கனடாவில் யார் ஆட்சி?

புதன் அக்டோபர் 23, 2019

கனடாவில் அடுத்த ஆட்சி அமைவதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியரான ஜக்மித் சிங் முக்கியப் பங்கு வகிப்பார் எனத் தெரிகிறது. அவரது கட்சியான புதிய ஜனநாயக கட்சி இந்தத் தேர்தலில் 24 இடங்களில் வென்றுள்ளது.

கனடாவில் பொதுத் தேர்தல் திங்கட்கிழமை நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களையும், கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பெரும்பான்மை பெற 170 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் அந்த இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் பிற இடங்களில் வென்ற சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் லிபரல் கட்சி ஈடுபட்டுள்ளது.

ஆட்சி அமைப்பதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியரான ஜக்மித் சிங் முக்கியப் பங்கு வகிப்பார் எனத் தெரிகிறது. அவரது கட்சியான புதிய ஜனநாயக கட்சி இந்தத் தேர்தலில் 24 இடங்களில் வென்றுள்ளது.

கனடாவில் ஏராளமான பஞ்சாபியர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சார்பில் பலர் எம்.பி.க்களாகவும், சிலர் அமைச்சர்களாகவும் உள்ளனர். இந்தத் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி 24 இடங்களில் வென்றுள்ளதால் கனடாவில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.

இதனால் ஜக்மித் சிங்குடன் லிபரல் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேசமயம் கன்சர்வேடிவ் கட்சியினரும் ஜக்மித் சிங்கைத் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அவர் லிபரல் கட்சிக்கு ஆதரவு அளிப்பார் எனவும், அதன் மூலம் ட்ரூடோ மீண்டும் பிரதமர் ஆவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.