கசாப்புக் கடைக்காரனின் கருணையும் சிறீலங்கா ஆட்சியாளர்களின் நீதியும்!

வியாழன் ஜூலை 18, 2019

சிறீலங்காவின் தடுப்புச் சிறை முகாம்களில் ஏராளமான தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் மீது காத்திரமான குற்றச்சாட்டுக்கள் கூட இதுவரை முன்வைக்கப்படவில்லை. பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கைதிகளில் சிலர் சிறை வாழ்க்கையுடனே அவர்களின் ஆயுளும் முடிந்து
போயிருக்கின்றது.

111

அண்மையில் கூட சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 15 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சாவடைந்துள்ளார். சந்தேக நபராகவே இவர் 2005ம் ஆண்டு முதல் கடந்த 15 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

47 வயதில் கைதான இவர் 62 வயதில் உயிரிழந்திருக்கின்றார். இவர் மீதான குற்றச்சாட்டை நிரூபித்து தண்டனை வழங்கியிருந்தால் கூட, இவர் தண்டனைக் காலம் முடிவடைந்து விடுதலையாகியிருக்கக்கூடும். ஆனால்,இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமலேயே அவரது ஆயுள் சிறைக்குள்ளேயே முடிந்திருக்கின்றது.

இந்தத் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக நாடகமாடியே கடந்த பத்தாண்டுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கழித்துவிட்டது. அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது குறித்து அரசாங்கம் கலந்தாலோசித்துவருவதாக சிறீலங்காவின் அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்தும் வருடங்கள் கடந்துவிட்டன.

ஆனால்,யாருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவுமில்லை,

ஒருவருக்கும் இதுவரை விடுதலையும் கிடைக்கவில்லை.தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ் மக்களும், பொது அமைப்புக்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் என எத்தனையோ போராட்டங்களை நடத்திவிட்டார்கள். ஐக்கிய நாடுகள் சபை வரையும் மனுக்களைக் கையளித்துவிட்டார்கள். எதுவுமே பயனற்றுப்போய்விட்டது.

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கமுடியாமல்,விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நினைத்திருந்தால் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் எப்போதோ அவர்களை விடுவித்திருப்பார்கள்.

ஆனால், அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் சிறைகளிலேயே தங்கள் ஆயுளை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் சிங்களப் பேரினவாதத்தின் எதிர்
பார்ப்பாக இருக்கின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

ஆனால்,அதே இராணுவத்தினரோ சிங்கள தரப்பைச் சேர்ந்த யாருமோ தமிழர்களைக் கொன்றதற்காக சிறைகளில் தங்கள் ஆயுளை இழந்துவிடக் கூடாது என்பதில் சிங்களப் பேரினவாத அரசு உறுதியாக இருக்கின்றது. அவர்களது வழக்குகளை விரைவாக விசாரித்து விடுதலையும் செய்கின்றது.

அந்த வகையில்தான் தற்போது திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 சிறீலங்காப் படையினரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி,திருகோணமலை பிரதான நீதவான் முகமட்ஹம்சாவினால் இப் படையினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சமாதானத்தை முறித்துக் கொண்டு சிறீலங்கா அரசு போரைத் தீவிரப்படுத்திய நிலையில்,2006 ஜனவரி இரண்டாம் திகதி,திருகோணமலை கடற்கரையில்,பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்த 4 மாணவர்களும் மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றிருந்த மாணவர் ஒருவரும் என ஐந்து மாணவர்கள் (மனோகரன் ரஜீகரன்,யோகராஜா ஹேமசந்திரன், லோகிதராஜா ரோகன்,தங்கதுரை சிவநாதன், சண்முகராஜா கஜேந்திரன்) சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியிலேயே இந்தப் படுகொலை நடந்தேறியது.இந்தக் படுகொலையை சிறீலங்கா அரசும்,இராணுவத்தினரும்,காவல்துறையினரும் மறுத்து வந்ததுடன்,பின்னர் உயிரிழந்த அனைவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனவும், இவர்கள் இராணுவத்தினரைத் தாக்க முற்பட்டவேளை கைக்குண்டு வெடித்தே உயிரிழந்தனர் எனவும் தெரிவித்தனர்.

