காவல் நிலையத்தில் உள்ள விளம்பர பலகையை அகற்ற வேண்டும்!

வெள்ளி செப்டம்பர் 17, 2021

சென்னை- காவல் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ள விளம்பரதாரரின் பெயரை நீக்க வேண்டும் என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள சில காவல் நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து நன்கொடை வழங்கி பெயர் பலகை வைக்கின்றனர். இதனால் அந்தப் பெயர் பலகைகளில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன விளம்பரதாரரின் பெயர்கள் பொறிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர் மற்றும் காவல் கண் காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், சில காவல் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றுள்ளதால், மக்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே விளம்பரதாரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட காவல் நிலைய பெயர் பலகைகளை உடனடியாக அகற்றி புதிய பெயர் பலகையை வைக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.