கள்ளச்சாரயத்தை நிறுத்த துப்பில்லை போதையொழிக்க வந்துவிட்டார்கள்!

சனி மார்ச் 16, 2019

25வருடமாக சட்ட விரோதமாக மதுபானம் விற்பனைசெய்யும் ஒருவரின் செயற்பாட்டினை கட்டுப்படுத்தமுடியாத அதிகாரிகள் எவ்வாறு போதைவஸ்து பாவினையினை ஒழிக்கப்போகின்றார்கள் என மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் கேள்வியெழுப்பினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதையொழிப்பு செயற்றிட்டத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது மீளாய்வுக்கூட்டம் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில உள்ள 14 பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர்கள்,மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள்,மதுவரித்திணைக்கள அதிகாரிகள்,கல்வி திணைக்களம்,சமூக சேவைகள் திணைக்களம்,சுகாதார திணைக்களம் என பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் காரசாரமான கருத்துகளை முன்வைத்தார்.

குருக்கள்மடம் செட்டிபாளையம் எல்லை வீதியில் செட்டிபாளையத்தினை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 25 வருடத்திற்கு மேலாக சட்ட விரோத மதுவிற்பனையில் ஈடுபட்டுவருகின்றார்.இது தொடர்பில் நானே பல தடவைகள் உரிய தரப்பினருக்கு அறிவித்தபோதும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

மதுவரித்திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் வரையில் குறித்த பிரச்சினை தொடர்பில் கொண்டுசென்றுள்ளேன்.ஆனால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

குறித்த நபர் சட்ட நடவடிக்கைக்கு சிலவேளைகளில் உட்படுத்தப்படுகின்றார்,ஆனால் மீண்டும் வந்து சட்ட விரோத மதுவிற்பனையில் ஈடுபடுகின்றார்.

25வருடமாக இவ்வாறு சட்ட விரோத மதுவிற்பனையில் ஈடுபடுபவரையே கட்டுப்படுத்தமுடியாத இந்த அதிகாரிகள் எவ்வாறு போதையொழிப்பினை மேற்கொள்ளப்போகின்றார்கள் எனவும் கேள்வியெழுப்பினார்.

அத்துடன் குறித்த நபர் தொடர்பில் நீதிமன்றில் முறையான வழக்கு பதிவுசெய்யப்படாத காரணத்தினாலேயே அவர் இலகுவில் வெளியில் வந்து மீண்டும் தனது தொழிலை மேற்கொள்வதாகவும் பிரதேச செயலாளர் தயாபரன் சுட்டிக்காட்டியதுடன்...

மதுவரித்திணைக்களத்தினால் குறித்த நபர் தொடர்பில் நீதிமன்றில் கடந்த ஐந்து வருடத்தில் தொடரப்பட்ட வழக்கின் விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில் தான்கோருவதாகவும் அதனை மதுவரித்திணைக்களம் தரவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தார்.