காலத்தின் தேவை கருதி நடத்தப்பட்ட கவனயீர்பு ஒன்றுகூடலும் மனுக்கையளிப்பும்

ஞாயிறு டிசம்பர் 20, 2020

ஐக்கிய நாடுகள் அவையின்46ஆவது மனித உரிமைகள்  ஆணையகத்தின்  கூட்டத் தொடரில், சிங்கள பேரினவாத அரசிற்குக் கால நீடிப்பு கொடுப்பதற்கான சதி வேலைகளில்  விலை போன தமிழ் தரப்புக்கள் ஈடுபட்டுள்ளதை தடுத்து நிறுத்தவும் சர்வதேச நாடுகளின் உதவியுடன் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பிரான்சு நாட்டின் உதவியை  கோரியும் இக்கட்டான காலகட்டத்திலும் பிரான்சு அரசின் அனுமதியுடன்   நேற்றையதினம் 18/12/2020,  காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை ஒன்றுகூடல் நடைபெற்றது.

 

 மட்டுப் படுத்தப் பட்ட மக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற  கவனயீர்ப்புக்கு பிரான்சு நாடாளுமன்றில் உள்ள தமிழ் மக்கள் ஆய்வுக் குழு முழு ஆதரவு வழங்கியிருந்தது. பிரான்சு பாராளுமன்றம் ஊடாக தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பிரான்சு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியும் கொடுத்திருந்தனர்.

இதே வேளை பிரான்சு வெளிநாட்டு வெளிவிவகார அலுலகத்தின் ஆசிய நாடுகளுக்கான பொறுப்பதிகாரியுடனும் இணையவழியில்  தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையே நீதியை பெற்றுத் தருமென வலியுறுத்தி உரையாடப் பட்டதுடன் எமது கோரிக்கை அடங்கிய மனுவும் கையளிக்கப் பட்டது. எமது கவனயீர்ப்புக்கு வலுச் சேர்கும் பொருட்டுத்  தமிழர் ஆய்வுக்குழுவின் உப தலைவர் அவரது அலுவலக உதவியாளரை எமது கவனயீர்ப்பில் கலந்து கொள்ள வைத்ததுடன் எமது கோரிக்கை அடங்கிய மனுவையும் பெற்று சென்று,  தனது முகநூல் பக்கத்தில் எமது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் தகவலையும் வெளியிட்டிருந்தார்.


தாயகத்தில் எமது உறவுகளின் அறவழிப் போராட்டங்களை சிங்கள பேரினவாத  அரசு தடைசெய்து அவர்களின் உரிமைக் குரல்களை நெரித்துவருகின்றது.  தனக்கு சேவகம் செய்யும் தமிழ் கட்சிகளின் உதவியுடன்  அனைத்துலக விசாரணையிலிருந்து நழுவும் விதத்தில் அவர்களை ஊக்குவித்து வருகின்றது.  அவ்வாறே ஆங்கில மொழி பேசும் புலம் பெயர் தமிழர்கள் சிலரையும் சேர்த்துச் சிங்களப் பேரினவாத அரசு தன்னைக் காப்பாற்றும் வேலைகளிலும் ஈடுபட்டுவருகின்றது.  

புலம் பெயர் தமிழ் அமைப்புகள் பதினொரு வருடங்களாகத்  தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி நடத்தி வரும் அறவழிப் போராட்டங்களின் உறுதிப்பாட்டை கவனத்தில் கொள்ளும் சர்வதேச நாடுகள், நடைபெற இருக்கும்  ஐக்கிய நாடுகள் அவையின் 46 ஆவது மனித உரிமைகள் ஆணைக் குழுக் கூட்டத்தில்  தமிழினப் படுகொலைக்கான நீதியை பெற்றுத் தர அனைத்துலக பொறிமுறையைக்  கடைப் பிடித்து சிங்களப் பேரினவாத அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டு வந்து விசாரணை நடத்துவதை வலியுறுத்தி எமது அறவழிப் போராட்டங்களை விரைவு படுத்தி நடைமுறை படுத்துவதே நாம் எமது மண்மீட்புப் போரில் தங்கள் இன்னுயிர்களை  ஈகம் செய்த மாவீரர்களுக்கும் பொது மக்களுக்கும் செய்யும் மரியாதையாகும்.

இவர்களின் அர்ப்பணிப்புகளை மதியாது சிங்கள அரசைக் காப்பாற்றத் துணைபோகும் தமிழ் அமைப்புகளைத் தமிழ்மக்கள் இனம் கண்டு விழிப்பாக இருப்பதுடன், எமது தமிழீழ மக்களையும், மண்ணையும் பாதுகாக்கவும், தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி வாழ்விட நாடுகளில் அறவழிப் போராட்டங்களை நடத்தி எமது கோரிக்கைகளை வலுப் பெறச் செய்வதினூடாக நாம் நீதியைப் பெற்று விடுதலை அடையமுடியும்.  இக்கட்டான காலத்திலும் நாங்கள் செய்யும் அறவழிப் போராட்டங்கள் எங்கள் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் என்பதை இக் கவனயீர்ப்பு போராட்டம் எமக்கு உணர்தியுள்ளது. பிழையான வழிகாட்டல்கள் சிங்கள அரசை பாதுகாக்க செய்யும் சதிவேலை என்பதை மனதில் கொண்டு ஒவ்வொரு தமிழனும் தனது பொறுப்பை உணர்ந்து  வாழ்விட நாடுகளில் அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்து எமது நீதியையும் விடுதலையையும் விரைவு படுத்துவோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”