கல்லைக் கண்டால் நாயைக் காணோம்...

புதன் அக்டோபர் 30, 2019

 

111வணக்கம் பிள்ளையள்.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்று அந்த நாட்களில் ஊரில் சொல்கிறவையள். ஆனால் அதின்ரை அர்த்தம் போன கிழமை சாய்ந்தமருதில் இருந்து என்ரை முசுலிம் நண்பன் தொலைபேசி எடுத்துச் சொன்ன பிறகு தான் எனக்கு விளங்கிச்சுது.

இது தான் பிள்ளையள் சங்கதி. எங்கடை கோத்தபாய மாத்தையாவுக்கு ஒரு விசயம் விளங்கிப் போச்சுது. தான் என்ன தான் கதை விட்டாலும் வருகிற தேர்தலில் தனக்குத் தமிழர்கள் வாக்களிக்கப் போகிறதில்லை என்பது தான்.

அதுக்குள்ளை காஷ்மீருக்கான சிறப்புரிமையை நரேந்திர மோடி பாய் பறிச்ச மாதிரி, பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தை நீக்கப் போவதாக கிட்டடியில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் மகிந்த மாத்தையா ஹின்ற் அடிச்சிருக்கிறார்.

இதே கருத்தைத் தான் மேற்குலக இராசதந்திரி ஒருத்தருக்கு அவரின்ரை ஆசைத்தம்பி பசில் ராஜபக்சவும் சொல்லியிருக்கிறார். நிலைமை இப்படி இருக்கேக்குள்ளை எங்கடை அத்தியடி குத்தியன் டக்கிளசு தேவானந்தா மட்டும் தான் இப்பவும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டம், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல், தமிழ் மக்களின்ரை வாக்கு இல்லாமலே தன்னால் சனாதிபதி ஆகலாம் என்ற தினா
வெட்டிலையும் கோத்தபாய மாத்தையா இருக்கிறதாக ஒரு கதை அடிபடுகிறது. அது தான் பொதுஜன பெரமுனவின்ரை தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினை பற்றி ஒரு வரியைக் கூட கோத்தபாய மாத்தையா சேர்க்கவில்லையாம்.

ஆனாலும் பாருங்கோ கோத்தபாய மாத்தையாவுக்கு முசுலிம் மக்களின்ரை வாக்குகளைப் பெற முடியும் என்று நம்பிக்கை இருக்குது. குறைஞ்ச பட்சம் கிழக்கு மாகாணத்தில் தான் உருவாக்கின ஜிகாத் கும்பலில் இருக்கிற ஆட்களின்ரையும், அவையளின்ரை சொந்த, பந்தங்களின்ரையும் ஆதரவையும் பெறலாம் என்று மனுசன் நம்புகிறாராம்.

அது தான் பிள்ளையள் போன கிழமை அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றை மாத்தையா நடத்தியிருக்கிறார்.

111

அதிலை மாத்தையா சொன்னவராம், ‘நான் ஆட்சிக்கு வந்தால் சாய்ந்தமருதை தனிப் பிரதேச செயலகமாக மாற்றுவேன். கிழக்கு மாகாணத்தில் மட்டும் இல்லை நாடு முழுவதும் முசுலிம்களுக்கு நான் தான் பாதுகாப்பாக இருப்பேன்.’

அவர் இப்படிச் சொல்லிப் போட்டு ஒரு நரிச் சிரிப்பு சிரிச்சிருக்கிறார்.

ஏற்கனவே கோத்தபாய ஒரு சைக்கோ என்கிறது கன பேருக்குத் தெரியும். அப்படி இருக்கேக்குள்ளை அவர் நரிச் சிரிப்பு சிரிச்சது பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் தலைவர்களுக்கு சங்கடத்தைக் கொடுத்திருக்குது.

ஆனாலும் இதைத் தன்ரை முட்டைக் கண்ணால் கவனிச்ச மகிந்த மாத்தையா உடனே ஒலிவாங்கியைப் பிடிச்சுக் கொண்டு சொன்னவராம், முசுலிம் மக்களைப் ‘புலிப் பயங்கரவாதிகளிடம்’ இருந்து பாதுகாத்தது போல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருந்து அவையளைத் தானும், தன்ரை தம்பி கோத்தபாயவும் பாதுகாப்பீனம் என்று.

