷேதான் ஆட்சியில இருக்காரு. அதனால் எங்களை அங்கே குடைஞ்செடுக்கறதுக்கு தயாராகத்தானிருப்பார்கள்.

இலங்கை தமிழர்கள்மறுவாழ்வு முகாம்

திரும்பவும் நாங்கள் அங்க போறதாயிருந்தால், முப்பது வருசம் அகதியளா இங்க தப்ப வச்ச உயிரை அங்க கொண்டு போயி குடுக்கற மாதிரிதான் இருக்கும். நாங்கள் சட்டவிரோதமாக நுழைந்தோமென்று சட்டசபையில் பேசுகிறார்கள். உயிரைத் தப்ப வைக்க பக்கத்து நாட்டுக்குத்தானே வந்திருக்கறோம்? சட்ட விரோதமாக நாங்கள் வரயில்லையே? கனடாவுக்குப் போன என்னுடைய சிஸ்டர் அஞ்சு வருஷத்துல சிட்டிசன். ஆனா எங்க தாய் நாடான இந்தியாவுல 30 வருஷமா நாங்க அகதியளாத்தான் இருக்கோம். எங்களுக்கு எல்லா சலுகைகளையும் செய்திருக்கும் ஸ்டாலின் ஐயா குடியுரிமையும் பெற்றுத் தரணும்.
.
அதேபோல ஒவ்வொரு மாசமும் எங்களை சிறைக் கைதிங்க மாதிரி வெய்யில்ல மணிக்கணக்கா நிக்கவச்சி சோதனை பண்றாங்க. வேலைக்குப் போயிருந்தாலும் அவங்க கூப்பிடற நேரத்துல அங்க நிக்கலைன்னா எங்க குடும்ப அட்டையை நீக்கிடுவாங்க. அதுக்கப்புறம் அரசோட உதவிகளும் எங்களுக்குக் கிடைக்காது. மறுபடியும் குடும்ப அட்டையை சேர்க்கணும்னா மெட்ராஸ்க்கு போயிட்டு வரணும். இதுனால எங்க புள்ளைங்க வெளில செஞ்சிக்கிட்டிருந்த வேலையும் போயிடும். அகதிங்கற பேரை எடுத்த மாதிரி, எங்களை அகதியளா நடத்தக் கூடாதுனும் உத்தரவு போடனும்னு முதல்வரய்யாவ கேட்டுக்கறோம்” என்றார்.

இலங்கை தமிழர்கள்மறுவாழ்வு முகாம்

திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பகுதியிலும், திருச்சி மாநகரில் உள்ள கொட்டப்பட்டு பகுதியிலும் இலங்கை தமிழர் முகாம்கள் அமைந்திருக்கின்றன. கொட்டப்பட்டு மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவரான தியாக விஜயன், “ஒரு அடிமை போலத்தான் இங்க வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். வர்றோம். ரேஷன் பொருளுங்க கூட குடும்பத் தலைவருக்கு 1,000/- ரூபாயும், மனைவிக்கு 750/- ரூபாயும், 12 வயசுக்குள்ள இருக்கற பசங்களுக்கு 400/- ரூபாயும் அரசு குடுக்குது. அதை மட்டும் நம்பித்தான் நாங்க வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கோம். வெளியில எங்களால் எந்த வேலைக்கும் போக முடியாது. அப்படியே போனாலும் எங்களை கொலைக் குற்றவாளிகள் போல இவர்கள் கண்காணிக்கும் விதமும், நடந்துகொள்ளும் விதமும் ரொம்ப வேதனையானது” என்றார்.

ஈரோடு மாவட்டத்தில் ஈஞ்சம்பள்ளி, அறச்சலூர், பவானிசாகர் உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் அமைந்திருக்கின்றன. ஈஞ்சம்பள்ளி முகாமில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் வசித்து வருகின்றனர். 1993-ல் அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட 6 கழிப்பறைகள் பாழடைந்து போக, ஈரோட்டைச் சேர்ந்த சீமா என்ற தனியார் தொண்டு நிறுவனம் 20 கழிப்பறைகளை கட்டிக் கொடுத்திருக்கிறது. 500 பேருக்கு 20 கழிப்பறைகள் போதவில்லை என்பதால் முகாம்வாசிகளே தங்களது சொந்தப் பணத்தில் 40 கழிப்பறைகளை கட்டியிருக்கின்றனர்.
“இந்த கொரோனா காலக்கட்டத்துல ஒரு டாய்லெட்டை இத்தனை பேரு பயன்படுத்தறது ரொம்ப சிரமமா இருக்குங்க. சுகாதாரத்துல பப்ளிக் டாய்லெட்டை விட மோசமா இருக்கு. அரசாங்கம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 100 சதுர அடியில் தான் வீட்டை கட்டிக் கொடுத்துருக்கு. அதுக்குள்ள தான் சமையலறை, படுக்கையறை, பாத்ரூம் எல்லாம் இருக்கு. வயசுப் புள்ளைங்க இருக்க வீட்டுல உடுப்பு மாத்துறது, தூங்குறதுன்னு எல்லாமே சிரமமா இருக்குது. சொந்தக்காரங்க யாராவது வந்தா அவங்களை பக்கத்து வீட்டுல தான் படுக்க வைக்கணும்” என்றனர்.

