காஷ்மீரில் மனித உரிமை மீறல்களை தடுக்க வேண்டும்!

செவ்வாய் செப்டம்பர் 10, 2019

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் பாகிஸ்தான் மந்திரி இன்று வலியுறுத்தினார்.

 ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியதில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையில் உச்சக்கட்ட பனிப்போர் தொடங்கியுள்ளது.

இந்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் சமீபத்தில் முன்வைத்த கோரிக்கை போதிய நாடுகளின் ஆதரவு கிடைக்காததால் தோல்வியில் முடிந்தது.
 

இதற்கிடையில், சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது ஆண்டாந்திர கூட்டம் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்திய அரசுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை இங்கு முன்வைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

 

இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள்


இந்நிலையில், இந்த கூட்டத்தில் இன்று பங்கேற்ற பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முஹ்மூத் குரைஷி, இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

காஷ்மீரில் வாழும் மக்களுக்கான நீதிக்காகவும் மரியாதைக்காகவும் உலக மனித உரிமைகளின் மனசாட்சியான ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் கதவுகளை இன்று நான் தட்டுகிறேன்.  இதை வழக்கத்துக்கு மாறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது.

இந்த ஆணையத்தின் தொடக்கக்கால உறுப்பு நாடு என்ற முறையில், தர்மத்தின்படியும் தார்மீக அடிப்படையிலும் இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் அங்கு நடக்காமல் தடுக்க வேண்டியது எங்களது கடமை என்று பாகிஸ்தான் கருதுகின்றது.

மிகப்பெரிய உயந்த மரியாதைக்குரிய இந்த அமைப்பு இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத்தவறி உலக அரங்கில் சங்கடத்துக்கு உள்ளாகி விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.