கனடா டொரோண்டோவில் 2வது தமிழர் மரபு மாநாடு 2020!

புதன் பெப்ரவரி 12, 2020

கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 1ம் தேதி கனடா டொரோண்டோவில் 2வது தமிழர் மரபு மாநாடு 2020 மிகவும்
 சிறப்பாக நடைபெற்றது. அன்று மிக அதிகமாகப் பனிப்பொழிவு இருந்த போதிலும் சுமார் 800க்கும் 
மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநாட்டினை சிறப்பித்தனர்.

மாநாடு சரியாக மாலை 6:00 மணியளவில் கனடிய தேசியகீதம், தமிழ் மொழி வாழ்த்து பாடல்களை கனடா
 அன்னைத்  தமிழ் ஒன்றிய குழந்தைகள் பாட, அடுத்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை கனடா தமிழ்ச் சங்கத்தின்
 மகளிர், குழந்தைகள் குழு பாடியதும், ஒரு நிமிடம் உலக மக்கள் சமாதானதிற்காக மௌனம் அனுசரிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் முதல் பகுதியாகவும் இலக்கிய நிகழ்ச்சிகள் இரண்டாம் பகுதியாகவும்
 மாநாடு நடைபெற்றது. 150க்கும் மேற்பட்ட நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற்றது
 மாநாட்டின் சிறப்பு. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து பிரபல அரசியல் தலைவரும், இலக்கியவாதியுமான "நளினச் சொல் நாயகர்" திரு.நாஞ்சில் சம்பத் அவர்களும், விஜய் தொலைக்காட்சி 
புகழ் நடிகர் மற்றும் நாட்டிய கலைஞருமான திரு.அமுதவாணன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கலை நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக திருமதி.ராஜமல்லிகா மோகன்ராஜின் பரதநாட்டியம் அரங்கேறியது.
 தொடர்ந்து திருமதி.ரேணுகா தேவி விக்னேஸ்வரன் அவர்களின் கலையருவி நாட்டியப்பள்ளியின் மாணவ, மாணவியர்களின் பாரம்பரிய நடனமும், இனிதா நடன குழிவினரின் பாரம்பரிய திரையிசை நடனங்களும் இடம்பெற்றது. அடுத்து கனடா தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழர் மரபு மாநாடு அமைப்புகளின் நிறுவனத் தலைவர் திரு.வள்ளிக்கண்ணன் மருதப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து இந்தியாவில் இருந்து
 வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் திரு.நாஞ்சில் சம்பத் அவர்களையும், திரு.அமுதவாணன் அவர்களையும் 
அவைக்கு அறிமுகப்படுத்தினார். அடுத்து சிறுமி.கம்சாயினி சாந்தகுமார் சிறிய தமிழுரையாற்றினார்.

பார்வையாளர்கள் ஆரவாரத்தின் மத்தியில் நடிகர்.அமுதவாணின் காமெடி நிகழ்ச்சி கலைகட்டியது. அடுத்து திருமதி.குலநாயகி விவேகானந்தனின் தென்னாசிய ஒண்டாரியோ இசைப்பள்ளியின் சுமார் 30க்கும் மேற்பட்ட 
மாணவ மாணவியர்களின் இசை நிகழ்ச்சியும், பல்கலைக்கழக மாணவ மாணவியரின் ஆர்மோனிய இசை
 நிகழ்ச்சியும் மிகவும் சிறப்பாக நடந்துமுடிந்தது. முதல் பகுதியின் இறுதியாக ஸ்டார் நடனப்பள்ளி குழுவினரின்
 தமிழ் திரையிசை நடனமும், கனடா தமிழ்ச் சங்கத்தின் பெண்மணிகளின் நாட்டுப்புற நடனமும், குழந்தைகளின் இரண்டு நாட்டுப்புற திரையிசை நடனங்களும் அரங்கேறியது.

மாநாட்டின் மணிமகுடமாக 2020ம் ஆண்டிற்கான "தமிழ் மரபு காவலர் விருதுகள்" கனடா ஒண்டாரியோ
 மாநில பாராளமன்ற உறுப்பினர் திரு.லோகன் கணபதி முன்னிலையில் விருதுகள் வழங்கப்பட்டது. 
திரு.நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு தமிழர் சமூக ஆளுமைக்காகவும், திரு.சிவன் இளங்கோ அவர்களுக்கு 
தமிழ் சமூகப் பணிக்காகவும், திரு.ச.செல்வராஜ் அவர்களுக்கு தமிழ் தொல்லியல் ஆராய்ச்சிக்காகவும், திரு.சா.வே.பஞ்சாட்சரம் அவர்களுக்கு மூத்த தமிழ் படைப்பாளராகவும், திருமதி.வசந்தா டேனியல் அவர்களுக்கு
 தமிழ் ஆடற்க் கலைக்காகவும், திருமதி.கனகேஸ்வரி நடராசா அவர்களுக்கு தமிழ் கல்வி மேம்பாட்டு 
பணிக்காகவும், திரு.சீறிஸ் காந்தராசா தங்கராசா அவர்களுக்கு தமிழ் இசைக் கலைக்காகவும், மறைந்த
 திரு.கருணா வின்சென்ட் அவர்களுக்கு தமிழ் ஓவியக் கலைக்காகவும் ஆக எட்டு "தமிழ் மரபு காவலர்"
 விருதுகளை வழங்கி கௌரவித்தது தமிழர் மரபு மாநாடு அமைப்பு.

மாநாட்டின் இரண்டாவுது பகுதியாக இலக்கிய நிகழ்வு தொடர்ந்தது. நளினச் சொல் நாயகர் திரு. நாஞ்சில்
 சம்பத் தலைமை வகிக்க "தமிழர் மரபுகள்" என்ற தலைப்பில் சிந்தனை களம் நிகழ்ச்சி ஆரம்பமானது. கலை - திரு.ரசனை ஸ்ரீராம், விளையாட்டு - திருமதி.வனிதா ராஜேந்திரன், பண்பாடு - திரு.பொன்னையா விவேகானந்தன், உறவு - திருமதி.கோதை அமுதன் மற்றும் வீரம் - திரு.பொன். அருந்தவநாதன் ஆகியோர் ஐந்து தலைப்புகளில்
 மிகவும் உணர்பூர்வமாக பேசினார்கள். இறுதியில் திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள் மரபுகளின் முக்கியத்துவம் 
குறித்து பேசி அனைவரையும் சிந்திக்க வைத்தார். சிந்தனை களம் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

அணைத்து நிகழ்ச்சிகளையும் திரு.சுதாகரன் பஞ்சாச்சரம் மற்றும் திருமதி.உஷா ராஜ் ஆகிய இருவரும் 
மிகவும் நேர்த்தியாகவும் நேரக்கட்டுப்பாட்டுடனும் தொகுத்து வழங்கினார்கள். நிறைவாக மாநாட்டின் 
தலைவர் திரு.வள்ளிக்கண்ணன் மருதப்பன் நிகழ்ச்சியின் வெற்றிக்கு உழைத்த தன்னார்வு தொண்டர்களுக்கும்,
 ஊடக நண்பர்களுக்கும், அனுசரணை வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு விழாவினை நிறைவு செய்தார்.