கானல்நீராகிப் போன இராசதந்திரப் போராட்டம் - கலாநிதி சேரமான்

வியாழன் மே 16, 2019

146,679 தமிழ் உயிர்களை சிங்களம் நரபலி கொண்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்ந்தேறி இவ்வாரத்தோடு பத்தாண்டுகள் கடக்கின்றன. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமவுரிமை கோரி இருபத்திரண்டு ஆண்டுகள் அறவழியில் போராடி, அதன் பின்னர் தமிழீழத் தனியரசு கோரி முப்பத்தொன்பது ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழீழ மக்களைப் பொறுத்த வரை பத்தாண்டுகள் என்பது சிறியதொரு காலப்பகுதி அல்ல.

அதாவது மலையகத் தமிழர்களின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்தெடுத்த குடியுரிமைச் சட்டம் 20.08.1948 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தந்தை செல்வா அவர்களின் தலைமையில் வெடித்த தமிழர்களின் சமவுரிமைக்கான அறவழிப் போராட்டம் 09.04.1958 அன்று பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்படுவதோடும், அதனைத் தொடர்ந்து ஏறத்தாள ஒன்றரை மாதங்கள் கழித்து இனக்கலவரம் என்ற பெயரில் கட்டவிழ்ந்த 1958 வைகாசித் தமிழினப் படுகொலைகளோடும் பத்தாண்டுகளை எட்டியது.

ஆயினும் இன்றைய தமிழ் அரசியல் தலைவர்களோடு ஒப்பிடும் பொழுது தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைத் தந்தை செல்வா அவர்கள் முன்னின்று வழிநடத்திய விதம் மெச்சத் தக்கது. ஏனென்றால் இன்றைய அரசியல் தலைவர்கள் போல் நாடாளுமன்ற ஆசனங்களை கட்டிப் பிடித்தவாறு அவர் சாய்நாற்காலி அரசியல் செய்யவில்லை. அல்லது இராசதந்திரப் போராட்டம் என்ற பெயரில் சிங்களத்திடம் யாசகம் செய்யும் அரசியலையும் அவர் புரியவில்லை. மாறாக சமவுரிமை கோரித் தமிழர்கள் திறந்த ஒவ்வொரு அறப்போர்க் களங்களையும் அவரே வழிநடத்தினார்.

தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராக 05.06.1956 அன்று காலிமுகத் திடலில் தமிழர்கள் முன்னெடுத்த குந்துமறியல் போராட்டத்திற்குத் தந்தை செல்வா அவர்களே தலைமை வகித்தார். ஆயுதம் தாங்கிய சிங்களக் குண்டர்களை ஏவி விட்டு தமிழ்ப் போராட்டவாதிகளின் மண்டையை பண்டாரநாயக்கா அரசாங்கம் பிளந்த பொழுதுகூட தந்தை செல்வா தளர்ந்து விடவில்லை. அதன் பின்னரும் தமிழர்களின் உரிமைகளுக்காக இலங்கை நாடாளுமன்றில் அயராது குரல் கொடுத்தார்.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து தனிச் சிங்களச் சட்டத்தை சிங்கள அரசு அமுல்படுத்திய பொழுது அதற்கு எதிராகக் களத்தில் குதித்த தந்தை செல்வா, சிங்களச் சிறீ பொறிக்கப்பட்ட வாகனங்களின் இலக்கத் தகடுகள் மீது தார்பூசும் போராட்டத்தை தானே முன்னின்று நெறிப்படுத்தினார். அதற்காகவும், அரச ஆணையை மீறித் தனது வாகனத்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இலக்கத் தகடுடன் பயணித்தமைக்காகவும் கைது செய்யப்பட்டு ஒரு வார காலத்திற்குச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனாலும் அதனையிட்டு தந்தை செல்வா அலட்டிக் கொள்ளவில்லை. அடங்காத் தமிழனாக சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். அதற்காக 04.06.1958 அன்று தமிழரசுக் கட்சி தடை செய்யப்பட்டது. தந்தை செல்வாவும், தமிழரசுக் கட்சியின் ஏனைய தலைவர்களும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். 1958ஆம் ஆண்டின் இறுதியில் தமிழர்களின் அறவழிப் போராட்டம் பத்து ஆண்டுகளை நிறைவு செய்த பொழுதே தந்தை செல்வாவும், தமிழரசுக் கட்சியின் ஏனைய தலைவர்களும் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் பண்டாரநாயக்காவின் படுகொலை, டட்லி-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டமை, சிறீமாவோ-செல்வா இணக்கப்பாடு செல்லாக்கா சாகியமை என பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் கட்டவிழ்ந்த பொழுது காந்தியடிகளின் வழியில் ஒத்துழையாமை இயக்கம் என்ற ஆயுதத்தைத் தந்தை செல்வா அவர்கள் தனது கையில் எடுத்தார்.

