கம வாசம்

செவ்வாய் மே 19, 2020

புடலம் பூக்கள் பூத்திருக்கிற
பந்தலின் கீழிருக்கிறது மனசு.

பாவற் கொடி வாசத்துக்குள்
பதுங்கியிருக்கிற
சூரிய வெள்ளைக் காயில்
சுகிக்கிறது கண்கள்.

பிஞ்சு பிடித்திருக்கும்
தக்காளிச் செடியின் மணத்தில்
சிறகு கட்டுகிறது இதயம்.

மண் வெடித்துப் பிளக்கும்
விதைக் கோது சுமந்த
குருத்து வெள்ளைத் தலை முளையில்
ஈரம் ஊறுகிறது நிலக்கால்.

நிலம் முட்டும் கத்தரிக்காய் நாவலில்
கருணை பொழிகிறது காலம்.

நீர்க் குமிழாடும் மிளகாய்ச் செடியிலையில்
மயிர்க் கூச்செறிகிறது கைகள்.

வண்ணத்துப் பூச்சி வந்தமரும்
வெங்காயப் பூவின் நுணியில்
அழகாகிறது வாழ்க்கை.

முற்றிப் பழுக்கும் கதலிக் குலையின்
இடைப் பழச் சீப்பில் உட்கார்ந்திருக்கும்
மைனாவின் மஞ்சட் பார்வையில்
நான் அட்சய சுரபியாகிறேன்.

கிளிகள் பறக்கும் பயற்றங் கொடி வானத்தில்
எனக்கு மட்டுமாய் பூக்கிறது வானவில்.

வெண்டிச் செடிப் புளுவின்
இலை நடனத்தில்
எந்தத் தொலைக் காட்சிகளும் காட்டாத
நவரசம் உருகி வழிகிறது.

“ம்மா… ..” என்று எனையழைக்கும்
மடிப் பசுவின் தேவ அழைப்பில்
தாயுமானவனின் மார்புகள் சுரக்கின்றன.

இத்தனை
செல்வந்தங்களுக்கே நடுவே
செழித்துச் சிரிக்குமென்
மண்ணப்பிய மனதை
தொட்டாற் சுருங்கியாக்கி விடுகிறது.

“அப்பா ஒரு விவசாயி” என
உரத்துச் சொல்ல
வெட்கித் தயங்கித் தலை குனியும்
எனது கடைசி மகனின்
ஆறாம் வகுப்புக் கரும்பலகை முற்றம்.

தீபிகா