காற்றின் மாசுபாட்டை குறைக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும்

ஞாயிறு பெப்ரவரி 21, 2021

காற்றின் மாசுபாட்டை குறைக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள புவிவெப்பமயமாதலை கட்டுப் படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் கட்டுப்படுத்து வதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015- ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த கூட்டத்தின்போது எட்டப்பட்டது. 

இந்த ஒப்பந்தத்தில் முதலில் இணைந்த அமெரிக்கா, டிரம்ப் ஆட்சி காலத்தின் போது விலகுவதாக அறிவித்தது. வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இந்த ஒப்பந்தம் இருப்பதாக விமர்சித்து வந்த டிரம்ப், பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த சூழலில் சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார். தனது தேர்தல் பிரசாரத்தின் போதே, தான் அதிபரானால் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று கூறி இருந்தார். 

இந்நிலையில் அமெரிக்கா மீண்டும் அதிகாரப்பூர்வமாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காற்றின் மாசுபாட்டை குறைக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கான சிறப்பு தூதரான ஜான் கெர்ரி கூறுகையில், “வரும், 2050ம் ஆண்டுக்குள் காற்று மாசின் அளவை பூஜ்யமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு காற்று மாசுவை வெளிப்படுத்தும் சீனா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா உட்பட 17 நாடுகள் மாசுவைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அனைவரும் இணைந்து இந்த உலகப் பிரச்னைக்கு தீர்வு காண உறுதியேற்போம். அதற்கான செயல் திட்டங்களை உடனடியாக துவக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.