கஞ்சி குடிக்க வழியில்லை, குல்லாவில் சரிகை வேலை!

புதன் அக்டோபர் 02, 2019

வணக்கம் குஞ்சுகள்.

எல்லோரும் கொதிச்சுப் போயிருக்கிறியள் எண்டது விளங்குது. பின்னை என்ன பிள்ளையள்? சூடு, சுரணை இருக்கிறவைக்கு கோபம் வரும் தானே?

முல்லைத்தீவு எங்கடை தமிழரின்ரை மண். தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் ஆண்ட மண். எங்கடை ஈழத்துக் கரிகாலன் படை நடத்திப் பகையின்ரை கதை முடித்த மண். அந்த மண்ணில் வந்து  ஆமத்துறுமார் கொட்டமடிக்கிறாங்கள் என்றால், அதை நாங்கள் எல்லோரும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறது?

111

எனக்கு ஒரு விசயம் மட்டும் விளங்கவில்லை பிள்ளையள். அரச மரத்தைப் பிடிச்ச சனி, பிள்ளையாரையும் பிடிச்ச கதையாக எதுக்கு எங்கடை தமிழீழத்தில் இருக்கிற பிள்ளையார் கோவில்களை எல்லாம் இலக்கு வைத்து ஆமத்துறுமார் களமிறங்கியிருக்கிறானுகள் என்று.

உங்களுக்கு ஞாபகம் இருக்குதோ தெரியாது, எங்கடை தம்பி பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கு
வதற்கு முதல் திருகோணமலையில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. அது திருகோணமலையிலை கடற்
கரையோரத்தில் இயங்கின ஒரு சின்ன பிள்ளையார் கோவில்.

ஒரு நாள் காலையில் எங்கட சனம் மோதகத்தோடு கோவிலுக்குப் போனால், அங்கே பிள்ளையார் இருக்க வேண்டிய இடத்தில் புத்தர் தியானம் செய்து கொண்டிருந்தவர். சரி, பூசை வைக்கிற ஐயர் எங்கே நிற்கிறார் என்று சனம் தேடினால் அவரின்ரை இடத்தில் புத்த பிக்கு ஒருவர் தன்ரை மொட்டந்தலையைத் தடவிக் கொண்டு இருந்தவராம்.  

என்ன தான் சங்கதி என்று சனம் அவரிட்டை கதை கேட்க, அவர் கடலை நோக்கிக் கையைக் காட்டியிருக்கிறார்.

என்ன நடக்கிறது என்று விளங்காமல் சனம் முழுசிக் கொண்டிருக்க அங்கே வந்த சிங்களப் பொலிஸ்காரன் ஒருத்தன் சொன்னவனாம், ‘உங்கடை பிள்ளையார் இராத்திரி கடலுக்குள் குளிக்கப் போனவர். அப்பிடியே மூழ்கிப் போய் விட்டார்.

அது தான் இப்ப இஞ்சு புத்தர் வந்திருக்கிறார். இனி இந்த இடம் புத்தர் கோவிலாக மாறப் போகுது.’ பிறகென்ன, சிங்களப் பொலிஸ்காரனையும், ஆமத்துறுவையும் நோக்கி மண்ணை வாரி இறைச்சுப் போட்டு சனம் கிளம்பிப் போய்விட்டுது.

போன சனம் போனது தான். இப்பை அந்த இடத்தில் நிரந்தரமாக புத்தர் கோவில் ஒன்று இருக்குது.

இந்தக் கதை நடந்து ஐம்பது வருசம் ஆகப் போகுது பிள்ளையள். ஆனால் இதே கதை தான் இப்ப முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோவிலும் நடந்து கொண்டிருக்குது. காலம் காலமாக எங்கடை சனம் பொங்கலிட்டு, மோதகம் படைச்சு வழிபட்ட நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் புத்த விகாரை ஒன்றையும் கட்டி, இப்ப கோவில் காணியில் பிக்குவின்ரை உடம்பையும் எரிச்சுச் சிங்களவன் சுடுகாடு ஆக்கிவிட்டான்.

இதைத் தடுத்து நிறுத்துவதற்கு எங்கடை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்ரை சட்டத்தரணிமார் கடுமையாக முயற்சி செய்தவையள்.

தம்பி சுகாசும், மணிவண்ணனும் தங்களால் முடிஞ்ச எல்லாவற்றையும் செய்தவையள். அதுக்காக அவங்களை நாங்கள் பாராட்ட வேண்டும்.