அதன்படி தமிழீழ தாயகத்தில் சுயாட்சி அதிகாரம் கொண்ட தமிழ் மாநில அரசை அமைப்பதற்கான மக்கள் இயக்கம் எழுச்சி கொண்டது. 20.02.1961 அன்று வீதிகளில் இறங்கி யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள், சிங்கள அரச இயந்திரத்தை முடக்கினார்கள். போராட்டவாதிகளை விரட்டியப்பதற்காக சிங்களக் காவல்துறையினர் தடியடிப் பிரயோகம் செய்த பொழுதும், மக்களின் எழுச்சியை அவர்களால் முடக்க இயலவில்லை. தமிழர்களின் ஒத்துழையாமை இயக்கம் தமிழீழம் முழுவதும் பரவியது. தமிழீழ மண்ணில் சிங்கள அரச இயந்திரம் முடங்கிப் போனது. அதன் உச்ச கட்டமாக 14.04.1961 அன்று தமிழீழ தாயகத்தில் தமிழரசு என்ற தபால் தலை வெளியிடப்பட்டு தமிழீழ தாயகத்திற்கான தனியான அஞ்சல் சேவையும் தொடங்கப்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த சிறீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கம், நான்கு நாட்கள் கழித்து 18.04.1961 அன்று அவசர கால நிலைமையைப் பிரகடனம் செய்து தமிழீழ மக்கள் மீது தனது இராணுவ இயந்திரத்தை ஏவி விட்டது. நிராயுதபாணிகளாக அறப்போர் தொடுத்து நின்ற தமிழ்ப் போராட்டவாதிகள் மீது வெறிகொண்டு சிங்கள ஆயுதப் படைகள் தாக்குதல் தொடுத்தன.

தந்தை செல்வா உட்பட பெரும் எண்ணிக்கையிலான தமிழ்ப் போராட்டவாதிகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சுயாட்சி அதிகாரம் பொருந்திய தமிழ் மாநில அரசு கோரி அறப்போர் தொடுத்தது தவறு என்று தமது கைப்பட எழுதிக் கொடுத்தவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு தமது கைப்பட எழுதிக் கொடுத்தவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் முதன்மையானவர்: தனது தனிப்பட்ட சுகபோகங்களுக்காக 1961ஆம் ஆண்டே தமிழர்களின் உரிமையைக் காற்றில் பறக்க விட்டவர்.

ஆனால் தந்தை செல்வா மட்டும் அடிபணிய மறுத்தார். பனாகொட படை முகாமில் ஏனைய போராட்டவாதிகளுடன் சிறை வைக்கப்பட்டார். இறுதியில் அவரது உடல்நலம் குன்றிய நிலையிலேயே அவர் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் உடல்நலம் ஓரளவு தேறி, 1964ஆம் ஆண்டில் இன்னுமொரு ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்குவதற்கான ஆயத்தங்களில் தந்தை செல்வா ஈடுபட்ட பொழுது மீண்டும் அவரது உடல்நலம் குன்றியது. அதன் பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து 1970ஆம் ஆண்டில் பொன்.சிவகுமாரன் போன்ற போர்க்குணம் மிக்க இளைஞர்களைக் கொண்ட தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்புத் தோற்றம் பெற்றமையும், தனது பதினைந்தாவது வயதில் அவ்வமைப்பில் இணைந்து செயலாற்ற முற்பட்டு, அதற்கான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட நிலையில் 1972ஆம் ஆண்டில் புதிய தமிழ்ப் புலிகள் என்ற ஆயுத எதிர்ப்பியத்தைத் தலைவர் பிரபாகரன் உருவாக்கி, பின்நாட்களில் அது தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மாபெரும் சேனையாகவும், நிழல் அரசாகவும் தோற்றம் பெற்றமை வரலாறு. 

‘வரலாறு எனது வழிகாட்டி’ என்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் குறிப்பிடுவார். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி நாட்களில் நாம் கால் பதிக்கும் இத் தருணத்தில், 1948ஆம் ஆண்டு முதல் 1958ஆம் ஆண்டு வரையான பத்தாண்டு காலப்பகுதியில் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு எவ்வாறான முயற்சிகளை தந்தை செல்வா எடுத்தார் என்பதையும், பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதோடு பத்தாண்டுகளை தமிழர்களின் அறவழிப் போராட்டம் எட்டிய பொழுது, அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு எவ்வாறான மூலோபாயங்களை தந்தை செல்வா அவர்கள் வகுத்துச் செயற்படுத்தினார் என்பதையும் நாம் இங்கு பதிவு செய்வதன் நோக்கம், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்ந்தேறிய கடந்த பத்தாண்டுகளில் இராசதந்திரப் போராட்டம் என்ற பெயரில் நாம் எதனை சாதித்தோம் என்பதை சுயவிசாரணைக்கு உட்படுத்துவதே ஆகும்.

தமிழீழ தாயகத்தில் சுயாட்சி அதிகாரம் பொருந்திய தமிழ் மாநில அரசை உருவாக்குவதற்கு தந்தை செல்வா உருவாக்கிய மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் ஆயுத முனையில் நசுக்கப்பட்டமை அன்று தமிழர்களுக்கு ஒரு செய்தியை இடித்துரைத்தது.

