கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு சுவர் கண்டுபிடிப்பு!

வியாழன் ஜூலை 11, 2019

மேலும் நூற்றுக்கணக்கான பழமை வாய்ந்த பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 4 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில்,சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொண்மையான மனிதர்களின் நாகரீகம், கலாச்சாரம், பழக்க வழக்கங்களை கொண்ட அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதோடு மட்டுமல்லாது, அவர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள்,சுடுமண் சிற்பம்,சுடுமண் மனித முகம்,தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடு,சுடுமண் காதணி உள்ளிட்ட 13,638 தொண்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஜுன் 13ம் தேதி 5 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் துவங்குவதற்கு முன்பாக ஜிபிஆர்எஸ் என்ற நவீன கருவி மூலம் பூமிக்கடியில் ஸ்கேன் செய்யப்பட்டது.இதன்மூலம் பொருட்கள், கட்டிட அமைப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்ட இடங்களில் மட்டுமே தொல்லியல் குழிகள் தோண்டும் பணி நடந்து வருகிறது.

அதில், கடந்த 25ம் தேதி தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புகளில் உள்ள இரட்டைச் சுவர்கள் கண்டறியப்பட்டன. அந்தச்சுவர் 10 அடி நீளம், 2 அடி அகலம் கொண்டதாக இருந்தது.இந்த சுவர் மேல் பகுதியா அல்லது கடைசி பகுதியா, இதன் தொடர்ச்சி எவ்வளவு நீளம் உள்ளது என்பது குறித்து ஜிபிஆர்எஸ் கருவி மூலம் கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் மேலும் ஒரு தொன்மையான சுவர் கண்டறியப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் மிகவும் தொன்மையான சுடுமண்ணாலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள்,சுடுமண் பானைகள், பாசிமணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பழங்கால பொருட்களும் கிடைத்துள்ளன.