கேரளா நிலச்சரிவு: ஒரு வயது மகனை இறுகப் பற்றியபடி உயிரிழந்த தாய்!

திங்கள் ஓகஸ்ட் 12, 2019

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தாய், தனது ஒரு வயது மகனை இறுகப்பற்றிக் கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் கேரள மாநிலம் பலத்த சேதத்தை சந்தித்து உள்ளது.

வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 

இந்நிலையில் மலப்புரம் அருகே மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ச்சி அளிக்கும் காட்சி ஒன்றை கண்டுள்ளனர். மலப்புரத்தின் சாத்தக்குளம் பகுதியில் வசித்தவர் கீது(21). 

 

மலப்புரத்தை சூழ்ந்து இருக்கும் வெள்ளம்


இவருக்கு திருமணமாகி துரு எனும் ஒரு வயது ஆண்குழந்தை இருந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய கீது, தனது மகனை இறுகப்பற்றிக்கொண்டு அணைத்தப்படி உயிரிழந்துள்ளார். இதனை கண்ட மீட்புப் படையினர் மற்றும் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். 

ஒரு வழியாக சிக்கிய இருவரின் சடலத்தையும் மீட்புக் குழுவினர் மீட்டனர். கீதுவின் கணவர் சரத்தும் அங்குதான் இருந்திருக்கிறார். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சரத்தின் தாய், மேலும் சிலரின் சடலங்களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.