கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேர் கைது!

திங்கள் ஓகஸ்ட் 12, 2019

மட்டக்களப்பு  வவுணதீவு பொன்னாங்கன்னிச்சேனை ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட  3 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 45 லீற்றர் கசிப்பு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் லீற்றர் கோடா மற்றும் கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்திய உபகரணங்களை மீட்டுள்ளதாக வவுணதீவு காவல் துறையினர்  தெரிவித்தனர்.

காவல் துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வவுணதீவு காவல் துறை  பிரிவிலுள்ள பத்தரைக்கட்டை பொன்னாங்கன்னிச்சேனை ஆற்றுப் பகுதில் நேற்று அதிகாலை வவுணதீவு காவல் துறை  பெரும் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் போதை ஒழிப்பு தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி   தலைமையிலான 8 பேர் கொண்டகாவல் துறை  குழுவினர்  சுற்றிவளைத்து அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை மடக்கி பிடித்தனர் 

அவர்களிடமிருந்து 2 கேன், போத்தல்களிலிருந்து 45 லீற்றர் கசிப்பும்; ஒரு இலட்சத்து 10 ஆயிரம் லீற்றர் கோடா, பெரல் ஒன்று , மற்றும் வடிப்பதற்கான உபகரணங்களை மீட்டுள்ளனர் 

இதில் கைது செய்யப்பட்டவர்கள்  கன்னங்குடா, ஆயித்தியமலை, பாவக்கொடிச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த 33,40,40, வயதைக் கொண்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்தனர்.