காணாமல்போன குடும்ப பெண் சடலமாக மீட்பு

புதன் ஜூன் 12, 2019

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரத்தில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் காணாமல்போன குடும்ப பெண் கொலைசெய்யப்பட நிலையில் வீட்டின் பின்புற குளியல் அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

திருக்கோவில் விநாயகபுரம் 02 பாடசாலை பிரதான வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்த குறித்த பெண் காலை அயல்வீட்டிற்கு சென்றவேளை 11.30 மணியளவில் தனது வீட்டில் நாய் குரைப்பதைக் கேட்டு தனது வீட்டுக்கு சென்றததாக அயல் வீட்டார் தெரிவித்திருந்தனர்.

வயல் வேலை முடித்து 12.00 மணியளவில் வீடு திரும்பிய பெண்ணின் கணவர் அயல் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என மனைவியை தேடியுள்ளார்.

எனினும் எங்கு தேடியும் மனைவி கிடைக்காததால் திருக்கோவில் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து திருக்கோவில் பொலிசார் மற்றும் உளவுத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை வீட்டின் பின்புறமாக கட்டப்பட்டிருந்த குளியல் அறையில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த பெண்ணின் சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த கொலை தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.ஜெயவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.