காய்கறி கழிவிலிருந்து விரைவில் மின்சாரம் தயாரிப்பு!

சனி மே 21, 2022

சென்னை- காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் கால நிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான சுத்தமான காற்று மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தென்மாநிலங்களுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. 

இதில் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபி, தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் கால நிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாட்டில் இதுவரை 14 வகையான நெகிழி தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆட்சியில் 174 நெகிழி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி இருக்கிறார். நெகிழி எதில் கலந்தாலும் மாசு ஏற்படுகிறது. நிலம், கடல் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்துவோருக்கு அபராதம் கூட விதித்து இருக்கிறோம். அதனை அதிக்கப்படுத்தவும் முடிவு எடுத்து இருக்கிறோம் என அவர் கூறினார்.

மேலும், இரண்டு ஆண்டிற்குள் குப்பைகளைப் பிரித்து எடுக்க கூடிய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 59 இடங்களில் குப்பைகள் பிரிக்கப்பட்டு உயிர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 2 வருட காலத்திற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குப்பைகளையும் பிரித்தெடுக்கும் பணி முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நீர் நிலைகளில் கழிவுகளை கலப்பது என்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போன்றது. தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து திடக்கழிவு மேலாண்மை செய்வதற்காக, தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மை கழகம் என்ற புதிய அமைப்பு தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.

மேலும் கோயம்பேடு அங்காடியில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க கூடிய பணியானது விரைவில் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்

கழிவுகளை மேலாண்மை செய்யக்கூடிய வகையில் பிற துறைகளுடன் இணைந்து அதற்கென தனி ஒரு அதிகாரியை நியமனம் செய்து அவற்றை முறையாக பிரித்து எடுப்பது குறித்து தனி அதிகாரி நியமிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.