காரைக்குடியில் செய்தியாளர் மீது தாக்குதல், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதன் நவம்பர் 25, 2015

நியூஸ்7 தமிழ் நிர்வாகத்தின் செய்தி குறிப்பின் படி,’காரைக்குடி அருகே செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் பாலமுருகன் மீது திமுகவினர் நடத்திய கொலைவெறித் தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த முதலமைச்சருக்கு நியூஸ்7 தமிழ் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் பகவான் சிங், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள மனுவில், செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை திமுகவை சேர்ந்த பெரி பாலா உட்பட 7 பேர் இரும்பு கம்பி உள்ளிட்ட கொடூரமான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, செய்தியாளரை கீழே தள்ளி, அவரது மார்பில் மிதித்துள்ளதாகவும், அந்த மனுவில் பகவான் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், செய்தியாளர் மீது கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை அடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளித்த போதும், பெரி பாலாவுக்கு ஆதரவாக திமுக முக்கிய புள்ளிகள் சிலர் காவல் நிலையத்தில் இருந்துள்ளனர். இதனால், பெரி பாலா மீது மென்மையான போக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று பகவான் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.