கனடாவில் மூன்றாவது முறையும் பிரதமராகிறார் ட்ரூடோ!

செவ்வாய் செப்டம்பர் 21, 2021

 கனடாவில் மீண்டும் லிபரல் கட்சியின் தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் பதவிக்கு வரவுள்ள நிலையில், மூன்றாவது முறையாகவும் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராகவுள்ளார்.
    
நேற்று நடந்த தேர்தலில், அளிக்கப்பட்ட வாக்குகளில்,எட்டு இலட்சம் தபால் வாக்குகள் இன்று காலையிலேயே எண்ணப்படவுள்ள நிலையில், இதுவரை வெளியாகியுள்ள முன்னணி நிலவரங்களின்படி, லிபரல் கட்சி 158 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் அல்லது முன்னணியில் உள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான கொன்சர்வேட்டிவ் கட்சி 119 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

புளொக் கியூபெக் கட்சி 34 தொகுதிகளிலும், என்டிபி கட்சி 25 தொகுதிகளிலும், பசுமைக் கட்சி 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

கனேடிய மக்கள் கட்சி எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறும் நிலையில் இல்லை.

அதேவேளை சிறிய வாக்கு வித்தியாசத்தில் உள்ள தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு நிலைமைகளில் இன்று மாற்றங்கள் ஏற்படலாம் . எவ்வாறாயினும் மீண்டும் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் பதவிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.