வெறுமனவே அறவழியில் போராடுவதன் மூலம் தமது உரிமைகளைத் தமிழர்கள் வென்றெடுக்க முடியாது என்பது தான் அந்தச் செய்தி. இது தான் இன்னொரு பத்தாண்டுகள் கழித்துத் தமிழீழ மண்ணில் போர்க்குணம் மிக்க இளைய தலைமுறையயான்று எழுச்சி கொள்வதற்கும், பின்நாட்களில் அந்தத் தலைமுறைக்கு பிரபாகரன் என்ற விடுதலைத் தீப்பொறி தலைமை வகித்து தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான தேச சுதந்திரப் போராட்டத்தை ஆயுதவழியில் முன்னகர்த்துவதற்கும் வழிகோலியது.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்ந்தேறிய கடந்த பத்தாண்டுகளில் இராசதந்திரப் போராட்டம் என்ற பெயரில் புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் உருப்படியாக சாதித்தது, தமிழீழ தேச சுதந்திரப் போராட்ட அசைவியக்கத்தை தக்க வைத்ததும், தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் ஊடாக அனைத்துலக மயப்படுத்தப்பட்ட தமிழர்களின் தேசியப் பிரச்சினையைத் தொடர்ந்தும் அனைத்துலக ரீதியில் பேசுபொருளாக உயிர்ப்புடன் வைத்திருப்பதும் தான்.

மறுபுறத்தில் இராசதந்திரப் போராட்டம் என்ற பெயரில் தமிழீழ தாயகத்தில் உள்ள சனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தமிழர்களின் பிரதிநிதிகள் சாதித்தது, நாடாளுமன்ற அரசியல் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் விடயத்தில் ஓர் கானல்நீர் என்பதை நிரூபித்தது மட்டுமே.

இந்தியா, அமெரிக்கா போன்ற வல்லாதிக்க சக்திகளின் ஆசீர்வாதத்துடன், நாடாளுமன்ற அரசியல் ஊடாக தமிழ் மக்களின் இறைமையை நிலைநாட்டுவதற்கான மாநில சுயாட்சியை வென்றெடுக்கப் போவதாகப் பத்தாண்டுகளுக்கு முன்னர் இரா.சம்பந்தரின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட சூளுரை இன்று அர்த்தமிழந்துள்ளது.

மறுபுறத்தில் ஐ.நா. மன்றின் ஊடாகத் சிறீலங்கா அரசை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்தித் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கான பரிகார நீதியாகத் தமிழீழத் தனியரசை வென்றெடுக்கப் போவதாகக் கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கிய புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் பலர் இன்று தம்மை மேற்குலகம் ஏமாற்றிவிட்டது என்ற விரக்தியில் செய்வதறியாது திணறி நிற்கின்றனர்.

ஒரு விதத்தில் 1948ஆம் ஆண்டு தொடங்கிய தமிழர்களின் அறவழிப் போராட்டம், பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதோடு பத்தாண்டுகளை நிறைவு செய்த பொழுது எவ்வாறான நிலையில் நின்றதோ, அவ்வாறான நிலையிலேயே இன்று தமிழினம் நிற்கின்றது. இவ் வரலாற்றுக் கட்டத்தில் தான் தந்தை செல்வா போன்று அடுத்த கட்ட மூலோபாயங்களை வகுக்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். அன்று தந்தை செல்வா மக்களை அணிதிரட்டி வீதிகளில் இறங்கி அறப்போர் புரிந்தார். அதற்காக அவர் பல தடவைகள் சிறையும் சென்றார்.

தமிழீழ மக்களின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் இடைநிறுத்தம் பெற்றுப் பத்தாண்டுகளை எட்டியிருக்கும் இன்றைய சூழமைவில் தமிழர்களுக்குத் தேவைப்படுவது தமது உரிமைகளை அறவழியில் வென்றெடுப்பதற்குத் தம்மை அர்ப்பணிக்கக்கூடிய தந்தை செல்வா போன்ற தலைவர்கள் தான். அமிர்தலிங்கம் போன்று தமது சுக போகங்களுக்காகத் தமிழர்களின் உரிமைகளை காற்றில் பறக்கவிடும் தலைவர்கள் அல்ல. இவ்வாறான நிலை இன்னுமொரு பத்தாண்டுகளுக்குத் தொடருமேயானால், தமிழீழ மண்ணில் போர்க்குணம் மிக்க இளைய தலைமுறை எழுச்சி கொள்வதையும், அமிர்தலிங்கத்திற்கும், அவர் போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கும் நிகழ்ந்தது இன்றைய தமிழ்த் தலைமைகளுக்கு எதிர்காலத்தில் நிகழ்வதையும் எவராலுமே தடுத்து நிறுத்த முடியாது.

நன்றி: ஈழமுரசு