ஆனால், 5 மாணவர்களும் படையினரால் கிட்ட நின்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை சட்ட மருத்துவ பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து 12 விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் அவர்கள் உடனடியாகவே விடுவிக்கப்பட்டனர்.

அதேவேளை, இதனைப் ஒளிப்பட ஆதாரத்துடன் செய்தியாக வெளியிட்ட உதயன் - சுடர்ஒளி திருகோணமலை செய்தியாளர் எஸ்.சுகிர்தராஜனும் சில நாட்களின் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். அத்துடன், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாட்டில் புகலிடம் கோரினர்.

எனினும், சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர், சர்வதேசத்திடம் நீதி கோரி நீண்ட சட்டப் போராட்டம் நடத்தினர். கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான ரஜீகரின் தந்தை மனோகரன் ஐ.நா. மனித உரிமைகள் சபையிலும் இப்படுகொலை தொடர்பில் சாட்சியமளித்திருந்தார். மாணவர்களின் படுகொலை தொடர்பில் எழுந்த சர்வதேச அழுத்தங்கள் காரணமாக, சிறீலங்காவின் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 2013ம் ஆண்டு யூலை 5ம் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் 13 பேரை கைது செய்தனர்.

111

எனினும், கைது செய்யப்பட்ட அனைவரும் 2013ம் ஆண்டு ஒக்டோபர் 14ம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில்,13 படையினருக்கும் எதிராக 36 பேர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டனர்.அவர்களில் முக்கிய சாட்சிகள் 8 பேர் மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கவில்லை. அவர்களில் இருவர் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்தவர்களாவர்.

இதேவேளை, சிறீலங்காவின் நீதிப்பொறிமுறை குறித்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த விவகாரமாக இந்த வழக்கு விளங்கியது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்தப் படுகொலையைப் பகிரங்கமாகக் கண்டித்திருந்தன.

சிறீலங்காவிற்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப், இப்படுகொலை வழக்கு விசாரணை தொடர்பாக ‘தாமதமாகும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமாகும்’ என்று தனது சமூகவலைத்தளத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்.

இவரது கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் சிறீலங்கா சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் நாட்டில் இல்லாததால் வழக்குத் தொடரமுடியவில்லை.

அவர்கள் வெளிநாடுகளில் இருப்பதால் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கும் நிலை இல்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.

சாட்சியான ஊடகவியலாளரைப் படுகொலை செய்துவிட்டு,சாட்சியங்களை அச்சுறுத்தி நாட்டைவிட்டு விரட்டிவிட்டு, இப்போது சாட்சியளிக்க யாருமில்லாமல் செய்யப்பட்ட நிலையில்,குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேர் மீதான குற்றச் சாட்டுக்களுக்கு சான்றாதாரங்கள் முன்வைக்கப்படவில்லை எனக் கூறி நீதிபதி குற்றம்சாட்டப்பட்டிருந்த 12 சிறப்பு அதிரடிப் படையினரையும், உதவிக் காவல்துறை அத்தியட்சகரையும் விடுதலை செய்துள்ளார்.

இதேபோன்றுதான் கொழும்பில் 5 மாணவர்கள் உட்பட 11 பேர் கடந்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும், தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வழக்குகளிலும் எதிர்காலத்தில் தீர்ப்பு வரப்போகின்றது.

கசாப்புக் கடைக்காரனிடம் கருணையை எதிர்பார்க்கும் ஆடுகளுக்கு அது எப்படி ஒருபோதும் கிடைக்கப் போவதில்லையோ,அதே போன்றுதான் சிங்களப் பேரினவாதிகளிடம் நீதியை எதிர்பார்க்கும் தமிழர்களுக்கும் ஒருபோதும் நீதி கிடைக்கப்போவதில்லை.

திருகோணமலை ஐந்து மாணவர்களின் படுகொலையில் படையினர் விடுவிக்கப்பட்டது இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

நன்றி: ஈழமுரசு