இப்ப கொஞ்சக் காலத்துக்கு முதல் யாழ் கோட்டை முற்றவெளி முனியப்பர் கோவிலுக்கு முன்னால் இன்
னொரு பிக்குவின்ரை உடம்பை ஆமத்துறுமார் எரிச்ச போது கூட அதை எதிர்த்து இந்தத் தம்பிமார் தான் நீதி
மன்றத்தில் வழக்குப் போட்டவையள்.

ஆனால் சட்டம் என்ன சட்டம் என்று, தாங்கள் நினைச்சபடி அங்கேயும் இராணுவம் - பொலிஸ் பாதுகாப்பு வழங்க பிக்குவின்ரை உடம்பை ஆமத்துறுமார் எரிச்சவையள் தான்.

உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமே என்ற கதையாக இனி அடுத்தது நல்லூர் கோவில் வளாகத்திலும் இன்னொரு பிக்குவின்ரை உடம்பைக் கொண்டு வந்து எரிப்பாங்கள். கேட்டால் அங்கே ஒரு காலத்தில் ஆறாம் புவனேகபாகு கட்டின புத்த விகாரையயான்றின் எச்சம் கிடந்தது என்று சொல்லிக் கதையளப்பாங்கள்.

அதையும் எங்கடை சனம் பார்த்துக் கொண்டு தான் இருக்கப் போகுது. எனக்கு வாற கோபத்துக்கு...

அந்தக் காலத்தில் பபிலோன் சாம்ராச்சியத்தில் இளம் வீரர்களைப் போருக்குத் தயார்படுத்தும் போது சொல்கிறவையளாம், ‘நூறு கழுதைக்கு ஒரு புலி தலைமை தாங்கினால் அந்த கழுதைகள் புலி போல் சண்டை பிடிக்கும், ஆனால் நூறு புலிகளுக்கு ஒரு கழுதை தலைமை தாங்கினால், அந்த நூறு புலிகளும் கழுதைகள் மாதிரி சும்மா கத்திக் கொண்டு தான் இருக்கும்’ என்று. இது தமிழரின்ரை விசயத்திலும் பொருந்தும் பாருங்கோ.

எப்ப தம்பி பிரபாகரன் படை நடத்தினாரோ, அண்டைக்கு நாங்கள் எல்லோரும் புலிகளாகத் தான் இருந்தனாங்கள். சமாதான காலத்தில் தென்னிலங்கை பக்கத்தால் தமிழன் போனால் ஒரு தனி மரியாதை. அண்டைக்கு எங்களைப் பார்த்து வணக்கம் சொன்ன அப்புகாமியும், பொடி மல்லியும் இண்டைக்கு எங்கடை ஊரில் வந்து கல் எறியிறானுகள்.

நீராவியடி பிள்ளையார் கோவிலில் ஆமத்துறுவின்ரை உடம்பை எரிக்கிறதுக்கு சிங்களவன் தயாராகியதும் எங்கடை சனம் கொதிச்சு போனது உண்மைதான். ஆனாலும் சிங்களவன் கத்தியோடு நிற்கும் போது எங்கடை சனம் கத்திக் கொண்டு நிற்கிறதில் என்ன அர்த்தம் இருக்
குது?
அடுத்த நாள் வீதிகளில் இறங்கி எங்கடை சனம் பேரணி நடத்தினாலும், உதெல்லாம் எங்கடை எதிர்ப்பைச் சர்வதேசத்துக்கு காட்டுகிறதுக்குத் தான் உதவுமே தவிர, அடுத்த முறை தமிழரின்ரை இன்னொரு கோவிலை ஆமத்துறுமார் சுடுகாடு ஆக்கிறதைத் தடுத்து நிறுத்தாது பாருங்கோ.

என்னைப் பொறுத்த வரை பிள்ளையள், ஒன்றில் நாங்கள் தம்பியின்ரை வழியில் போக வேண்டும், அல்லது தந்தை செல்வா காட்டின ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கி சிங்கள அரச நிர்வாக இயந்திரத்தைத் தமிழீழ தாயகத்தில் முற்றாக முடக்க வைக்க வேண்டும்.

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான் என்று அந்த நாளில் சும்மாவே சொன்னவையள்? அதை விட்டுப் போட்டு நாலு கண்டனப் பேரணிகளை நாங்கள் நடத்துவதால் எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை.

