கம்பளை ஆசிரியையின் மரணத்திற்கான காரணம் வெளியானது!

வியாழன் அக்டோபர் 10, 2019

கம்பளை பகுதியில்  காணாமல் போய், விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியையின் மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகிவுள்ளது.

ஆசிரியை கொலை செய்யப்பட்டிருக்கலாமென பொலிசார் முன்னர் சந்தேகித்திருந்த போதும், பிரேத பரிசோதனை முடிவுகளின் பின்னர் வேறு காரணத்தினாலேயே அவர் உயிரிழந்திருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

அவர் நடந்து செல்லும் போது நீரோடைக்குள் இடறி விழுந்து, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாமென்றே பொலிசார் தற்போது தெரிவிக்கின்றனர்.

கம்பளை கீரபன பகுதியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியைான சந்திம நிசன்சலா ரத்னயக்க (27) கடந்த 1ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில், கடந்த 7ஆம் திகதி மாலை அவது உடல் விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்டது.

அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் நிசன்சலாவின் முன்னாள் காதலன் தொல்லை கொடுப்பதை, மரண விசாரணையில் பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து அவரை பொலிசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருந்தனர்.

இதேவேளை, நேற்று (9) கண்டி பொது வைத்தியசாலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டது. அறிக்கையில், கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இதையடுத்தே, நீரோடையில் வழுக்கி விழுந்திருக்கலாமென்ற சந்தேகத்தில் நேற்று, ஆசிரியை காணாமல் போன பகுதியில் பொலிசாரும், தடயவியல் பொலிசாரும் ஆய்வு மேற்கொண்டனர்.

நிசன்சல வழுக்கி விழுந்திருக்கலாமென கருதப்படும் பகுதியை பொலிசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அவரது வீட்டிற்கும், இறுதியாக சி.சி.ரி.வி கெமராவில் பதிவாகிய இடத்திற்குமிடையில் பாதுகாப்பற்ற பக்க வடிகால்கள் உள்ளன.

கீரபன பகுதியில் உள்ள ரன்மல்கடுவ வீதிக்கு செல்லும் ஒடுங்கிய- ஆபத்தான பாதை இது. பக்க கால்வாயில் கொங்கிரீட் தளம் போடப்பட்டிருந்தாலும் பல இடங்களில் அது அகற்றப்பட்டு, பாதுகாப்பற்ற பாதையாக உள்ளது. மழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்திப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 3 ஆம் திகதி மாலை வேலையிருந்து திரும்பிய ஒரு பெண் அந்த கால்வாய்க்குள் விழுந்துள்ளார். அவர் அடித்துச் செல்லப்பட்ட போதும், பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார். எனினும், அவரது பணப்பை, கையடக்கத் தொலைபேசி என்பன நீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது.

உயிரிழந்த நிசன்சலா, கால்வாய்க்குள் தவறி விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் நேற்று தடயவியல் பொலிசார் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த ஆசிரியையின் இறுதிச்சடங்குகள் நேற்று கம்பளை பொது மயானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.