காங்கிரஸ் இன்னும் வாரிசு அரசியலை கைவிடவில்லை!

ஞாயிறு ஓகஸ்ட் 11, 2019

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதை ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சனம் செய்துள்ளார்.

மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் தலைவரானார், ராகுல் காந்தி. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவதற்காக தீவிரமாக செயல்பட்டு வந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேர்தலில் வெறும் 52 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்த ராகுல் காந்தி, தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது முடிவை கட்சியின் காரிய கமிட்டியோ, நிர்வாகிகளோ ஏற்கவில்லை. எனினும் தனது முடிவில் உறுதியாக இருந்த அவர், கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்குமாறு கடந்த மாதம் அறிவித்தார்.

ஆனாலும் புதிய தலைவர் தேர்வில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கட்சியில் குழப்பம் நீடித்தது. எனவே கட்சிக்கு தற்காலிக தலைவரையாவது உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என சசிதரூர், மிலிந்த் தியோரா போன்ற தலைவர்கள் வலியுறுத்தினர். இதனால் புதிய தலைவரை தேர்வு செய்யும் முடிவுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. காங்கிரஸில் இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில்,  டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ராகுலிடம் இருந்து மீண்டும் சோனியாவிடம் பதவி சென்றுள்ளது சமூக வலைதளங்களில் விமர்சனமும் செய்யப்படுகிறது. 

ம.பி. முன்னாள் முதல்வரும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான சிவராஜ் சிங் சவுகான், மக்கள் வாரிசு அரசியல் நிராகரித்துவிட்டனர், ஆனால் அதிலிருந்து பாடம் கற்காத காங்கிரஸ் ராகுல் காந்தி அல்லது சோனியா காந்தி வேண்டும் என்கிறது என விமர்சனம் செய்துள்ளார்.  புவனேஷ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் சிங் சவுகான்,  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வாரிசு அரசியலை நிராகரித்துவிட்டனர். ஆனால் காங்கிரஸ் மட்டும் பாடம் கற்கவில்லை. பா.ஜனதாவில் தலைவர்கள் இயற்கையாக வளர்வார்கள், கட்சியும் அவர்களை வளர்த்துவிடும். ஆனால் காங்கிரசில் கட்சியோ ஒரு குடும்பத்தை சுற்றித்தான் இருக்கிறது. மக்கள் அளித்த பாடத்தில் இருந்து காங்கிரசுக்கு கற்க விருப்பமில்லை. 

காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்னும் ராகுலும், சோனியாவும்தான் தலைவராக வேண்டும் என கோருவது வியப்பாக இருக்கிறது. உத்தரப்பிரதேசம், பீகாரில் வாரிசு அரசியல், குடும்ப அரசியல், சாதி அரசியல் ஆகியவற்றை பயன்படுத்திய கட்சிகளை மக்கள் தோற்கடித்துவிட்டனர். மேற்கு வங்காளத்தில் மக்களை திருப்திபடுத்தும் அரசியலையும் மக்கள் நிராகரித்து வருகிறார்கள். இப்போது மக்கள் தேசியவாதத்தையும், வளர்ச்சியையும்தான் விரும்புகிறார்கள். காங்கிரஸ் கட்சி தங்களின் தலைவரை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்ய வேண்டும், அதில் தோல்வி அடைந்தால், யாரும் அந்த கட்சியை காப்பாற்ற முடியாது எனக் கூறியுள்ளார்.