இப்ப எலெக்சன் சீசன். இனி தமிழ் மக்களிட்டை வாக்குப் பிச்சை கேட்டு சஜித் பிரேமதாசா வருவார். அவருக்குப் பரிவட்டம் கட்டிக் கொண்டு எங்கடை கிழட்டுச் சம்பந்தரும், சுமந்திரன் மாத்தையாவும் வருவீனம்.

கஞ்சி குடிக்க வழியில்லை, குல்லாவில் சரிகை வேலை என்கிற கதையாகத் தான் அவையின்ரை அரசியல் சித்து விளையாட்டு இருக்குது.

எங்கடை கூட்டமைப்புக்காரர் கூத்தடிக்கிறதுக்கு ஒரு விதத்தில் எங்கடை சனத்தின்ரை ஒரு பகுதி சீர்கெட்டுக் கிடக்கிறதும் ஒரு காரணம் பாருங்கோ.

குந்தி இருந்து குதர்க்கம் பேசி விட்டுப் போகிற நிலையில் தான் இப்பை எங்கடை சனத்தின்ரை ஒரு பகுதி இருக்குது. ஐம்பது வருசத்துக்கு முதல் திருகோணமலையில் இருந்த பிள்ளையார் கோவிலை புத்தர் கோவில் ஆக்கிப் போட்டு, அங்கிருந்த பிள்ளையார் சிலையைக் கடலுக்குள் சிங்களவன் எறியேக்குள்ளை எப்பிடி எங்கடை சனம் இருந்ததோ, அப்படித் தான் இப்ப எங்கடை ஆட்க ளில் ஒரு தொகுதி ஆட்கள் இருக்கீனம்.

அவையளுக்கு எல்லாம் கோவிலுக்கு போறது இப்ப பிக்னிக் போவது மாதிரி பாருங்கோ.

இப்ப கொஞ்சக் காலத்துக்கு முதல் கோடை விடுமுறையில் நான் பிரான்ஸ் லூட்ஸ் மாதா கோவிலுக்கு போயிருந்த பொழுது எங்கடை சனம் நடந்து கொண்டதைப் பார்க்கேக்குள்ளேயே எனக்கு விசயம் விளங்கி விட்டது.

எல்லா வெள்ளைக்கார பக்தர்களும், பயபக்தியோடு திரிய, அங்கை வந்திருந்த ஒரு தமிழ்ப் பெடிப் பிள்ளை, யேசுநாதரின்ரை சிலைக்குப் பக்கத்தில் தன்ரை மனுசியைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு, மனுசியின்ரை தங்கச்சியின்ரை தோளிலும் கையைப் போட்டுக் கொண்டு படம் எடுக்கிறார்.

பிறகு சொல்கிறார், ‘இது தான் வள்ளி-தெய்வானைக் கோலம்’ என்று. உடனே அவரின்ரை மனுசி அவரின்ரை கன்னத்தில் செல்லமாகத் தடவ, தங்கச்சியார் வெட்கப்பட்டு, வளைந்து நெளிந்து கீழே இறங்கி போனவா.

எனக்கு வந்த கோபத்துக்கு ஆளைப் பிடிச்சு செவிட்டைப் பொத்தி இரண்டு குடுக்க வேணும் மாதிரித் தான் இருந்தது. பிறகு என்ன என்று பார்த்தால் ஆள் அதில் இருக்கிற மதிலில் ஏறி நின்று குதிக்கிற மாதிரி போஸ் குடுத்துக் கொண்டு சொல்கிறார், ‘நான் தற்கொலை செய்கிறன்’ என்று. ஒன்றில் கோவிலுக்கு வந்தால் சாமி கும்பிட வேணும். இல்லை கூத்தடிக்க வேண்டும் என்றால் வேறை எங்கையாவது போய் கூத்தடிக்க வேணும்.

இது தான் ஊரிலையும் நிலைமை பாருங்கோ.

ஏதோ, நான் சொல்கிறதைச் சொல்லிப் போட்டேன். தமிழரின்ரை இன்னொரு கோவிலைச் சிங்களவன் சுடுகாடு ஆக்கிறதுக்கு முதல் எங்கடை சனமும், அரசியல்வாதிகளும் சிந்தித்து நடந்தால் தான் உண்டு. வரட்டே?

நன்றி: ஈழமுரசு