கனிமொழிக்கு எதிரான வழக்கு!

திங்கள் அக்டோபர் 14, 2019

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி, வேட்புமனுவில் கணவரின் வருமானத்தைத் தெரிவிக்கவில்லை என்றும் ஆரத்தி எடுத்தவர்களுக்குப் பணம் வழங்கினார் என்றும் அவரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரியும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சந்தான குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனிமொழிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என, தமிழிசை தரப்பு வழக்கறிஞர் கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அம்மனுவில், தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை வாபஸ் பெறுவது குறித்து அரசிதழில் வெளியிடுமாறு உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

வழக்கு இன்று (அக்.14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு வாபஸ் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டதாக பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதியளித்தார். மேலும், வழக்கு வாபஸ் குறித்து தலா ஒரு தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் தமிழிசைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், தூத்துக்குடி தேர்தலில் கனிமொழி வெற்றியை எதிர்த்து வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த வழக்கில் பதில் தருமாறு சந்தானகுமாருக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.