கல்முனை சத்தியாக்கிரக போராட்டத்திற்கு எதிராக;முஸ்லீம் சமூகம் போராட்டம்!

புதன் ஜூன் 19, 2019

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி தமிழ் மக்கள் சகிதம் சிங்கள பிக்கு முன்னெடுத்துவரும் போராட்டம் முனைப்படைந்துள்ள நிலையில் தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளது.

நாளை கல்முனை மாநகரில் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே வேளை கல்முனை மாநகர வளாகத்தில் முக்கிய உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வர்த்தக சமூகத்தினரின் பங்குபற்றலுடன் இன்று மாலை கூட்டமொன்று நடந்துள்ளது.

கூட்டத்தின் முடிவில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்ம் தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் போராட்டமானது பொதுப்போக்குவரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அவசரகால சட்ட விதிகளுக்கமைய அப்போராட்டத்தை சமூக நல்லிணக்கம் கருதி அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை பௌத்த பிக்கு சகிதம் முன்னெடுக்கப்படும் போராட்டமானது மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

கடந்த 30 வருடங்களாக தரமுயர்த்தப்படாமல் சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் இழுத்தடிக்கப்பட்டுவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு அரசை கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டம் 17 ஆம் திகதி கல்முனையில் ஆரம்பமாகிநடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.