இதைக் கேட்டதும் யாரோ பேருவளையைப் பற்றி முணுமுணுத்திருக்கீனம்.

உடனே மகிந்த மாத்தையா சொன்னவராம்: ‘பேருவளை கலவரம் நடக்கும் பொழுது நானும், பாதுகாப்புச் செயலாளரும் நாட்டில் இருக்கவில்லை. ஆனால் விடயத்தைக் கேள்விப்பட்டதும் நாங்கள் இரண்டு பேரும் அவசரமாக நாடு திரும்பி, உணவு கூட உண்ணாமல் கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தனாங்கள்....’

அத்தோடு மகிந்த மாத்தையா நின்றிருந்தால் பரவாயில்லை பிள்ளையள். மனுசன் சொன்னவராம்: ‘நாங்கள் உங்களை நாய்கள் போல் பாதுகாப்போம்.’

உதைக் கேட்டதும் தான் என்ரை முசுலிம் நண்பன் கல்லைத் தேடியிருக்கிறார். ஆனாலும் பாவம் கிழவன். ஆளுக்கு வயது போனதில் கண் ஒழுங்காகத் தெரியவில்லையாம். ஒரு மாதிரிக் குனிஞ்சு, வளைஞ்சு நிலத்தைத் தொட்டுக் கூழங்கல் ஒன்றைத் தூக்கினால், அதுக்குள்ளை கூட்டத்தை முடிச்சுக் கொண்டு மகிந்தரும், கோத்தபாயவும் போய் விட்டீனமாம்.

இது மெய்யான சங்கதி பிள்ளையள். இதை நான் குசும்புக்குச் சொல்லவில்லை.

இதுக்குள்ளை போன கிழமை இன்னொரு பகிடியும் நடந்திருக்குது பாருங்கோ.

மகிந்த மாத்தையாவின்ரை காலத்தில் நடந்த கொலைகள், ஆட்கடத்தல்கள் எல்லாவற்றுக்கும் கோத்தபாய தான் பொறுப்பு என்று அவரின்ரை அடிதடி அமைச்சராக இருந்த மேர்வின் சில்வா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

உங்களுக்கு ஞாபகம் இருக்குதோ தெரியாது பிள்ளையள், கொஞ்சக் காலத்துக்கு தன்ரை ஊடகத்துறை அமைச்சராக மேர்வின் சில்வாவைத் தான் மகிந்த மாத்தையா நியமிச்சவர்.

ஊடகத்துறை அமைச்சர் என்றதும் மனுசன் நினைச்சிட்டார், தான் எந்த ஊடகக்காரனையும் சாத்துச்சாத்தலாம் என்று. பிறகென்ன?

வேட்டியை மடிச்சு சண்டிக் கட்டு கட்டிக் கொண்டு, ஊடகவியலாளர்மாரை வெருட்டுகிறதும், ஒளிப்பதிவுக் கருவிகளை உடைக்கிறதுமாக ஆள் பெரிய விளையாட்டு காட்டிக் கொண்டு திரிஞ்சவர்.

கடைசியில் அவரை ஊடகத்துறை அமைச்சர் என்று அழைக்கிறதை விட்டுப் போட்டு, அடாவடி அமைச்சர் என்றும், அடிதடி அமைச்சர் என்று சிங்கள ஊடகவியலாளர்களே அழைச்சவையள் என்றால் பாருங்கோவன்.

அவர் தான் இப்ப கோத்தபாயவின்ரை திருவிளையாடல்கள் பற்றித் திருவாய் மலர்ந்திருக்கிறார்.எல்லாம் காலம்.

இப்ப நான் கல்லைத் தேடுகிறன். ஆனால் நான் கல்லை எடுக்கிறதுக்குள் நாய் ஓடிப் போய்விடும்.
நான் சொல்கிறது உங்களுக்கு விளங்கினால் சரி.வேறை என்ன பிள்ளையள்? அடுத்த முறை வெளிக்
கிடேக்குள்ளை கல் ஒன்றையும் காற்சட்டைப் பையுக்குள்ளை வைச்சுக் கொண்டு திரியவேணும்.
இதை சாய்ந்தமருதில் இருக்கிற என்ரை முசுலிம் நண்பனிட்டையும் சொல்ல வேணும்.

வரட்டே?

நன்றி: ஈழமுரசு