கேரளாவில் 'நிபா' வைரஸ் எதிரொலி தமிழக மருத்துவமனைகளில் 'அலர்ட்'

புதன் ஜூன் 05, 2019

கேரளாவில் 23 வயது கல்லுாரி மாணவருக்கு 'நிபா' வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. அவருக்கு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக மாணவருடன் தொடர்பில் இருந்த 86 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிகிச்சை அளித்த 2 செவிலியர்கள் உட்பட நான்கு பேருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால், தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இக்காய்ச்சல் வேகமாக பரவும் என்பதாலும், உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும் கேரள மாநிலத்தை பீதியில் மூழ்கடித்துள்ளது.

இந்த பீதி தமிழகத்தின் பக்கமும் திரும்பி இருக்கிறது.எனவே தமிழக-கேரள எல்லையோர பகுதிக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை போன்ற எல்லையோர மாவட்ட சுகாதாரத்துறையினர் உஷாராக இருக்கும்படி தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: நிபா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் தமிழகத்துக்கு இல்லை. இருப்பினும் கேரள எல்லையில் அமைந்துள்ள நம் மாநில பகுதி சுகாதாரத்துறையினருக்கு, அனைத்து வகையிலும் தயாராக இருக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனைகளில் உடனடியாக தனி வார்டுகள் அமைக்க 'ரெடி'யாக இருக்க அறிவுறுத்தி உள்ளோம்.