கனடா - சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கி 7 பேர் பலி!

சனி நவம்பர் 30, 2019

கனடாவில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

கனடா நாட்டின் டொராண்டோ பகுதியில் இருந்து நேற்று தனியாருக்கு சொந்தமான ஒரு சிறிய ரக விமானம் கிங்ஸ்டன் நகர் நோக்கி பயணித்தது. அந்த விமானத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் இருந்தனர்.

லோக் அண்டரியோ என்ற பகுதியை விமானம் கடந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

இந்நிலையில், அந்நாட்டின் கிரிக்போர்ட் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டிற்குள் விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதை மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேரும் உயிரிழந்து விட்டதாக காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.