கிராமங்களில் பரவுகிறது கொரோனா

புதன் மே 13, 2020

இதுவரை நகரத்தில் மட்டுமே அதிகமாக இருந்த கொரோனா கிராமங்களிலும் பரவுவது அச்சத்தை உருவாக்கி உள்ளது. கடும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் தான் கொரோனாவை தடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தாக்குதல் 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை இந்த நோய் நகர பகுதிகளில் தான் அதிகமாக பரவியது. ஆனால், இப்போது கிராம பகுதிகளிலும் பரவ தொடங்கி உள்ளது.

நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கிராம பகுதிகளில் நோய் பரவி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து முதல்-மந்திரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், இப்போது கிராம பகுதிகளில் அதிக அளவில் நோய் பரவி வருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பல இடங்களில் கிராம பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். பொது முடக்கம் காரணமாக அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்து வந்தனர். இப்போது அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இவர்களில் பலருக்கு நோய் தொற்று உள்ளது. அவர்கள் மூலம் கொரோனா கிராமங்களில் பரவி வருகிறது.

மத்தியபிரதேச மாநிலத்தில் 8 மாவட்டங்களில் மே 1-ந் திகதிக்கு பிறகு புதிதாக நோய் பரவி உள்ளது. இவை அனைத்தும் கிராம பகுதிகளிலேயே பரவி இருக்கிறது.

நீமுச் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் திருமண விழா நடைபெற்றது. இதில், பக்கத்து மாநிலமான ராஜஸ்தானை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் அந்த கிராமத்தில் 3 பேருக்கு நோய் பரவி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த நோயாளிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இப்போது அங்கும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மத்தியபிரதேசத்தில் குஜராத்தில் இருந்து சொந்த கிராமத்துக்கு வந்த 3 தொழிலாளர்களுக்கும், மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த 2 தொழிலாளர்களுக்கும் நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் பெருமளவு வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி இருப்பதால் கிராமங்களில் அதிகமாக நோய் பரவி உள்ளது.

தற்போது 65 சதவீத நோயாளிகள் கிராமம் மற்றும் சிறு நகரங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதே போல் தமிழ்நாட்டிலும் தற்போது கிராம பகுதிகளில் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. இதற்கு கோயம்பேடு சந்தை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்த சந்தையில் பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுமைதூக்கும் தொழிலாளர்களாகவும், விற்பனையாளர்களாகவும் இருந்து வந்தனர். சொந்த ஊருக்கு சென்ற அவர்கள் மூலம் கிராமங்களில் நோய் பரவி உள்ளது.

குறிப்பாக அரியலூர், பெரம்பலூர், கடலூர், தர்மபுரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்றவற்றில் உள்ள கிராமங்களில் கோயம்பேடு தொழிலாளர்களால் நோய் தொற்று உருவாகி உள்ளது.
 

ஏப்ரல் 30-ந் திகதி வரை அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்தது.

 

பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் சுகாதார ஊழியர்


அங்கு ஒற்றை இலக்கத்தில் தான் நோய் பரவி இருந்தது. ஆனால், கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் இரு மாவட்டங்களும் இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் 308 பேரும், பெரம்பலூரில் 105 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களை சேர்ந்த பலர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித்தொழிலாளர்களாக இருந்தவர்கள். ஊருக்கு திரும்பிய அவர்கள் மூலம் கிராமங்களில் நோய் பரவி விட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் நோய் தொற்று குறைவாக இருந்தது. கோயம்பேட்டில் வியாபாரிகளாக இருந்த தர்மபுரியை சேர்ந்த 2 பேர் ஊருக்கு திரும்பினார்கள். அவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் கோயம்பேட்டில் டிரைவராக பணியாற்றிய 2 பேர் நோய் தொற்று ஏற்பட்டு உயிர் இழந்த சம்பவமும் நடந்துள்ளது.

தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் கோயம்பேட்டில் இருந்து திரும்பிய சிலர் மூலமாக கிராமங்களில் நோய் பரவி உள்ளது.

இதுவரை நகரத்தில் மட்டுமே அதிகமாக இருந்த கொரோனா நோய் கிராமங்களிலும் பரவுவது அச்சத்தை உருவாக்கி உள்ளது.

கடும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் தான் நோயை தடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

எனவே, மக்கள் விழிப்புடன் இருந்தால் தான் கிராமங்களில் நோய் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.