கிழக்கு மாகாணத்தை பறிகொடுக்கும் அறிகுறி?

வெள்ளி ஜூன் 21, 2019

இனம்,மதம்,மொழி என்ற அடிப்படையில் இந்த அநியாயங்கள் நடந்தாகின்றன.

இதில் ஒன்றுதான் கல்முனையில் இருக்கக் கூடிய தமிழ்ப் பிரதேச செயலகத்தைத் தர முயர்த்துவதைத் தடுக்கின்ற நடவடிக்கையாகும்.

கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு அப்பகுதித் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்தப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கூடாது என முஸ்லிம் அரசியலும் அதனோடு சேர்ந்தவர்களும் கோரிக்கை முன்வைப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

எங்கள் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துங்கள் என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் கேட்பார்களாக இருந்தால் அது நியாயமானது.

இதைவிடுத்து,தமிழ் மக்களுக்கான பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டா மென்று கேட்பதானது அடிப்படை நியாயத்துவ முடையதாகத் தெரியவில்லை.

ஓர் இனத்துக்குக் கிடைக்கக்கூடிய நிர்வாக வசதிகளை இன்னொரு இனம் தடுப்பது,குறித்த பிரதேசத்தை தம் வசப்படுத்துகின்ற பின்னணியில் இடம்பெற முடியுமேயன்றி வேறில்லை.

இங்குதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தூரநோக்கற்ற அரசியல் பிழைப்பு வினையாக அமைந்திருப்பதைக் காணமுடியும்.

அதாவது கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் இனத்தவர் வருவதற்கான சூழ்நிலையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கி விட்டது.

இதன் காரணமாக கிழக்கை முஸ்லிம் மாகாணமாக மாற்றியே ஆக வேண்டுமென்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

தமிழ் மக்களின் காணிகளைக் கபளீகரம் செய்வது, தமிழ் இனத்தவர்களை இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றம் செய்வது, இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை அமைப்பது,அரபு மொழிக் கலாசாரத்தை உருவாக்குவது என்ற மிகப்பெரும் திட்டங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் மிகக் கச்சிதமாகச் செய்து வருகின்றனர்.

ஆனால் எங்கள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் யார் பணம் தந்தாலும் அதை மண்டியிட்டு ஏற்றுக் கொள்வோம் என்பது போலச் செயற்படுகின்றனர்.

இந்த நீசத்தனத்தால் தமிழ் மக்களின் தாயகமாக இருந்த கிழக்கு மாகாணத்தின் பெரும் பகுதியைப் பறிகொடுத்து விட்டோம்.

இத்தகைய ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தான்,கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதை முஸ்லிம் அரசியல்வாதிகளும் அவர்களோடு சேர்ந்த முஸ்லிம் தரப்புகளும் தடுக்க முற்பட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாட்டை முஸ்லிம் தரப்பு செய்யுமாக இருந்தால், அதற்கான பதிலடியை தமிழ் மக்கள் அகிம்சை வழியில் வெளிப்படுத்துவது மிக மிக அவசியமாகும்.

நன்றி வலம்புரி