கிளிநொச்சி பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு

வெள்ளி ஜூலை 12, 2019

கிளிநொச்சி- ஊரியான் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டு,விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி- ஊரியான் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவது குறித்து பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் மற்றும் கிராம மட்ட பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பொலிஸாருக்கு பல தடவை,தகவல்களை வழங்கியபோதும் பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்யாத நிலையே தொடர்ந்து காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் ஊரியான் கிராம அலுவலகர் நந்தகுமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊரியான் கனகராயன் ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) நேரடியாகச் சென்றுள்ளனர்.

இதன்போது சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு உழவு இயந்திரத்தினையும் அதன் சாரதியினையும் கைது செய்து விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை டிப்பர் வாகனங்களில் ஏற்றிச்செல்வதற்காக சட்டவிரோதமான முறையில் அகழ்வு செய்யப்பட்டு குவிக்கப்பட்டிருந்த மணலையும் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் விசேட அதிரடிப்படையினர், உழவு இயந்திரத்தையும் அதன் சாரதியையும் கைது செய்ததுடன் தப்பிச்சென்ற உழவு இயந்திரங்களின் விபரங்களையும் சம்பவ இடத்தில் கடமையிலிருந்த கிராம அலுவலர்களிடம் பெற்றுச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.