இலங்கைத் தமிழர்கள்
 
“பவானிசாகர் முகாமில் உள்ள 1,055 குடும்பங்களுக்கும் சேர்த்து வெறும் 30 குடிநீர் பைப்புகள் தான் இருக்கு. ஒரு குடிநீர் பைப்பை 30 குடும்பங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கு. ஒரு மணி நேரத்துக்குள்ள இந்த 30 குடும்பமும் எப்படி ஒரு குடும்பத்துக்குத் தேவையான தண்ணீரை புடிச்சிக்க முடியும்? 3,000 மக்கள் இருக்கற இந்த முகாம்ல வெறும் 220 டாய்லெட்தான் இருக்கு. அதுலயும் தண்ணி வசதி இல்லை. பக்கெட்டைத் தூக்கிட்டுதான் அலையணும். ஆத்தர அவசரத்துக்கு பொம்பளைங்க ஒதுங்க ரொம்ப சிரமப்படுறாங்க. நிம்மதியா டாய்லெட்கூட போக முடியலை. குடியுரிமை இல்லாததால சொந்தமா ஒரு பைக் கூட எங்க பேர்ல வாங்க முடியலை. எங்கயாவது அடிபட்டு விழுந்தாலும் எந்த இன்ஸூரன்சும் எங்களுக்குக் கெடைக்காது. ஒவ்வொரு தேர்தல் அப்பவும் எங்களுக்கு ஏதாவது விடிவு கிடைக்காதானு ஏங்கி ஏங்கியே 30 வருஷம் போயிடுச்சி. எங்களுக்குக் குடியுரிமையை மட்டும் குடுத்தா போதும். வாழ்நாள் பூரா சாமி படம் இருக்க இடத்துல அவங்க படத்தை வெச்சிக் கும்பிடுவோம்” என்கிறார் பவானிசாகர் முகாமைச் சேர்ந்த ஸ்ரீகாந்தன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோப்புக்கொல்லை, லேணாவிளக்கு, அழியாநிலை என மூன்று இடங்களில் முகாம்கள் இருக்கின்றன. அழியா நிலை முகாமைச் சேர்ந்த ஜேசுராஜ், “எங்கள்ல இறந்தவங்களுக்கு ஈமச்சடங்கு செய்ய அரசாஙகம் 5,000 ரூபாய் தருது. ஆனா மூனு மாசத்துக்கு அப்புறம்தான் அது கையில கெடைக்குது. 1995 காலகட்டத்துல மார்க் அடிப்படையில எங்க புள்ளைங்களுக்கு டாக்டர் சீட் கெடச்சிது. அதற்கப்புறம் அத நிறுத்திட்டாங்க. இப்போ எங்க புள்ளைங்க அதிக மார்க் எடுத்தாலும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கிடைக்கறதில்ல. எங்க புள்ளைங்க பலபேருக்கு வெளி நாட்டுல போய் படிக்கறதுக்கு வாய்ப்பு கெடைக்குது. ஆனா பாஸ்போர்ட் கிடைக்காததால அந்த வாய்ப்புகளும் போயிடுது” என்கிறார்.

 கரூர் மாவட்டம், ராயனூர் முகாம்வாசி ஒருவர், “நான் அஞ்சு வயசுல இலங்கைல இருந்து இங்க வந்தேன். இப்போ 42 வயசாகுது. கெடைச்ச வேலையைப் பார்த்து காலத்தை ஓட்டிட்டேன். ஆனா இருவது வயசாகும் எம்மகனை காலேஜ்ல படிக்க வைக்கறேன். ஆனா இங்க நெறைய பசங்க பட்டப்படிப்பை முடிச்சிட்டு அரசாங்க வேலைக்கும் போக முடியல. தனியார் கம்பெனிகளுக்கும் போக முடியல. அதனால ரெண்டு டிகிரிகள் வாங்கன பசங்க கூட கட்டட வேலை, கொத்தனார், பெயிண்ட் அடிக்கறதுனு கெடைக்கற வேலைக்குப் போறாங்க.

அதல்லாம் பார்த்துட்டு எம்மவன், நமக்கு அரசாங்க வேலை கிடைக்காது. மெட்ரோ சிட்டிங்களுக்கு போயி தனியார் கம்பெனிகள்லையும் வேலை செய்ய முடியாது. சித்தாளாவோ, பெயிண்டராவோத்தான போகப்போறேன். அதுக்கு ஏன் நான் படிக்கனும்ணு கேக்கும்போது நெஞ்சு கனத்துப் போகுது. ஒரு தலமுறையே அகதியளா ஜெயில் வாழ்க்கையை வாழ்ந்துட்டோம். அடுத்த ஜெனரேஷனுக்கும் எங்க நெலம வரக்கூடாது. வாரத்துல நாலு நாள் செக்கிங் வர்றாங்க. அப்ப நாங்க முகாம்ல இல்லாம போயிட்டோம்னா, எங்கப் பேரை லிஸ்ட்டுல இருந்து நீக்கிடுறாங்க.


“அகதிகள் முகாம் அல்ல மறுவாழ்வு முகாம்” – முதல்வர் ஸ்டாலின்- சட்டசபை ஹைலைட்ஸ்!
“அகதிகள் முகாம் அல்ல மறுவாழ்வு முகாம்” – முதல்வர் ஸ்டாலின்- சட்டசபை ஹைலைட்ஸ்!
அப்புறம் எங்கயாச்சும் சின்ன பிரச்னை ஏற்பட்டா ‘அவன் பண்ணக்கூடிய ஆள்தான்’னு எங்க மேல கேஸை போட்டுடறாங்க. கல்லூரிகள்ல இட ஒதுக்கீடுனு அறிவிச்சுக்காங்களே தவிர, ‘வேலை வாய்ப்பில் முன்னுரிமை, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்’னு சொல்லலை. நாங்களும் மனுஷங்கதான். ஈழத்தமிழர்களாக பிறந்ததை தவிர நாங்க வேறென்ன பாவம் செஞ்சோம்?” என்று கேட்கும்போதே அவரது குரல் உடைகிறது.

இலங்கை தமிழர்களின் இந்த வேதனைக் குரல்கள்குக்கு செவிமடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

விகடன்